Santanu Chowdhury , Liz Mathew
Assembly elections 2021: பாஜக ஞாயிற்றுக்கிழமை அன்று மேற்கு வங்கத்தின் மூன்றாம் கட்ட மற்றும் நான்காம் கட்ட தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் சிலர் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து கட்சி மாறியிருக்கும் சிலருக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி அன்று நடைபெறும் 31 தொகுதிகளுக்கு நடைபெற இருக்கும் தேர்தலில் 27 தொகுதிகளில் பாஜக போட்டியிட உள்ளது. நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 10ம் தேதி அன்று நடைபெற உள்ளது. 44 தொகுதிகளுக்கான தேர்தலில் 36 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதே போன்று கேரளாவில் 112 வேட்பாளர்களையும், தமிழகம் மற்றும் அசாமில் தலா 17 இடங்களிலும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வப்பன் தாஸ்குப்தா, முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அசோக் லாஹிரி ஆகியோர் தற்போது அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இருவரும் முறையே தாரகேஸ்வர் மற்றும் அலுபுர்தௌர்ஸ் தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
கேரளாவில் முன்னாள் டெல்லி மெட்ரோ தலைவர் இ. ஸ்ரீதரனுக்கு வாய்ப்பினை வழங்கியுள்ளது. முன்னாள் கேரள டிஜிபி ஜேக்கப் தாமஸ், மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நடிகருமான சுரேஷ் கோபி, கேரள பாஜக தலைவர் சுரேந்திரன், முன்னாள் ஆளுநர் கும்மனம் ராஜசேகரன், முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினரான அல்போன்ஸ் கண்ணந்தனம் ஆகியோருக்கு கேரளாவில் போட்டியிட வாய்ப்பினை வழங்கியுள்ளது பாஜக.
மேலும் படிக்க : மே.வங்கத்தில் பாஜக அடித்தளம் அமைக்க உதவும் முக்கிய ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள்
தாஸ்குப்தாவுடன் மேலும் மூன்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கு வங்கத்தில் போட்டியிடுகின்றனர். ஆசன்சோல் எம்.பி. பாபுல் சுப்ரியோ திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அரூப் பிஸ்வாஸுக்கு எதிராக டோலிகஞ்ச் தொகுதியில் போட்டியிட உள்ளார்.
கூக்லி நாடாளுமன்ற உறுப்பினர் லாக்கெட் சாட்டர்ஜீ மற்றும் கூச் பெஹர் எம்.பி. நிதிஷ் ப்ரமனிக் ஆகியோர் சுன்ச்சுரா மற்றும் தின்ஹட்டா விதான் சபாவில் போட்டியிடுகின்றனர். பாஜக அறிவுசார் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ரந்திதெப் செங்குப்தா ஹவ்ரா தக்ஷினில் போட்டியிடுகிறார். திரிணாமுலில் இருந்து சமீபத்தில் பாஜகவிற்கு மாறிய முன்னாள் டி.எம்.சி. அமைச்சார் ரஜிப் பானர்ஜி தோம்ஜூர் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். திரிணாமுல் எம்.எல்.ஏ மற்றும் நில அபகரிப்புக்கு எதிரான போராட்டத்தில் அக்கட்சியின் முகமாக இருந்த ரபீந்திரநாத் பட்டாச்சார்யா பாஜகவில் இருந்து போட்டியிடுகிறார். திரிணாமுல் காங்கிரஸில் இவருக்கு இம்முறை போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்பதால் அவர் கடந்த வாரம் பாஜகவிற்கு செல்கிறார்.
பாஜகவிற்கு மாறிய டி.எம்.சி. எம்.எல்.ஏக்கள் ப்ரபிர் கோஷல் மற்றும் தீபக் ஹால்தர் ஆகியோர் உத்தர்பாரா மற்றும் டைமண்ட் ஹார்பரில் போட்டியிடுகின்றனர். பிரபலமான வங்க நடிகர்கள் யாஷ் தாஸ்குப்தா (சந்திதாலா), பயெல் சர்கார் (பெஹலா புர்பா) மற்றும் தனுஸ்ரீ சக்கரவர்த்தி (ஷ்யாம்கபூர்) ஆகியோருக்கு வாய்ப்பினை வழங்கியுள்ளது. தொலைக்காட்சி நடிகை அஞ்சனா பாசு சொனார்ப்பூர் தக்ஷினில் போட்டியிடுகிறார்.
படித்த வங்க மக்களின் வாக்குகளை பெறுவதை இலக்காக கொண்டு ஸ்வப்பன் தாஸ்குப்தா மற்றும் அசோக் லாஹிரி ஆகியோரை பாஜக களம் இறக்கியுள்ளது. 2019ம் ஆண்டு தேர்தலில் பாஜக சிறப்பாக வெற்றியை உறுதி செய்திருந்தாலும் கூட கொல்கத்தாவில் அவர்களால் படித்த, உயர்சாதி இந்துக்களின் வாக்குகளை பெற இயலவில்லை. அப்போதையை பாஜக தலைவர் அமித் ஷாவின் வருகையின் போது ஈஸ்வர் சந்திர வித்தியாசகர் நிலையத்தில் நடைபெற்ற வன்முறையால் அதிர்ச்சி அடைந்தனர் அவர்கள்.
”வெளியில் இருந்து வந்தவர்கள்” என்று பாஜகவை திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சுமத்துவதற்கு தக்க பதிலடி தரும் வகையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக பாஜக தலைவர்கள் கூறுகின்றனர்.
மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பாஜக இந்த தேர்தலில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. நாங்கள் அரசாங்கத்தை அமைத்தவுடன் மாநிலத்தை நிர்வகிக்க அனுபவமும் நிபுணத்துவமும் உள்ளவர்கள் இருப்பதை வாக்காளர்களிடம் கூற விரும்புகிறோம், ”என்று பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
பாஜகவிடம் போதுமான வேட்பாளர்கள் இல்லை என்பதால் தான் தற்போது இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை இங்கே களம் இறக்கியுள்ளது என்பதை வேட்பாளர்கள் பட்டியல் உறுதி செய்கிறது. முன்னாள் டி.எம்.சி. தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுக்கும் வாய்ப்பினை கொடுத்திருப்பது இதனையே உறுதி செய்கிறது. பாஜக வேட்பாளர்களை கண்டுபிடிக்க போராடுகிறது என்று டி.எம்.சி. செய்தி தொடர்பாளர் மற்றும் எம்.பியுமான பேராசிரியர் சௌகதா ராய் கூறியுள்ளார்.
வேட்பாளர்கள் பட்டியல் வெளியான பிறகு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்த பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது. முன்னாள் மேற்கு வங்க அமைச்சர் மற்றும் கொல்கத்தாவின் மேயருமான சோவன் சாட்டர்ஜீ மற்றும் அவருடைய நெருங்கிய நண்பர் பைஷாகி பானர்ஜி ஆகியோருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. பெஹலா புர்பா தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் கட்சியில் இனி நீடிக்க விரும்பவில்லை என்று பாஜக மாநில தலைவர் திலிப் கோஷிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதே போன்று பானர்ஜி தன்னுடைய முகநூல் பக்கத்தில் அவமானப்படுத்தப்பட்டதாகவும், சதியும், துரோகமும் வெகுதூரம் செல்லாது என்று பதிவிட்டிருந்தார்.
பாஜகவின் அலிப்பூர் மாவட்ட தலைவர் கங்கா பிரசாத் ஷர்மா, அசோக் லாஹிரி மற்றும் பிஷால் லாமா (கல்சினி) ஆகியோருக்கு வாய்ப்புகள் வழங்குவது குறித்து தன்னிடம் தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். அதே போன்று கட்சியின் கூக்லி மாவட்ட தலைவர் சுபிர் நாக், லாக்கெட் சாட்டர்ஜீக்கு வாய்ப்பு கொடுத்தது வருத்தம் அளிக்கிறது என்றும் தான் ஏமாற்றப்பட்டுவிட்டதாகவும் கூறினார். மேலும் அரசியலில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.