யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) செவ்வாயன்று இந்திய சிவில் சர்வீசஸ் பணிகளுக்கு அதிக எண்ணிக்கையிலான பெண்கள் தேர்வு செய்யப்பட்டதாக சரித்திரம் படைத்தது.
நியமனத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட 933 தேர்வர்களில் மூன்றில் ஒரு பங்கினர் (320) பெண்கள். இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வர்களில் பெண்கள் வெறும் 20% மட்டுமே என்பதைக் கருத்தில் கொள்ளும்போது இது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: யு.பி.எஸ்.சி தேர்வு: தமிழகத்தை சேர்ந்த 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் வாரிசுகள் சாதனை
மேலும், இந்த ஆண்டு முதல் நான்கு இடங்களை பெண்களே பெற்றுள்ளனர். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பெண்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.
இஷிதா கிஷோர், டெல்லி பல்கலைக்கழகத்தில் (DU) படித்த கௌதம் புத்த நகரைச் சேர்ந்த பட்டதாரி, அரசியல் அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகளை தனது விருப்பப் பாடங்களாகக் கொண்டு தனது மூன்றாவது முயற்சியில் தேர்வில் முதலிடம் பெற்றார். அவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரியில் பொருளாதாரம் (ஹானர்ஸ்) பட்டம் பெற்றவர்.
அகில இந்திய அளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்த பீகாரில் உள்ள பக்ஸரைச் சேர்ந்த கரிமா லோஹியா, கிரோரிமால் கல்லூரியில் வணிகவியல் பட்டம் பெற்ற டெல்லி பல்கலைக்கழக பட்டதாரி. ஐ.ஐ.டி ஹைதராபாத்தில் பி.டெக் பட்டம் பெற்ற தெலுங்கானாவைச் சேர்ந்த உமா ஹரதி மூன்றாவது இடத்தைப் பிடித்தார். டெல்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா ஹவுஸ் கல்லூரியில் பி.எஸ்.சி பட்டதாரியான ஸ்மிருதி மிஸ்ரா நான்காவது ரேங்க் பெற்றார்.

பாரம்பரியமாக ஒரு ஆண்களின் கோட்டையாக கருதப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வுகள் கடந்த இரண்டு தசாப்தங்களாக பெண்களின் பிரதிநிதித்துவத்தில் படிப்படியான அதிகரிப்பைக் கண்டுள்ளன. 2006 வரை, UPSCயால் தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த விண்ணப்பதாரர்களில் அவர்களின் பங்கு 20% ஆக இருந்தது. இது 2020 இல் 29% ஐத் தொட்டது, இந்த ஆண்டு 34% என்ற இதுவரையிலான அதிக உயர்வையும் எட்டியது. 1980 களின் பிற்பகுதியிலும் 1990 களின் முற்பகுதியிலும், இது 20% க்கும் குறைவாக இருந்தது.
ஆனால் இந்த ஆண்டு அவற்றின் முழுமையான எண்ணிக்கை மற்றும் மொத்த எண்ணிக்கையில் பங்கு ஆகியவற்றின் எழுச்சி இன்றுவரை மிகவும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும்.
கடந்த ஆண்டு, 685 பேர் நியமனத்திற்கு பரிந்துரைக்கப்பட்டனர், அதில் 508 ஆண்கள் மற்றும் 177 பெண்கள். இந்த ஆண்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட 933 பேரில் சுமார் 320 பேர் பெண்கள். கடந்த ஆண்டை விட பெண்களின் பிரதிநிதித்துவம் கிட்டத்தட்ட 9 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டு முடிவுகளுடன் ஒப்பிடத்தக்க எண்ணிக்கையான 2019 இல், மொத்தம் 922 விண்ணப்பதாரர்கள், நியமனத்திற்கு பரிந்துரைக்கப்பட்டனர். அப்போதும் கூட, மொத்த எண்ணிக்கையில் 24% பெண்கள், இந்த ஆண்டு அது 34% ஆக இருந்தது.

இந்திய விமானப்படை (IAF) குடும்பத்தில் வளர்ந்த இஷிதா கிஷோர், இந்த ஆண்டு முதலிடம் பிடித்தார், சிறு வயதிலிருந்தே தனது குடும்பம் கடமை மற்றும் சேவை உணர்வைத் தூண்டியது என்று கூறினார். அவர் இந்திய நிர்வாக சேவையில் (IAS) சேர விரும்புகிறார் மற்றும் உத்தரபிரதேச கேடரை தனது விருப்பமாக குறிப்பிட்டுள்ளார்.
கிஷோரின் தாயார் ஓய்வு பெற்ற ஆசிரியர், அவரது தந்தை IAF அதிகாரி மற்றும் அவரது சகோதரர் ஒரு வழக்கறிஞர். சிவில் சேவைகளைத் தொடர எனது ஒரே உந்துதலாக இருந்தது, அது மாற்றத்தை ஏற்படுத்தவும் மக்களுக்கு உதவவும் தரும் தளமாகும், என்று தனது மூன்றாவது முயற்சியில் முதற்கட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்ற இஷிதா கிஷோர் கூறினார்.
“எனது தோல்வியுற்ற முயற்சிகளுக்குப் பிறகு, நான் ஏன் முதலில் தொடங்கினேன் என்பதை எனக்கு நினைவூட்டினேன். நான் எனது நாட்டிற்கு சேவை செய்ய விரும்பினேன், எனது குறைந்த மதிப்பெண்களின் போது எனது குடும்பம் பெரும் பக்க பலமாக நின்றது. எனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து என் மீது தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தினர் மற்றும் தொடர்ந்து செல்ல என்னை ஊக்குவித்தனர்,” என்று இஷிதா கிஷோர் கூறினார்.
இரண்டாம் தரவரிசையில் உள்ள கரிமா லோஹியாவிற்கு, டெல்லி பல்கலைக்கழகத்தின் கிரோரி மால் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு முதல் கோவிட்-19 அலையின் போது, பீகாரின் பக்ஸரில் உள்ள வீட்டிற்கு திரும்பியது ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அவர் தனது “முதல் விருப்பமான” பட்டயக் கணக்கியல் படிப்பில் தன் பார்வையை அமைத்திருந்தார். ஆனால் பெரும்பாலான பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டதால், “ஆன்லைன் படிப்புகள் மட்டுமே கிடைக்கும்” என்பதால், அதற்கு பதிலாக அவர் சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தயாராகத் தொடங்கினார்.
இந்த மார்ச் மாதம் நேர்காணலில் கலந்துக் கொண்ட கரிமா லோஹியா, தன்னால் முடியும் என்று ஒரு “உறுதிக்” கொண்டிருந்தார். “ஆனால் நான் நாட்டின் இரண்டாவது டாப்பராக இருப்பேன் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை… மேலும் நான்கு பெண்கள் முதல் நான்கு இடங்களில் வருவது கூடுதல் சிறப்பு” என்று அவர் கூறினார்.
மூன்றாவதாக வந்த உமா ஹரதி என், தெலுங்கானா காவல்துறையில் இருக்கும் தனது தந்தையால் சிவில் சர்வீசஸில் சேர வேண்டும் என்ற ஆர்வம் தூண்டப்பட்டது என்று கூறினார்.
“சிறுவயதிலிருந்தே, சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்குத் தயாராகும்படி என் தந்தை என்னைத் தூண்டினார். எங்கள் நகரம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில், மாணவர்கள் பொதுவாக 12 ஆம் வகுப்புக்குப் பிறகு மருத்துவம் அல்லது பொறியியல் படிப்பைத் தொடர வழிகாட்டப்படுகிறார்கள். எனது நண்பர்கள் மற்றும் சகாக்களின் தாக்கத்தால், நான் பொறியியல் நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகி, JEE-ஐ வெற்றிகரமாகத் தேர்ந்தெடுத்தேன். இருப்பினும், எனது பட்டப்படிப்பு ஆண்டுகளில், நிர்வாக சேவையில் சேரும் எனது கனவு ஒருபோதும் அசையவில்லை என்பதை உணர்ந்தேன். எனது நான்காவது ஆண்டில், சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு முழுநேரமாக தயாராவதற்கான முடிவை எடுத்தேன், மேலும் ஐ.ஐ.டி.,யில் இறுதி வேலை வாய்ப்புகளில் இருந்து விலகினேன்,” என்று உமா ஹரதி கூறினார்.
இருப்பினும், அவர் தனது முதல் நான்கு முயற்சிகளில் தோல்வியடைந்ததால் வெற்றி எளிதானது அல்ல. “யு.பி.எஸ்.சி தேர்வு கணிக்க முடியாதது, அதற்கு என் ஒரு வாழ்க்கை உதாரணம். எனது முதல் இரண்டு முயற்சிகளில் முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை என்றாலும், மூன்றாவது முயற்சியில் நேர்காணல் கட்டத்தை எட்ட முடிந்தது, முக்கிய பாடங்களில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தோல்வியடைந்தேன். நான்காவது முயற்சியில், முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி அடையவில்லை. எனது விருப்பப் பாடம் (புவியியல்) எனக்கு வசதியாக இல்லாததால், இந்தத் தோல்வி எனது தயாரிப்பில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இது எனக்கு சுயபரிசோதனைக்கு போதுமான நேரத்தை அளித்தது, மேலும் எனது ஐந்தாவது முயற்சியில் மானுடவியலை விருப்ப பாடமாக மாற்ற முடிவு செய்தேன், அது சரியான முடிவாக மாறியது, ”என்று உமா ஹரதி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil