Congress Chiefs Resignations : 7 கட்டங்களாக நடைபெற்ற இந்தியாவின் 17வது நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமையவில்லை. தோல்விகளுக்கு பொறுப்பேற்றுக் கொண்டு சில இடங்களில் காங்கிரஸ் தலைவர்கள் தங்களின் பொறுப்பினை ராஜினாமா செய்து வருகின்றார்கள்.
உத்திரப் பிரதேசம் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராஜ் பாப்பர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
ஃபட்டேபூர் சிக்ரி என்ற தொகுதியில் போட்டியிட்ட அவரை எதிர்த்து பாஜக சார்பில் ராஜ்குமார் சாஹர் களம் இறங்கினார். பாஜக வேட்பாளர் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது குறி்த்து இந்தியில் ட்வீட் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் நான் முறையாக என்னுடைய பதவியை ராஜினாமா செய்யவில்லை. தலைமைகளை சந்தித்து என்னுடைய விளக்கத்தினை நான் முறையாக தருவேன் என்று கூறினார். மேலும் மக்களின் நம்பிக்கைகளைப் பெற்ற வெற்றியாளர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
கர்நாடக காங்கிரஸ் பிரச்சாரக் குழுவின் தலைவர் எச்.கே. பாட்டில் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்திருக்கிறார்.
ஒடிசாவின் காங்கிரஸ் தலைவர் நிரஞ்சன் பட்நாயக் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நானும் இந்த தேர்தலில் போட்டியிட்டேன். எனக்கு கட்சி முக்கிய பொறுப்பினை கொடுத்தது. ஆனால் என்னுடைய இலக்கினை எட்ட இயலாததால் இந்த முடிவினை எட்டியுள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
அமேதி மாவட்டத்தின் காங்கிரஸ் பொறுப்பாளர் யோகேந்திர மிஸ்ராவும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.
மேலும் படிக்க : சபரிமலையில் சொதப்பிய இடதுசாரி! சரித்திர வெற்றியை உறுதி செய்த கேரள காங்கிரஸ்