Rafale Deal : Chowkidar Chor Hai Rahul Gandhi wrongly attributed the court's remark : ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சீராய்வு மனு வழக்கில் 10ம் தேதி உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பினை வெளியிட்டது. அதில் பேர ஒப்பந்தம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சட்டத்திற்கு புறம்பாக பெறப்பட்ட ஆதரங்களின் அடிப்படையில் வெளியான பத்திரிக்கை ஆதாரங்கள் இடம் பெற்றிருந்தன.
அந்த ஆதாரங்களை விசாரிக்க கூடாது என்று மத்திய அரசு கோரிக்கை வைத்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் 10ம் தேதி, அந்த நாளேடுகளின் ஆதாரங்களையும் இணைக்கலாம் என்று கூறியிருந்தது.
இந்நிலையில் தன்னுடைய தொகுதியான அமேதியில் வேட்புமனு தாக்கல் செய்து முடித்த ராகுல் காந்தி, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில் காவலாளியே திருடன் தான் என்று உச்ச நீதிமன்றமே கூறிவிட்டது என்று பொருள்பட பேசினார்.
வழக்கு தொடுத்த டெல்லி எம்.பி
இந்த விவகாரம் அடுத்த நாள் பல்வேறு நாளிதழ்களில் தலையங்கமாக வெளியானது. குறிப்பாக உச்ச நீதிமன்றம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளது என்று ஒரு மாயையே உருவாக்கப்பட்டது.
இதனால், டெல்லி எம்.பி. மீனாட்சி லெகி, ராகுல் காந்தி மீது கிரிமினல் அவமதிப்பு வழக்கு ஒன்றை பதிவு செய்தார். அதில் நீதிமன்றத்தின் தீர்ப்பினை தனக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்டு தனிநபரை தாக்கி பேசியுள்ளார் ராகுல் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று காலை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் க்ப்தா, மற்றும் சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த நீதிபதிகள் ”எங்களின் கருத்துகளை நாங்கள் தெளிவாக கூறியிருக்கும் போது, மக்கள் மத்தியில் இந்த கருத்துகளை தவறாக கொண்டு சேர்ப்பதின் நோக்கம் என்ன என்பதை வருகின்ற 22ம் தேதிக்குள் ராகுல் காந்தி விளக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை மீண்டும் வருகின்ற 23ம் தேதி நடக்கும் என்று கூறி ஒத்திவைத்துள்ளனர் நீதிபதிகள்.
மேலும் படிக்க : ரஃபேல் விவகாரம் : ஆவணங்கள் மீதான முழுமையான விசாரணை நடைபெறும் – சுப்ரிம் கோர்ட்