kaduvetti Guru wife to contest From jayankondam: வரும் சட்டமன்றத் தேர்தலில் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து அறிவித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னணித் தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு வன்னியர் சங்கத் தலைவராகவும் காடுவெட்டி குரு பணியாற்றினார். குருவின் மறைவுக்குப் பிறகு,அவரது மகன் கனலரசன் வன்னியர் சங்க அமைப்பை சேர்ந்த குருவின் ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து மாவீரன் மஞ்சள் படை என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் மாவீரன் மஞ்சள் படை இந்திய ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.
காடுவெட்டி குரு மகன் கனலரசன் கைது; திருச்சி மத்திய சிறையில் அடைப்பு; என்ன நடந்தது?
இவர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், பெரம்பலூர் தொகுதியிலிருந்து, இந்திய ஜனநாயகக் கட்சி சார்பாக வேட்பாளராக, திமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், திமுக கூட்டணியில் இருந்து இந்திய ஜனநாயக கட்சி வெளியேறியது. மேலும், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியுடன் ஒன்றிணைந்து மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. சமத்துவ மக்கள் கட்சிக்கும் இந்திய ஜனநாயகக் கட்சிக்கும் தலா 40 இடங்களை ஒதுக்கீடு செய்ய முடிவுசெய்யப்பட்டது.
காடுவெட்டி குரு மகன், மருமகனுக்கு அரிவாள் வெட்டு; மருத்துவமனையில் அனுமதி
செய்தியாளர்களிடம் பேசிய ரவி பச்சமுத்து," காடுவெட்டி குருவின் ஆதரவாளர்களும் வன்னியர் சமூகத்தினரும் இந்த தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சிக்கு மாபெரும் வெற்றியைத் தேடி தருவார்கள். எங்களின் வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்" என்று தெரிவித்தார்.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக கட்சிக்கு ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டது. பாமக வேட்பாளாராக வழக்கறிஞர் கே. பாலு போட்டியிடுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil