2022 ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளில், முதல் 4 இடங்களை பெண் தேர்வர்கள் பிடித்து அசத்தியுள்ளனர்.
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. உலகின் மிக கடினமான தேர்வுகளில் ஒன்றான சிவில் சர்வீசஸ் தேர்வை, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் எழுதி வருகின்றனர். இந்த தேர்வு முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு உள்ளிட்ட மூன்று படிநிலைகளைக் கொண்டது.
இதையும் படியுங்கள்: புதுவை அரசு பணியிடங்களை நிரப்ப துணை பணியாளர் தேர்வு வாரியம்; பூர்வாங்க பணிகள் தொடக்கம்
இந்தநிலையில் 2022 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீசஸ் தேர்வு யு.பி.எஸ்.சி செவ்வாய்கிழமை (மே 23) முடிவுகளை வெளியிட்டது. இதில் முதல் 4 இடங்களை பெண் தேர்வர்களே பிடித்துள்ளனர். அகில இந்திய அளவில் இஷிதா கிஷோர் முதலிடம் பிடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, கரிமா லோஹியா, உமா ஹரதி மற்றும் ஸ்மிருதி மிஸ்ரா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் முதல் 10 இடங்களில் 6 பெண் தேர்வர்கள் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டிற்கான UPSC CSE முதல்நிலைத் தேர்வு ஜூன் 5, 2022 அன்று நடத்தப்பட்டது, அதன் முடிவுகள் ஜூன் 22 அன்று வெளியிடப்பட்டன. முதன்மைத் தேர்வு செப்டம்பர் 16 முதல் 25 வரை நடத்தப்பட்டு, டிசம்பர் 6 அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. நேர்காணல் தேர்வு மே 18 அன்று முடிவடைந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil