Pinarayi Vijayan : பாஜக மாநிலங்களவை உறுப்பினரும், நடிகருமான சுரேஷ் கோபி, குருவாயூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பாஜக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அந்த தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் கே.என்.ஏ. காதர் வெற்றி பெற வேண்டும் என்று கூறினார். இந்த கருத்து தொடர்பாக பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பாஜவிற்கு இடையே இருக்கும் தேர்தல் தொடர்பான புரிதல் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்த ஒப்பந்தம் காங்கிரஸ், ஐ.யூ.எம்.எல். மற்றும் பாஜகவிற்கு இடையேயானது. சுரேஷ் கோபி அனுபவமிக்க அரசியல்வாதி கிடையாது. இது போன்ற ரகசியங்களை மற்ற பாஜக தலைவர்கள் வெளியிடமாட்டார்கள். ஒரு ஐ.யூ.எம்.எல். வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்று பாஜக விரும்புவது ஒன்றும் காங்கிரஸ் அல்லது ஐ.யூ.எம்.எல். கட்சிக்கு நன்மை தரக்கூடியது அல்ல என்று நினைக்க வேண்டாம் என்று கூறினார்.
பாஜக மாநில தலைவர் கே.சுரேந்திரன், சுரேஷ் கோபியின் கருத்து தனிப்பட்டது. அதற்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்று உறுதி செய்தார். சுரேஷ் கோபி ஞாயிற்றுக்கிழமை பேசியதில், தலச்சேரியில் சி.பி.ஐ(எம்) வேட்பாளர் ஏ.என். ஷம்சீர் தோல்வி அடைய வேண்டும் என்றும் கூறினார். தலச்சேரியில் பாஜகவினரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில் சி.பி.ஐ (எம்) கட்சியில் இருந்து வெளியேறிய சி.ஒ.டி. நசீருக்கு ஆதரவு கரத்தினை நீட்ட முயன்றது பாஜக.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil