Lok Sabha election nomination begins tomorrow : 7 கட்டங்களாக நடைபெறும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 18ம் தேதி ஒரு நாளில் தேர்தல் நடைபெறுகிறது.
அதற்கான வேட்புமனுத் தாக்கல் நாளை துவங்கி 26ம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். 39 தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தலும், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஒரே நாளில் நடைபெற உள்ளதால், தமிழகம் முழுவதும் ஒரே பரப்பராக உள்ளது.
சட்டமன்ற இடைத்தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கலும் நாளை துவங்க உள்ளது. 21 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் இடைத் தேர்தல்கள் நடைபெறவில்லை. திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தல் நடைபெறுவது குறித்து வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு வெளியாக உள்ளது.
சென்னையில் வேட்புமனுக்கள் எங்கு பெறப்படுகிறது ?
பழைய வண்ணாரப்பேட்டை பேசின் ப்ரிட்ஜ் சாலையில் இருக்கும் மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்தில் வடசென்னை தொகுதிக்கான வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்யலாம்.
அடையாறு டாக்டர் முத்துலட்சுமி சாலையில் உள்ள தெற்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்தில் தென்சென்னை தொகுதி வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்யலாம்.
மத்திய சென்னை தொகுதிக்கான வேட்பாளர்கள் செனாய்நகர் புல்லா அவென்யூ, 2வது குறுக்குத் தெருவில் உள்ள மத்திய வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்தில் மனுதாக்கல் செய்யலாம்.
பெரம்பூர் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை சென்னை மாவட்ட வருவாய் அதிகாரி கருணாகரன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான வேட்புமனு தாக்கல் வியாசர்பாடி சர்மாநகர் 2வது பிரதான சாலையில் உள்ள மாநகராட்சி கட்டிடத்தில் பெறப்படுகிறது.
சென்னையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் யார் ?
சென்னையில் உள்ள மூன்று நாடாளுமன்ற தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வட சென்னை தொகுதிக்கு, சென்னை வடக்கு வட்டார துணை ஆணையாளர் திவ்யதர்ஷினி, தென்சென்னை தொகுதிக்கு, தெற்கு வட்டார துணை ஆணையாளர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் மத்திய சென்னை தொகுதிக்கு, மத்திய வட்டார துணை ஆணையாளர் பி.என். ஸ்ரீதரும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க : Election 2019: தி.மு.க, அ.தி.மு.க-வில் களமிறங்கும் வாரிசு வேட்பாளர்கள்