மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் அதிமுக, திமுக தீவிரம் காட்டி வருகிறது.
மக்களவை தேர்தலுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம், 7 கட்டங்களாக இந்த தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால், வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவற்றை இறுதி செய்யும் பணியில், திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றது.
Election 2019 Live Updates : தேர்தல் 2019 ஒரு அலசல்
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என நேற்று மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதே போல், அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்களிடம் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்றும் இன்றும் நேர்காணல் நடைபெற்று வருகிறது.
12:30 : மதுரை சித்திரை திருவிழாவுக்காக தேர்தல் தள்ளிவைப்பா?
மதுரையில் ஏப்ரல் 18-ம் தேதி சித்திரை திருவிழா நடைபெறுவதையொட்டி, மக்களவை தேர்தல் நடைபெறும் தேதியை ஏன் மாற்றக்கூடாது? என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியிருக்கிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் கேட்டு தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது.
முன்னதாக சித்திரை திருவிழாவுக்காக தேர்தல் தேதியை மாற்ற முடியாது என உயர் நீதிமன்றக் கிளையில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
11:30 AM : தமாகா கூட்டணி குறித்து ஜி.கே. வாசன் தகவல்
மக்களவை தேர்தலில் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் யாருடன் கூட்டணி வைக்கும் என்பது குறித்து ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் தமாகா-வின் நிலைப்பாட்டை அதிமுகவிடம் தெரிவித்துள்ளதாக ஜி.கே.வாசன் தெரிவித்திருக்கிறார்.
11:15 AM : அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் வெளிநடப்பு
மதுரை சித்திரை திருவிழாவின் போது தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர். ஆட்சியர் நடராஜன் 2வது நாளாக நடத்திய கூட்டத்தில் இருந்து அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு நடத்தினர்.
11:00 AM : உச்சநீதிமன்றத்தில் திமுக மனு
தமிழகத்தில் 18 தொகுதிகளோடு விடுபட்ட 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு.
11:00 AM : கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை
மக்களவை தேர்தலையொட்டி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியாகிறது. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயம் வந்தார். அவர் தலைமையில் கூட்டணி கட்சிகளுக்காக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
Read More: வாக்காளப் பெருமக்களே... உங்கள் தலைவர்களை தேர்ந்தெடுக்க உதவும் சில கூகுள் செயலிகள்!
10:30 AM : தனி சின்னம் கேட்க விசிக முடிவு
மக்களவை தேர்தலையொட்டி தனி சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை நாட விடுதலை சிறுத்தைகள் கட்சி முடிவு விசிக தரப்பில் மோதிரம் சின்னம் அல்லது வேறு சின்னத்தை வழங்குமாறு கோரப்படலாம் என தகவல்
10:00 AM : திமுக தொகுதி ஒதுக்கீடு
திமுக தலைமையில் இன்று தொகுதி ஒதுக்கீடு பட்டியல் வெளியாக உள்ளது. திமுகவில் யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு எந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்ற முடிவு இன்று வெளியாக உள்ளது