Nithya Pandian
General Election Tamil Nadu Women Candidates list : எந்த ஒரு அரசு அமைப்பாக இருந்தாலும் சரி, நிர்வாகமாகவும், நிறுவனமாகவும் இருந்தாலும் சரி, அங்கு பெண்களின் பிரதிநிதித்துவம் சரி சமமாக அமைந்தால் மட்டுமே அங்கு பெண்களின் பிரச்சனைகள் சரியான முறையில் கையாளப்பட்டு அதற்கான தீர்வுகள் எட்டப்படும்.
சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இடம் பெற்றிருப்பதை உறுதி செய்யும் மசோதா தான் 33% மகளிர் இட ஒதுக்கீடு மசோதா. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கனவுத் திட்டம் இது. 1996ம் ஆண்டு பிரதமர் தேவ கவுடாவால் தாக்கல் செய்யப்பட்ட மசோதா, முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ் என்ற பெரும் தலைவர்களின் எதிர்ப்பால் பலமுறை கிடப்பில் போடப்பட்ட திட்டமும் இதுவே. இறுதியாக 2010 மாநிலங்களவையில் பெரும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் நடைமுறைப்படுத்துவதில் இன்னும் சிக்கல் தான்.
சிறுபான்மை சமூகத்தில் இருந்து வரும் பெண், அம்மக்களின் நிறை குறைகளை அறிந்து வைத்திருக்க மாட்டார்கள், தலீத் சமூகத்தில் இருந்து வரும் பெண் அச்சமூகத்தின் நிறை குறைகளை அறியார், அதனால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்ற சிண்டு முடிச்சுகள் தான் நிறைய உள்ளனவே தவிர, இருவரும் ஒரே சமூக பின்புலத்தில் இருந்து தான் பயணப்பட்டோம். இருவரும் ஒரே மாதிரியான சமூக பிரச்சனைகளை சந்தித்தோம். இருவரும் அப்பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே அரசியலில் பயணிப்போம் என்று சக பெண் அரசியல்வாதியின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை கொண்டாடும் தலைவர்கள் இன்று இல்லாமல் போனது வியப்பளிக்கிறது.
தெற்கில் இருந்து வடக்கைப் பார்த்தால் வடக்குப் பகுதிகளில் போதுமான கல்வி அறிவு, சுகாதாரமான வாழ்விடம், முற்போக்கு எண்ணங்களை உருவாக்கும் இயக்கமும், அதற்கு ஆதரமாக விளங்கும் தலைவர்களும் பெயரளவில் குறைச்சல் தான். தெற்கு என்றும் முன்னேற்றம் கண்டு பல்வேறு மாநிலங்களுக்கு முன் மாதிரியாக விளங்கும் மாநிலங்கள் தான். தமிழகம் – எத்தனை முறை ஆண் தலைவர்களால் வழிநடத்தப்பட்டதோ, அதற்கு நிகராக பெண் தலைவராலும் வழிநடத்தப்பட்டது. இருப்பினும் இங்கும் பெண்களின் பிரதிநிதித்துவம் ஒற்றை இலக்க எண்ணில் முடிவடைந்துவிடுகிறது. தேசிய கட்சிக்கும் இது பொருந்தும். திராவிட கட்சிகளுக்கும் இது பொருந்தும்.
General Election Tamil Nadu Women Candidates list
திமுக-காங்ரஸ் கூட்டணி
திமுக போட்டியிடும் 20 தொகுதிகளில் இரண்டு பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இருவரும் வாரிசு அரசியல்வாதிகளாகவே களம் காண்கிறார்கள்.
கனிமொழி கருணாநிதி
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மகள் மற்றும் ராஜ்யசபா உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி முதன்முறையாக மக்களவை தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுகிறார். தூத்துக்குடி தொகுதியில், பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை எதிர்த்து போட்டியிடுகிறார் கனிமொழி. நடார் சமூகத்தை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் அதிகம் என்பதால் அவர்களின் வாக்கு வங்கியை கைப்பற்றுவதற்காக தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. தமிழிசை மண்ணின் மைந்தனாக அங்கு கூடுதல் பரிட்சையம் அடைகிறார்.
தமிழச்சி தங்கப்பாண்டியன்
முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியனின் மகள் என்ற அடையாளத்துடன் களம் இறக்கப்பட்டிருக்கும் எழுத்தாளார் மற்றும் சமூக செயற்பாட்டாளர் சுமதி என்ற தமிழச்சி தங்கபாண்டியன் இம்முறை தென் சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். அறிஞர் அண்ணா, முரசொலி மாறன், டி.ஆர். பாலு என்ற அரசியல் பாதையில் பெரும் தடம் பதித்தவர்களின் காலடிச் சுவட்டை பின்பற்றி இங்கு போட்டியிடுகிறார் தமிழச்சி. இவருக்கு எதிராக நேரடியாக களம் இறக்கப்பட்டிருக்கிறார் சிட்டிங் எம்.பி மற்றும் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன்.
ஜோதிமணி
காங்கிரஸ் சார்பில் கரூர் தொகுதியின் வேட்பாளராக போட்டியிடுகிறார் ஜோதிமணி. எம்.ஏ.எம்.பில் முடித்த இவர் தன்னுடைய 22வது வயதில் அரசியலில் இணைந்தவர். சட்டசபை தேர்தலில் ஒருமுறை நாடாளுமன்ற தேர்தலில் ஒருமுறை போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் மு.தம்பிதுரை களம் இறங்குகிறார்.
அதிமுக – பாஜக கூட்டணி :
தமிழிசை சௌந்தரராஜன்
அதிமுக – பாஜக – பாமக – தேமுதிக – புதிய தமிழகம் என்று மெகா கூட்டணியாக வலம் வரும் இந்த கூட்டணியில் அனைவருக்கும் மிகவும் பரீட்சையமான பெண் வேட்பாளர் யார் என்று கேட்டால் தமிழிசை சௌந்தரராஜன் மட்டுமே. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குமரி ஆனந்தன் அவர்களின் புதல்வி.
ஆனாலும் அவர் பயணிக்க எடுத்துக் கொண்ட பாதை, அவர் தந்தையின் கொள்கைகளுக்கு முற்றிலும் வேறானது. அதனால் தான் என்னவோ, பாஜகவில் இணைந்த பின்பு என் தந்தை என்னிடம் பேசவே இல்லை என்று வருத்தத்துடன் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார். பாஜக தரப்பில், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார் தமிழிசை சௌந்தரராஜன்.
மரகதம் குமாரவேல்
அதிமுக சார்பில், காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார் மரகதம் குமாரவேல். சிட்டிங் எம்.பியான இவரின் தந்தை, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்தில் வேலை பார்த்தவர் என்பது குறிப்பிடதக்கது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில், காஞ்சிபுரத்தில் மரகதம் குமாரவேலை அறிமுகம் செய்து வைத்து தான் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தையே துவங்கினார்.
அமமுக வேட்பாளர்கள் :
சாருபாலா ஆர். தொண்டைமான்
புதுக்கோட்டை மன்னர் பரம்பரையில் இருந்து வந்தவர் சாருபாலா தொண்டைமான். இரண்டு முறை திருச்சி மேயராக பதவி வகித்துள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் நின்று போட்டியிட்ட இவர் இன்று அமமுக சார்பில் போட்டியிடுகிறார். இவருக்கு போட்டியாக திருச்சியில் களம் காண்கிறார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அடைக்கல ராஜ் 4 முறை இப்பகுதியில் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
த.செங்கொடி
நாகை தொகுதியில் அமமுக சார்பில் த.செங்கொடி களம் இறக்கப்பட்டுள்ளார். வெகுநாட்களாக இடதுசாரி இயக்கத்தில் இருந்து வந்த குடும்பத்தில் பிறந்த இவர் சட்டப்படிப்பு படித்துள்ளார். அதிமுக சார்பில் இத்தொகுதியில் தாழை.ம.சரவணன் போட்டியிடுகிறார்.
பொன்னுத்தாய்
ராஜபாளையம் முன்னாள் ஒன்றியத் தலைவர் எஸ். பொன்னுத்தாய் தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறார். புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை எதிர்த்து களம் காண உள்ளார். விருதுநகர் மேற்கு மாவட்ட மகளிர் இணைச் செயலாளாராக பணியாற்றி வரும் பொன்னுத்தாய் அதிமுகவில் இருந்து விலகி 4 மாதங்கள் தான் ஆகின்றது. தன்னுடைய பணியில் தன் தந்தையின் அரசியல் குறுக்கீடு இருப்பதன் காரணமாக அவர் அக்கட்சியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக சார்பில் இத்தொகுதியில் தனுஷ்.எம்.குமார் போட்டியிடுகிறார்.
மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் பற்றிய அறிமுகத்தை நாளை காண்போம்.