General Election 2019: எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக கூட்டணியில் இணைந்த பாமக 7+1 என்ற கணக்கில் சீட் பெற்றது. 'இனி எக்காலத்திலும் திராவிட கழகங்களுடன் கூட்டணி கிடையாது' என்று சொன்னதோடு மட்டுமில்லாமல், ஆளும் அதிமுக அரசை மிகக் கடுமையாக விமர்சிப்பதையே வாடிக்கையாகக் கொண்டிருந்த ராமதாஸ், தற்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருப்பது குறிப்பிடத்தக்குந்த அரசியல் திருப்பமாக பார்க்கப்படுகிறது. அதிலும், 1 மாநிலங்களவை சீட் பெற்றது ராமதாஸின் மெகா மூவ் என்கின்றனர்.
இந்த நிலையில், கடந்த 23ம் தேதி தனது தைலாபுரம் தோட்டத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோருக்கு தடபுடலாக விருந்து வைத்தார் ராமதாஸ்.
பொதுவாக, அரசியல் களத்தில் கட்சிகளை போன வாரம் விமர்சிப்பதும், இந்த வாரம் கூட்டணி வைப்பதும் சர்வ சாதாரணமான நிகழ்வு தான் என்றாலும், பாமக ஒருபடி மேலே சென்று திராவிட கழகங்களை மிகக் கடுமையாக விமர்சித்து வார்த்தைகளை விட்டது. ஆனால், அவற்றையெல்லாம், ஒரே தேர்தலில் நீர்த்துப் போகச் செய்யும்படி அதிமுகவில் இணைந்தது தான் பாமக தற்போது சந்திக்கும் அதிக எதிர்ப்புக்கு ஒரே காரணம்.
பாமக - அதிமுக - பாஜக கூட்டணியை நியாயப்படுத்த ராமதாஸும், அன்புமணியும் தற்போது அதிக சிரத்தை எடுத்து வருகிறார்கள். சமீபத்தில் நடந்த பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில், 'அதிமுகவுடன் கூட்டணி வைத்தது ஏன்?' என்று தீர்மானத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அதிமுகவுடன் கூட்டணி வைத்தது ஏன் என்பதை விளக்க, இன்று(பிப்.25) அன்புமணி ராமதாஸ் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்தினார். அதில், பல கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அன்புமணி திணறினார்.
இந்தச் சூழ்நிலையில், சேலத்தில் இன்று செய்தியாளர்களை முதல்வர் பழனிசாமி சந்தித்தார். அப்போது, பாமக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர், "கூட்டணி குறித்து தெளிவாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. பாமகவை பொறுத்தவரை, கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு" என்றார்.
மேலும், 'தேமுதிக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தவிர, பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முகிலனை மீட்கும் விவகாரத்தில், அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்தால் அரசு நடவடிக்கை எடுக்கும்' என்றார்.
இறுதியில் செய்தியாளர்கள் பார்த்து, 'கேள்விக் கேட்கும் போது, எங்களுக்கு சாதகமாகவும் கேள்விகளை எழுப்புங்கள்' என்று நகைச்சுவையாக தெரிவித்தார்.
மேலும் படிக்க - 'என் மைத்துனரை வைத்தே திமுக அரசியல் செய்யும் என கனவிலும் நினைக்கவில்லை' - அன்புமணி ராமதாஸ் வேதனை