சபாஷ் சரியான போட்டி… நேருக்கு நேர் களம் காணும் தமிழக அரசியல் தலைவர்கள்!

திமுக, அதிமுக, அமமுகவின் மும்முனைப் போட்டிகள் எங்கே அதிகம் ?

By: Updated: March 24, 2019, 09:23:41 AM

General Election 2019 Tamil Nadu Star Candidates List : முக்கிய கவனம் பெறும் சிறப்புத் தொகுதிகள் இவை தான். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் நிற்கும் தொகுதிகள் பற்றிய முழு விபரமும் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் களம் பரபரப்பாகவும் மும்பரமாகவும் இயங்கி வருகிறது.

தமிழகத்தில் தேர்தல் என்றாலே என்றுமே இருமுனை போட்டிதான். ஒன்று திமுக மற்றொன்று அதிமுக. தேசிய கட்சிகள் இவற்றின் கூட்டணியில் தான் இணையும். ஆனால் இம்முறையோ கமல் ஒரு பக்கம், அதிமுகவில் இருந்து உருவான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்று நான்கு பக்கமும் வெற்றி வாகையை யார் சூடிச் செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பினை மக்கள் மத்தியில் கிளப்பியுள்ளது இந்த தேர்தல். மக்கள் நீதி மய்யம் முதன்முறையாக தேர்தல் களம் காண்பதால் அவை இல்லாமல் திமுக, அதிமுக, அமமுகவின் மும்முனைப் போட்டிகள் எங்கே அதிகம் என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.

தேனி :

அதிமுகவின் கோட்டையாக செயல்பட்டு வந்தது தேனி. நாடாளுமன்றத் தேர்தல் என்றாலும் சரி சட்டமன்றத் தேர்தல் என்றாலும் சரி இங்கு ஜெ.விற்கும், ஓ.பன்னீர் செல்வத்திற்கும் இருக்கும் மரியாதை என்பதே தனி தான்.

ஓ.பி.எஸ் மீது இருக்கும் லைம் லைட் வெளிச்சத்திலேயே அதிமுக சார்பில் தேர்தலில் நிற்கிறார் அவருடைய மகன் ஆ.பி.ரவீந்திரக் குமார். அவருக்கு போட்டியால அமமுகவில் இருந்து நானே போட்டியிடுவேன் என்று அறிவித்திருந்த தினகரன், தங்கத் தமிழ்ச் செல்வனை களம் இறக்கியுள்ளார். திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் இங்கு போட்டியிடுகிறது. நட்சத்திரப் போட்டியாளராக இங்கு களம் இறக்கப்பட்டுள்ளார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

தூத்துக்குடி :

தூத்துக்குடி மீண்டும் சிறப்பு கவனம் பெறுவதற்கு காரணமாக அமைந்திருப்பது பாஜகவும்  திமுகவும் நேரடியாக போட்டியிடுகின்றது என்பது தான். திமுக சார்பில், ராஜ்யசபா உறுப்பினராக பணியாற்றும் கனிமொழி கருணாநிதி இங்கு போட்டியிடுகிறார். இவருக்கு போட்டியான பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குமரி ஆனந்தனுக்கு தூத்துக்குடியில் செல்வாக்கு அதிகம். இருப்பினும் அந்த செல்வாக்கு பாஜகவில் வந்து சேருமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும். ம. புவனேஸ்வரன் அமமுகவின் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக பணியாற்றி வருகிறார். இவரை வேட்பாளராக அறிவித்துள்ளது அமமுக.

கரூர்

மக்களவை துணை சபாநாயகர் தம்பி துரையை இங்கு அதிமுக களம் இறக்கியுள்ளது. 1989ம் ஆண்டில் இருந்து கிட்டத்தட்ட நான்கு முறை கரூர் மக்கள் இவரை நாடாளுமன்றம் அனுப்பியுள்ளனர்.

திமுகவும் அதிமுகவும் நேரடியாக சுமார் 6 முறை இந்த தொகுதியில் போட்டியுள்ளனர். அதில் ஒரே ஒரு முறை மட்டும் தான் திமுக வெற்றி பெற்றுள்ளது. திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு இத்தொகுதி வழங்கப்படும் என்று கருதப்பட்ட நிலையில், திமுக இந்த தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது. காங்கிரஸ் சார்பில் எழுத்தாளர் செல்வி. ஜோதிமணி இங்கு களம் காண்கிறார். அதிமுகவின் கோட்டையாக இருந்தாலும் ஜெ.வின் மறைவுக்கு பின்னால் மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை தேர்தல் முடிவுகளே நமக்கு அறிவிக்கும்.

கன்னியாகுமரி :

அதிமுக மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்து கொண்டபோதே இரண்டு தொகுதிகள் முக்கிய கவனம் பெற்றது. ஒன்று கன்னியாகுமரி மற்றொன்று சிவகங்கை. ஏன் என்றால் மத்தியில் சரியான சாவல்களையும் போட்டிகளையும் சந்தித்துவரும் பாஜக மற்றும் காங்கிரஸ் இந்த இரண்டு தொகுதிகளிலும் நேரடியாக போட்டியிடுகின்றனர். கன்னியாகுமரியில் தற்போது சிட்டிங் எம்.பியாக இருக்கும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாஜக சார்பில் மீண்டும் களம் இறங்குகிறார். அவருக்கு போட்டியாக காங்கிரஸ் எம்.வசந்த குமாரை களம் இறக்குகிறது. அதே போல் சிவகங்கையில் பாஜக சார்பில் எச்.ராஜா போட்டியிடுகிறார். அவருக்கு டஃப் தர வெயிட்டான வேட்பாளரை களம் இறக்க ஆலோசனையில் இறங்கியுள்ளது காங்கிரஸ்.

மேலும் படிக்க : கார்த்தி சிதம்பரத்திற்கு டிக்கெட்? சிவகங்கை வேட்பாளர் அறிவிப்பு தாமதம் பின்னணி

மத்திய சென்னை

இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் இப்பகுதியில் வெற்றி பெற அனைத்து கட்சிகளுமே மும்பரமாக செயல்படும். சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் இஸ்லாமியர்கள் இந்த தொகுதியில் வாக்களிப்பவர்களாக உள்ளனர்.

அமமுகவுடன் கூட்டணியில் இணைந்துள்ள சோசியலிஸ்ட் டெமாகிரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் தேசிய துணைத் தலைவர் தெஹ்லான் பாகவி இக்களத்தில் போட்டியிடுகிறார்.

நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடுகிறார்.

திமுக சார்பில் தயாநிதி மாறன் இங்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் இந்த தொகுதி மக்களால் 2 முறை நாடாளுமன்றம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Get all the Latest Tamil News and Election 2021 News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook

Web Title:General election 2019 tamil nadu star candidates list

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X