General Election 2019 TTV Dhinakaran Vs OPS's son : 2019 பொதுத்தேர்தலில் கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றாக தங்களின் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து வருகின்றனர். நேற்று மட்டும் காலையில் அமமுக துவங்கி, ஐ.ஜே.கே கட்சி, திமுக, அதிமுக, பாமக போன்ற கட்சிகள் முதற்கட்டம் மற்றும் முழுமையான வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளன.
நேரடியாக மோதுவார்களா டிடிவி தினகரனும் ஓ.பி.எஸ் மகனும் ?
அமமுக சார்பில் முதற்கட்ட வேட்பாளர்கள் 24 பேரை நேற்று அறிமுகம் செய்து வைத்தார். அதே போல் பாமகவும் தங்களின் 5 வேட்பாளர்களை முதலில் அறிவித்துள்ளது. அதிமுக நேற்று வெளியிட்ட அறிவிப்பில் 18 இடைத்தேர்தல் தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் அடங்குவார்கள்.
தேனியில் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் இன்னும் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. ஆனால் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ”நான் கூட தேனியில் போட்டியிடலாம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
டிடிவி தினகரனின் அரசியல் பிரவேசம் கூட தேனி மாவட்டத்தில் துவங்கியது தான். 1999ம் ஆண்டு பெரியகுளம் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக நின்று வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்றார்.
அவரின் பழைய தொகுதியாகவும், அதிர்ஷ்டம் மிக்க தொகுதியாகவும் அவர் நினைத்து வருவதை அவருடைய நேற்றை செய்தியாளர்கள் சந்திப்பு நினைவுப்படுத்துகிறது. ஜெயலலிதாவால் தேனியில் அறிமுகம் செய்யப்பட்டவர் டிடிவி தினகரன்.
அதே தொகுதியில் தற்போது, அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் போட்டியிடுவதால் கடுமையான போட்டி அமமுகவுக்கும் அதிமுகவுக்கும் மத்தியில் நிலவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமமுக சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டால் தான் அந்த போட்டி கடுமையானதா இல்லை மிகவும் கடுமையானதா என்பதை உறுதி செய்ய இயலும்.
மேலும் படிக்க : Election 2019: தி.மு.க, அ.தி.மு.க-வில் களமிறங்கும் வாரிசு வேட்பாளர்கள்