பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் இடம் பெறப் போகும் அமைச்சர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு பலமாக நிலவி வரும் நிலையில், இன்று இரவு 7 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். அவருடன் சேர்ந்து கேபினட் அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.
மேலும் படிக்க - Modi Swearing-in Ceremony 2019 Live: மோடி பதவியேற்பு விழா லைவ் அப்டேட்ஸ்
இந்நிலையில், புதிய அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்கள் பட்டியல்
1. பிரதமர் நரேந்திர மோடி
பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார் நரேந்திர மோடி. வாரணாசி தொகுதியில் காங்கிரஸின் அஜய் ராயை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர். பிரதம அமைச்சர், அணுசக்தித்துறை, விண்வெளித்துறை, மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்பு.
2. ராஜ்நாத் சிங்
உள்த்துறை அமைச்சராக கடந்த ஐந்தாண்டுகளில் பதவி வகித்தவர் ராஜ்நாத் சிங் ஆவார். உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் முன்னாள் முதல்வராக பதவி வகித்தவர். அங்கு இருக்கும் 80 மக்களவைத் தொகுதியில் ஒன்று தான் லக்னோ. இங்கு போட்டியிட்டு கடந்த முறை மக்களால் தேர்வு செய்யப்பட்டு நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டார்.
பாஜகவின் தேசிய செயலாளராக பதவி வகித்த இவர் கோரக்பூர் பல்கலைக் கழகத்தில் பயின்றவர். இம்முறையும் லக்னோவில் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சி சார்பில் இவரை எதிர்த்து ஆச்சரியா ப்ரமோத் கிருஷ்ணம் போட்டியிட்டார். பகுஜன் சமாஜ் + சமாஜ்வாடி கூட்டணி சார்பில் இவரை எதிர்த்து பூனம் சின்ஹா போட்டியிட்டார். 6,33,206 வாக்குகள் பெற்று மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகி உள்ளார்.
தற்போது வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பு : பாதுகாப்புத்துறை
3. அமித் ஷா
மாநிலங்கள் அவையின் உறுப்பினராக இருந்தவர், எல்.கே. அத்வானியின் தொகுதியான குஜராத் காந்தி நகர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.
தற்போது வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பு : உள்த்துறை
4. நிதின் கட்கரி
மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக கடந்த ஆட்சியில் பணியாற்றி வந்தவர். 2014ம் ஆண்டு மகாராஷ்ட்ராவில் இருக்கும் நாக்பூர் தொகுதியில் முதன்முறையாக போட்டியிட்டு அதில் வெற்றியும் கண்டவர். இம்முறையும் அதே தொகுதியில் போட்டியிட்டு 6,60,221 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் இருந்தே பாஜகவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்.
தற்போது வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பு : மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து துறை
5. சதானந்த கவுடா
புள்ளி விபரம் மற்றும் திட்ட அமலாக்கத்துறையின் அமைச்சராகவும், ரசாயனப் பொருட்கள் மற்றும் உரங்கள் துறையின் அமைச்சராகவும் அவர் பதவி வகித்து வந்தார். பெங்களூரு வடக்கு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் இவர்.
தற்போது வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பு : ரசாயனம் மற்றும் உரம்
6. நிர்மலா சீதாராமன்
இந்திரா காந்திக்குப் பிறகு நாட்டின் பெண் ராணுவ அமைச்சர் என்ற பெருமையப் பெற்றவர் நிர்மலா சீதாராமன் ஆவார். கடந்த முறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவர், மனோகர் பரிக்கர் கோவாவின் முதல்வராக பொறுப்பேற்ற பின்பு 2017ல் ராணுவ அமைச்சராக பதவி ஏற்றார்.
பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளராக ஆரம்பத்தில் பணியாற்றி வந்தவர். ஆந்திராவின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அவர் நிதி அமைச்சரவையின் கீழே வரும் ஃபினான்ஸ் மற்றும் கார்ப்பரேட் அஃபெர்ஸ் அமைச்சராக பதவி வகித்து வந்தவர். 2017ம் ஆண்டு கர்நாடகாவின் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்.
தற்போது வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பு : நிதி அமைச்சர்
7. ராம்விலாஸ் பஸ்வான்
லோக் ஜனசக்தி கட்சியின் தலைவராவார். இவர் இம்முறை எந்த தொகுதியிலும் போட்டியிடவில்லை என்றாலும், இவருடைய மகன் சிராக் பஸ்வான் ஜமுய் தொகுதியில் (பிகார்) வெற்றி பெற்று மக்களவை செல்கிறார். தந்தை மாநிலங்களவை உறுப்பினராக தொடர்வதோடு தற்போது அமைச்சராகவும் பொறுப்பேற்றிருக்கிறார். கடந்த ஆட்சியில் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.
தற்போது வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பு : நுகர்வோர், உணவு மற்றும் பொதுவிநியோகம்
8. நரேந்திரசிங் தோமர்
ஊரக மேம்பாடு, பஞ்சாயத்ராஜ், சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களின் அமைச்சராக பதவி வகித்து வந்தவர் நரேந்திர சிங் தோமர். கடந்த முறை குவாலியரில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். இம்முறை தன்னுடைய சொந்த ஊர் அமைந்திருக்கும் மொரேனா, மத்தியப் பிரதேசத்தில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
தற்போது வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பு : வேளாண் மற்றும் விவசாயிகள் நலவாழ்வுத்துறை
9. ரவிசங்கர் பிரசாத்
சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையின் அமைச்சராக பதவி வகித்து வந்தார். பிகார் மாநிலத்தில் உள்ள பாட்னா சாஹிப் என்ற தொகுதியில் இவர் இம்முறை தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதால், தன்னுடைய ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் அவர்.
தற்போது வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பு : சட்டம், தகவல் தொடர்பு துறை
10. ஹர்சிம்ரத் பாதல் (அகாலி தளம்)
உணவு பதனிடும் தொழிற்துறை அமைச்சராக இவர் பொறுப்பேற்றிருந்தார். சிரோமணி அகாலி தளம் கட்சியில் இருந்து தெற்கு பஞ்சாப்பில் அமைந்திருக்கும் பதிண்டா தொகுதியில் அம்ரிந்தர் சிங் ராஜா என்ற காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்தும், ஆம் ஆத்மியின் பால்ஜிந்தர் கவுர் என்ற வேட்பாளரையும் எதிர்த்து வெற்றி பெற்றுள்ளார்.
தற்போது வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பு : உணவுப்பதப்படுத்துதல் துறை
11. தாவர்சந்த் கெலோட்
சமூக நீதி மற்றும் மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சராக பணியாற்றி வந்தார். மத்தியப் பிரதேசத்தின் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்.
தற்போது வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பு : சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல்
12. ஜெய்சங்கர்
தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்ட எஸ். ஜெய்சங்கர் முன்னாள் வெளியுறவு பாதுகாப்புத்துறை செயலாளராக பதவி வகித்தவர். திருச்சியில் பிறந்த இவர் சென்னையில் கல்லூரி படிப்பினை முடித்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பு : வெளியுறவுத்துறை அமைச்சர்
13. ரமேஷ் பொக்ரியால்
உத்திரகாண்ட் மாநிலத்தின் முதல்வராக பணியாற்றியவர் இவர். 2014ம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஹரித்துவார் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அன்றைய உத்திரகாண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத்தின் மனைவி ரேணுகா போட்டியிட்டார். 1.7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் பொக்ரியால். இம்முறையும் ஹரித்துவார் தொகுதியில் போட்டியிட்ட அவர் காங்கிரஸ் கட்சியின் அம்ப்ரிஷ்குமாரை 2.59 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடையச் செய்தார்.
இம்முறை வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பு : மனிதவள மேம்பாட்டுத்துறை
14. அர்ஜூன் முன்டா
ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வராக பதவி வகித்தவர் இவர். முன்பு பழங்குடி மக்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர்.
தற்போது வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பு : பழங்குடியினர் நலத்துறை
15. ஸ்மிரிதி இரானி
காங்கிரஸ் கட்சியின் குடும்பத் தொகுதியான அமேதியில் கடந்த முறை ராகுல் காந்திக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியை சந்தித்தவர். ஆனால் இம்முறை மீண்டும் அதே தொகுதியில் நின்று வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக நாடாளுமன்றம் செல்கின்றார்.
தற்போது வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பு : பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுத்துறை மற்றும் ஜவுளித்துறை
16. ஹர்ஷவர்தன்
டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் முக்கியமான ஒன்று சாந்தினி சௌக் ஆகும். 2014ம் ஆண்டு பாஜக சார்பில் இங்கு போட்டியிட்டவர் ஹர்ஷ வர்தன். இம்முறை காங்கிரஸ் கட்சியின் ஜெய் ப்ரகாஷ் அகர்வால் மற்றும் ஆம் ஆத்மியின் பங்கஜ் குமார் குப்தா இருவரையும் எதிர்த்து போட்டியிட்டு 5 லட்சத்து 19 ஆயிரத்து 55 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் இவர்.
தற்போது வழங்கப்பட்ட பதவிகள் : ஆரோக்கியம் மற்றும் குடும்ப நலம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புவியியல்
17. பிரகாஷ் ஜவடேகர்
மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். மகாராஷ்ட்ரா மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட்டார். மக்களவைத் தேர்தல்களை சந்திக்காமல் பதவி ஏற்றுக் கொண்ட மத்திய அமைச்சர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பு : (I&B) தொலைத்தொடர்பு மற்றும் ஒலிபரப்புத் துறை
18. பியூஷ் கோயல்
இந்த ஆண்டு பாஜக அரசு வெளியிட்ட இடைக்கால பட்ஜெட்டை தாக்கலின் மூலம் மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றவர் பியூஷ் கோயல். இந்தியாவின் நிலக்கரி மற்றும் ரயில்வே துறை அமைச்சராக 2017ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறார். பாரதிய ஜனதா கட்சியின் பொருளாளராக பதவி வகித்த இவர் கடந்த முறை மகாராஷ்ட்ராவில் இருந்து மாநிலங்கள் அவைக்கு தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் மத்திய அமைச்சர் வேத் ப்ரகாஷ் கோயலின் மகனான இவருக்கு நிதி அமைச்சர் பொறுப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பாக்கப்படுகிறது. ஏற்கனவே ரயில்வே, நிதி, எரிசக்தி, நிலக்கரி போன்ற துறைகளின் அமைச்சராகவும் இவர் பதவி வகித்திருக்கிறார்.
தற்போது வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பு : வர்த்தகம் மற்றும் ரயில்வே துறை
19. தர்மேந்திர பிரதான்
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு துறையின் அமைச்சராக கடந்த 5 ஆண்டுகள் பதவி வகித்தார். பிகாரின் மாநிலங்களவை உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட்டார். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அவருக்கு புதிய பொறுப்புகள் அன்று வழங்கப்பட்டது.
இம்முறை வழங்கப்பட்ட பதவி : பெட்ரோலியம், இயற்கை வாயு மற்றும் எஃகு துறை
20. முக்தார் அப்பாஸ் நக்வி
மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சராக ஐந்தாண்டுகள் பதவி வகித்தவர் முக்தர் அப்பாஸ் நக்வி ஆவார். ஜூலை 8, 2016ம் ஆண்டு முதல் ஜார்கண்ட்டின் ராஜ்யசபா உறுப்பினராக பதவி வகித்து வருகின்றார்.
இம்முறை வழங்கப்பட்ட தொகுதி : சிறுபான்மை மக்கள் நலத்துறை
21. பிரகலாத் ஜோஷி
கர்நாடகாவின் தர்வாத் தொகுதியின் எம்.பி. இவர் ஆவார். தொடர்ந்து நான்கு முறை இந்த தொகுதியின் எம்.பியாக பதவி ஏற்ற இவருக்கு தற்போது அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
தற்போது வழங்கப்பட்ட துறை: நாடாளுமன்ற விவகாரம், சுரங்கம் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சகம்
22. மகேந்திரநாத் பாண்டே
உத்திரப்பிரதேசத்தின் சந்தௌலி தொகுதியின் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர். நடந்து முடிந்த தேர்தலில் இவர் 5,10,733 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தொழில் முனைவோர் துறை அமைச்சரவை இவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
23. அரவிந்த் சாவந்த்
மும்பை தெற்கு தொகுதியில் சிவசேனா சார்பில் போட்டியிட்டவர். காங்கிரஸ் கட்சியின் மிலிந்த் தியோராவை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுறச் செய்தவர்.
தற்போது வழங்கப்பட்டிருக்கும் துறை : கனரக தொழில்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் அமைச்சரவை (Minister of Heavy Industries and Public Enterprise)
24. கிரிராஜ் சிங்
பிகார் மாநிலத்தில் உள்ள பெகுசராய் தொகுதியில் போட்டியிட்டு 4,22,217 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாவர் இவர். இவரை எதிர்த்து இந்த தொகுதியில் போட்டியிட்டவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கன்ஹையா குமார் ஆவார். சி.பி.ஐ சார்பில் அவர் போட்டியிட்டார். குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் அமைச்சராக அவர் கடந்த முறை பணி புரிந்து வந்தார்.
தற்போது வழங்கப்பட்டிருக்கும் துறை : கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளர்ப்பு துறை
25. கஜேந்திரசிங் ஜெகாவத்
கடந்த முறை விவசாயிகள் மற்றும் வேளாண்மை நலத்துறை அமைச்சராக பதவி பொறுப்பேற்றவர் இவர்.ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ஜோத்பூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் இவர். இவருக்கு எதிராக இம்முறை, ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாத்தின் மகன் வைபவ் கெலாத் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
தற்போது கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்பு : நீர்வளத்துறை அமைச்சகம்
இணை அமைச்சர்கள் பட்டியல் : தனிப்பொறுப்பு
26. சந்தோஷ்குமார் கங்வால்
உத்திரப்பிரதேசத்தில் இருக்கும் பேரெய்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சந்தோஷ் குமார் கங்வர். 5,65,270 வாக்குகள் பெற்று இந்த தொகுதியில் இவர் வெற்றி பெற்றுள்ளார். கடந்த முறை தேர்தலிலும் இவர் இதே தொகுதியில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது வழங்கப்பட்டுள்ள துறை : தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சரவை
27. ராவ் இந்திரஜித் சிங்
ஹரியானா மாநிலம், குருகிராம் (கூர்கான்) தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் இவர் ஆவார். 2009ம் ஆண்டு முதல் இவர் இந்த தொகுதியின் எம்.பியாக உள்ளார் (அன்று காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார்) . 2014ம் ஆண்டு பாஜகவில் இருந்து போட்டியிட்ட இவருக்கு பாதுகாப்பு, உரம் மற்றும் ரசாயனத்துறையின் இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. மீண்டும் அதே தொகுதியில் 2019ம் ஆண்டு நின்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய் சிங் போட்டியிட்டார். 3, 86, 256 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் இவர்.
தற்போது வழங்கப்பட்டுள்ள துறை : புள்ளி விபரம் மற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
28. ஸ்ரீபத் யெஸ்ஸோ நாயக்
ஆயுர் வேதம், யோகக்கலை, இயற்கை வைத்தியம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறையின் அமைச்சராக பதவியேற்றிருந்தார். வடக்கு கோவாவில் போட்டியிட்ட இவர் காங்கிரஸ் கட்சியின் கிரிஷ் ராயா சோதன்கரை வீழ்த்தி வெற்றி பெற்றார். 2014 தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின் ரவி எஸ் நாயக்கை தோல்வியுற செய்தவ்ர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வழங்கப்பட்டுள்ள துறை : ஆயுர்வேத, யோகா, இயற்கை மருத்துவ, யுனானி, சித்த மற்றும்ஹோமியோபதி (AYUSH); மற்றும் மாநில பாதுகாப்பு துறை
29. ஜிதேந்திர சிங்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் உதம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மருத்துவர் ஜித்தேந்திர சிங். காங்கிரஸ் கட்சியின் விக்ரமாதித்ய சிங்கை தோல்வியுறச் செய்து மீண்டும் அமைச்சராகியுள்ளார்.
பிரதமர் அலுவலக விவகாரங்கள், அணுசக்தி, விண்வெளித்துறை இணை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறார். வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிகான தனிப்பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
30. கிரன் ரிஜிஜு
இவர் மத்திய உள்துறை இணை அமைச்சராக பதவி வகித்து வந்தார். அருணாச்சலம் மேற்கு தொகுதியின் மக்களவை உறுப்பினராக இவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இளைஞர்கள் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை (தனிப்பொறுப்பு) மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை இணை அமைச்சராக தற்போது பதவி வகிக்க உள்ளார்.
31. பிரகலாத் சிங் படேல்
மத்தியப்பிரதேசத்தில் அமைந்திருக்கும் தாமோ தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் தான் ப்ரஹலாத் சிங் படேல். 2014ம் ஆண்டு தேர்தலிலும் இதே தொகுதியில் நின்று வெற்றி பெற்றுள்ளார் இவர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரதாப் சிங் லோதியை 3,53,411 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
தற்போது வழங்கப்பட்டிருக்கும் பதவி : கலாச்சாரத்துறை (தனிப்பொறுப்பு) சுற்றுலாத்துறை (தனிப்பொறுப்பு) இணையமைச்சரவை
32. ராஜ்குமார் சிங்
பிகார் மாநிலத்தில் உள்ள அர்ராஹ் (Arrah) தொகுதியின் எம்.பி.யாக 2014 மற்றும் 2019 தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆர்.கே.சிங் என்று அழைக்கப்படும் ராஜ்குமார் சிங். இம்முறை தேர்தலில் சி.பி.ஐயின் ராஜு யாதவை எதிர்கொண்டார். 5,66,480 வாக்குகள் பெற்று இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
தற்போது கொடுக்கப்படுள்ள பொறுப்புகள் : மின்சாரத்துறை (தனிப்பொறுப்பு), எரிசக்தி துறை (தனிப்பொறுப்பு) இணை அமைச்சரவை மற்றும் தொழில் முனைவோர் துறையின் இணை அமைச்சர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
33. ஹர்தீப் சிங் பூரி
பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் தொகுதியில் நின்று போட்டியிட்டவர் ஹர்தீப் சிங் பூரி. காங்கிரஸ் கட்சியின் குஜ்ரீத் சிங் ஔஜ்லாவிடம் 99,626 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியவர் இவர். இருப்பினும் அமைச்சரவையில் இவருக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படுள்ளன.
தற்போது வழங்கப்பட்டுள்ள துறை : வீடுகள் மற்றும் நகர்புற விவகாரங்கள் (தனிப்பொறுப்பு). சிவில் விமானப்போக்குவரத்து (தனிப்பொறுப்பு). வர்த்தகம் மற்றும் தொழிற்துறை இணை அமைச்சரவை
34. மன்சூக் மண்டோலியா
குஜராத் மாநிலங்களவை உறுப்பினர் இவர். 2002 முதல் 2007 வரையான காலங்களில் பாலிடானா சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். நேற்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் சைக்கிளில் குடியரசுத்தலைவர் மாளிகைக்கு வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்.
தற்போது வழங்கப்பட்ட துறை
கப்பல் போக்குவரத்துத் துறையின் இணை அமைச்சரவை (தனிப்பொறுப்பு)
ரசாயனம் மற்றும் உரங்கள் துறையின் இணை அமைச்சர்
இணை அமைச்சர்கள்:
35. பஹன் சிங் குலஸ்தே
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ளது மந்தலா தொகுதி. 2014ம் ஆண்டு தேர்தலிலும் இவர் தான் வெற்றி பெற்றார். இம்முறை காங்கிரஸ் கட்சியின் கமல் மரவியை எதிர்த்து போட்டியிட்டு 7,37,266 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
தற்போது வழங்கப்பட்ட பொறுப்பு : எஃகுத்துறையின் இணை அமைச்சர்
36. அஸ்வினி குமார் சவுபே
2014 தேர்தலில் தெற்கு பிகாரில் அமைந்திருக்கும் புக்சார் தொகுதியில் வெற்றி பெற்ற இவர் சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் துறையின் அமைச்சராக பதவி ஏற்றார்.
தற்போது வழங்கப்பட்ட துறை : சுகாதார அமைச்சகம் மற்றும் குடும்ப நலன்
37. அர்ஜூன்ராம் மெக்வால்
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகனெர் தொகுதியின் எம்.பியாக மூன்றாவது முறை தேர்வானவர் அர்ஜூன் ராம் மெக்வால் ஆவார். நாடாளுமன்ற விவகாரம் மற்றும் கனரக தொழில்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அமைச்சரவையின் இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
38. வி.கே.சிங்
உத்திரப்பிரதேசம் காசியாபாத் தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சியின் டொல்லி ஷர்ம்மாவை தோல்வி அடைய செய்தவர் வி.கே.சிங். கடந்த முறை தேர்தலிலும் இவர் இந்த தொகுதியில் வெற்றி வாகை சூடியவர். 9,44,503 வாக்குகள் பெற்றார்.
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் இணை அமைச்சராக பதவி வகித்தவர் இவர். மீண்டும் அவருக்கு இதே பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
39. கிருஷ்ணன் பால் குர்ஜார்
ஹரியானா மாநிலத்தில் உள்ல ஃபரிதாபாத் தொகுதியில் போட்டியிட்டு இரண்டாம் முறையாக வெற்றி பெற்றவர் கிருஷ்ணன் பால் குர்ஜார். சமூகநீதிதுறையின் அமைச்சராக முன்பு அவருக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் அவ்தார் சிங் பதானாவை விட 6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது வழங்கப்பட்ட துறை : சமூக நீதித்துறை
40. கிஷன் ரெட்டி
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்தராபாத் தொகுதியில் போட்டியிட்டவர் இவர். தெலுங்கானாவில் 4 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. அதில் இதுவும் ஒன்று. தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் வேட்பாளர் தலசானி சாய் கிரண் யாதவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். இவர் இம்முறை தேர்தலில் பெற்ற வாக்குகள் 3,84,780 ஆகும்.
உள்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
41. புருஷோத்தம் ரூபாலா
குஜராத் மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். அம்ரேலி சட்டமன்ற உறுப்பினராக மூன்று முறை பொறுப்பு வகித்துள்ளார்.
விவசாயிகள் மற்றும் வேளாண்துறையின் இணை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
42. ராம்தாஸ் அத்வாலே
சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையின் இணை அமைச்சராக பதவி வகித்தவர் இவர். தலித் மக்களின் பிரதிநிதியாக பார்க்கப்படும் அத்வாலே நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆவார். ரிபப்ளிக்கன் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் தலைவர் ஆவார்.
சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையின் இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
43. சாத்வி நிரஞ்சன் சோதி - கிராமப்புற மேம்பாடு
44. சஞ்சீவ் பால்யன் - விலங்கு, பால் மற்றும் மீன் வளத்துறை
45. சஞ்சய் சாம்ராவ் தோத்ரே - மனித வள மேம்பாடு
46. அனுராக்சிங் தாகூர் - நிதித்துறை
47. அங்காடி சுரேஷ் சன்னபாசப்பா - ரயில்வே
48. நித்யானந்த் ராய் - வீட்டு அமைச்சகம்
49. ரத்தன்லால் கட்டாரியா - சமூக நீதி
50. முரளிதரன் – வெளியுறவுத்துறை
51. சோம் பர்காஷ் - வணிகம் மற்றும் தொழில் துறை
52. ராமேஷ்வர் டெலி - உணவு பதப்படுத்துதல்
53. பிரதாப் சந்திர சாங்கி - சிறு குறு தொழில்கள்
54. கைலாஷ் சவுத்ரி - விவசாயம் மற்றும் விவசாயிகள் நலம்
55. தீபஸ்ரீ சவுத்ரி - பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்
56. டான்வே ராசாஹேப் தாதாராவ் – நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகம்
57. ரேணுகா சிங் – பழங்குடியினர் நலம்
58. பாபுல் சுப்ரியோ – சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.