Kanyakumari constituency Voters list name removed issue : கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தலில், சுமார் 45 ஆயிரம் வாக்குகள் நீக்கப்பட்டது குறித்து விசாரிக்கவும், அறிக்கை தாக்கல் செய்ய கோரிய மனுவுக்கு பதிலளிக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ் மீனவர் கூட்டமைப்பு கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் தாக்கல் செய்த மனுவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் தூத்தூர், சின்னத்துறை, கடியப்பட்டினம், ராஜாக்கமங்கலம், மணவாளக்குறிச்சி, இடலாக்குடி உள்ளிட்ட கடலோர கிராமங்களில் 45 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும்.
ஒக்கி புயல் தாக்கியபோது அரசு செயல்பாடு பாராமுகமாக இருந்ததால், மக்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள் என்ற அச்சம் காரணமாக வாக்காளர் பட்டியலில் இருந்து அதிகப்படியான எண்ணிக்கையில் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கலாம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எனவே அதிகளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்ட பகுதிகளில் மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். தற்போதைய நிலையில் கன்னியாகுமரி தொகுதி வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கபட்டுள்ளது.
இந்த மனு விடுமுறை கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 தொகுதிகளிலும் சுமார் 6 ஆயிரம் முதல் 9500 வரையிலான வாக்காளர் பெயர்கள் நீக்கபட்டுள்ளதாகவும் இவர்கள் அனைவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்துள்ளதாகவும் ஆனால் எந்த காரணமும் இல்லாமல் தற்போது பட்டியலில் இருந்து பெயர் நீக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
எனவே இது குறித்து உரிய விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.இதற்கு பதில் அளித்து வாதிட்ட இந்திய தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர்,
2016 சட்டமன்ற தேர்தலுக்கு பின் ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி நடந்து வந்துள்ளது. அப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றது பற்றி சரிபார்த்திருக்க வேண்டும். இதே கோரிக்கையுடன் ஏற்கனவே மனு தாக்கல் செய்யபட்டுள்ளதாகவும், அந்த மனு கோடை விடுமுறைக்கு பின் விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிபதிகள், மனு தொடர்பாக பதில் அளிக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு விசாரணை ஜூன் முதல் வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.
ராகுல் காந்தியை சந்தித்த சந்திரபாபு நாயுடு! ஆலோசனைக்கான காரணம் என்ன?