தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ட்விட்டரில் தனது பெயரை சவுகிதார் (மக்கள் பாதுகாவலர்) தமிழிசை சவுந்தரராஜன் என மாற்றியுள்ளார்.
எதிர்வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ‘நானும் தேசத்தின் காவலன்’ (Main Bhi Chowkidar) எனும் தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி துவக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து, ட்விட்டரில் தனது பெயரை ‘Chowkidar Narendra Modi’ எனப் பெயர் மாற்றம் செய்தார்.
முழுவதும் படிக்க - 'நானும் காவலாளி தான்'! டிரெண்டாகும் பிரதமர் மோடியின் புதுப்பெயர்!
இதையடுத்து, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, பியூஷ் கோயல், ஜே.பி. நட்டா, ஹர்ஷ்வர்த்தன், தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் தங்கள் பெயர்களுக்கு முன்னால் ‘சவுகிதார்’ என்ற பெயரைச் சேர்த்தனர்.
அதுபோல, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் ட்விட்டரில் தனது பெயரை 'சவுகிதார்' (மக்கள் பாதுகாவலர்) தமிழிசை சவுந்தரராஜன் என மாற்றியுள்ளார்.
முன்னதாக, கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய நரேந்திர மோடி, ‘நாட்டில் யாரும் ஊழல் செய்ய விடமாட்டேன், நானும் ஊழல் செய்யமாட்டேன். தேசத்தின் காவலாளியாக இருப்பேன்’ என்று பேசியிருந்தார்.
ஆனால், ரஃபேல் போர் ஒப்பந்த ஊழல் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசிய போது, ‘காவலாளி ஒரு திருடன்’ என்று மோடியை மறைமுகமாகக் குற்றம் சாட்டினார். ராகுல் காந்தியின் இந்த வார்த்தைக்குப் பதிலடி தரும் வகையிலேயே, பிரதமர் மோடி இந்த பிரச்சாரத்தை தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.