General Election results 2019 : 6 வாரங்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற தேர்தல்கள் ஒரு வழியாக முடிவிற்கு வந்துவிட்டது. அனைவரும் தற்போது வெற்றியாளர்கள் யாராக இருப்பார்கள் என்று விரல் நகம் கடித்துக் கொண்டு 23ம் தேதிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் யாவும் பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ள நிலையில் மக்களுக்கு இருக்கும் சில சந்தேகங்களை நிவர்த்தி செய்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ்.
General Election results 2019 : எப்போது வெளியாகும் ?
இந்திய நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 11ம் தேதி துவங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்றது. மே மாதம் 19ம் தேதி வரை நடைபெற்றது இந்த தேர்தல்கள். 23ம் தேதி காலை 8 மணியில் இருந்து வாக்கு எண்ணிக்கைகள் துவங்கும். எந்த கட்சியினர், எந்த தொகுதியில் எவ்வளவு வாக்குகள் பெற்றுள்ளனர் என்று அறியும் வகையில் காலையில் நடக்கும் வாக்கு எண்ணிக்கை இருக்கும். மாலையில் நாமே முன்னணி பெறும் கட்சி எது என்பதை அறிந்துவிடுவோம். இருப்பினும் தலைமைத் தேர்தல் ஆணையர் 23ம் தேதி நள்ளிரவோ, வெற்றி பெற்ற கட்சி எது என மே 24ம் தேதி காலையிலோ அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடுவார்.
வாக்கு எண்ணிக்கை துவங்கிவிட்டதா ?
இல்லை. மே 23ம் தேதி அன்று காலை தான் வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு தொகுதிக்குமான தேர்தல் அதிகாரி, வேட்பாளர்கள், மற்றும் முகவர்கள் முன்னிலையில் தான் வாக்குகள் எண்ணப்படும். தபால் வாக்குகள் தான் முதலில் எண்ணப்படும். பின்னர் தான் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். ரிட்டனிங் ஆஃபிசர், அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டனவா என்பதை உறுதி செய்த பிறகு அந்த தொகுதியின் முடிவுகளை அறிவிப்பார்.
எப்போது இருந்து ட்ரெண்ட்கள் வெளியாகத் துவங்கும்?
மே 23ம் தேதி மதியம் 12 மணியில் இருந்து ட்ரெண்ட்கள் வெளியாகத் துவங்கும். இதனை நீங்கள் நேரடியாக https://results.eci.gov.in என்ற இணையத்திலோ, வோட்டர் ஹெல்ப்லைன் செயலியிலோ பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
முடிவுகளை ஓரளவுக்கு எப்போது கணிக்க இயலும் ?
அன்றைய நாள் முழுவதும் வாக்கு எண்ணிக்கைகள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கும். முடிவுகளை கணிப்பதற்கு கால தாமதம் ஆகலாம். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகியிருக்கும் வாக்குகள் விவிபேட்டின் ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கையில் ஒத்துப் போகிறதா என்பதை அறிந்த பின்னர் தான் இறுதி முடிவுகளை கணிக்க இயலும்.
இறுதி முடிவுகள் எப்போது வெளியாகும் ?
மே 23ம் தேதி இரவு முடிவுகள் வெளியாகிவிடும்.
ஆட்சி அமைக்க எத்தனை தொகுதிகளை ஒரு கட்சி கைப்பற்ற வேண்டும் ?
543 தொகுதிகளைக் கொண்டுள்ள நாடாளுமன்றத்தில் ஒரு கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் 272 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். தனிக்கட்சியாக வெற்றி பெற இயலாமல் போனால் கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் ஆட்சி அமைக்கலாம். கூட்டணிக்கட்சிகளின் உதவியுடன் ஒரு கட்சி ஆட்சி அமைக்கிறது என்றால், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும்.
புதிய ஆட்சி எப்போது அமையும்?
16வது நாடாளுமன்ற அவை ஜூன் 3ம் தேதியுடன் முடிவுக்கு வர இருப்பதால் அதற்கு முன்பே பிரதமர் பதவி ஏற்பு விழா மற்றும் புதிய ஆட்சி பொறுப்பேற்றல் போன்றவை முடிந்துவிடும். 2014ம் ஆண்டு தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, நரேந்திர மோடி மே 26, 2014 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
பழைய அரசு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலை !
தேர்தல் நடவடிக்கைகள் முற்றிலும் முடிவுக்கு வந்த நிலையில், குடியரசுத்தலைவர் 16வது நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிடுவார். அவையில் வயது மிக்க உறுப்பினரின் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொள்வார்கள். இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்காக ஒருவர் போட்டியிட வேண்டும் என்றால் அவர் இந்திய பிரஜையாக இருக்க வேண்டும். 25 வயதுக்கு அதிகமானவராக இருக்க வேண்டும்.
பிரதமராக பதவி ஏற்க போவது யார் ?
கூட்டணியாகவோ, தனித்து மெஜாரிட்டியாகவோ வெற்றி பெறும் அணியினர் தங்களுக்குல் கலந்து ஆலோசனை செய்து பிரதமர் யார் என்பதை முடிவு செய்வார்கள். பாஜக கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியே அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் எதிர்க்கட்சியின் மெகா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.
தொங்கு பாராளுமன்றம் (Hung Parliament) அமைந்தால் என்ன செய்வார்கள்?
545 இருக்கைகள் கொண்ட நாடாளுமன்றத்தில் 543 தொகுதிகளுக்கான உறுப்பினர்களை தேர்தல் மூலம் தேர்வு செய்வார்கள். மீதம் இருக்கும் இரண்டு இருக்கைகளுக்கான உறுப்பினர்கள் குடியரசுத்தலைவரால் பரிந்துரை செய்யப்படும். கூட்டணியினர் / கட்சி 272 மேல் தொகுதிகளை கைப்பற்றினால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். எந்த கட்சியும்/கூட்டணியும் அவ்வாறு வெற்றிபெறவில்லை என்றால் தொங்கு பாராளுமன்றம் அமையும். சிறு கட்சிகள் மற்றும் சுயேட்சை உறுப்பினர்களின் ஆதரவை நாடி ஆட்சியை கூட்டணியினர் உறுதி செய்வார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.