தமிழகத்தில் களம் இறங்குவாரா ராகுல்? காங்கிரஸார் மத்தியில் வலுக்கும் கோரிக்கை

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, தமிழகத்தில் இருந்தும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த அறிவிப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகள் எவை என்பதும் அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனால், அந்தத் தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.

இன்னும் ஓரிரு நாட்களில் வேட்பாளர் பட்டியலை அறிவிக்க காங்கிரஸ் தீவிரமாகியுள்ளது. அதற்கான பணிகளில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மும்முரமாக ஈடுபட்டுள்ளார். தற்போது தமிழகத்தில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார் என்பது குறித்த உத்தேச பட்டியல் பற்றிய தகவல் வெளியாகி வருகிறது.

மேலும் படிக்க – Election 2019 Live Updates : தேர்தல் 2019 லைவ்

அதன்படி, கன்னியாகுமரியில் வேட்பாளராக களம் இறங்க ரூபி மனோகரன், ஊர்வசி அமிர்தராஜ். ராபர்ட் புரூஸ், வின்சென்ட் ஆகியோரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாகூர், தேனியில் ஜே.எம்.ஆரூண், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், திருச்சியில் திருநாவுக்கரசர், கரூரில் ஜோதிமணி, ஆரணியில் கிருஷ்ணசாமி அல்லது முருகானந்தம், கிருஷ்ணகிரியில் டாக்டர் செல்லக்குமார், திருவள்ளூர் தொகுதியில் முன்னாள் எம்பி விஸ்வநாதன், விக்டரி ஜெயக்குமார், செல்வப்பெருந்தகை, ராணி ஆகியோரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்தச் சூழ்நிலையில், கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெயரில் விருப்பமனு பெறப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மாநிலங்களில் ஏதேனும் ஒரு தொகுதியிலும் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், முதல் மனுவாக ராகுல் காந்தி பெயரில் விருப்பமனு பெறப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, ராகுல் காந்தி தமிழகத்தில் இருந்தும் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதுகுறித்து முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தனது ட்விட்டரில், “ராகுல் காந்தி தமிழகத்தில் இருந்து போட்டியிட வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது. தமிழக மக்கள் ராகுல் மீது அதிக அன்பும், மரியாதையும் வைத்துள்ளனர். தமிழகத்தில் இருந்து எம்.பி.யாக தேர்வு பெற்று பிரதமரானால், அது தமிழகத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தென் இந்தியாவுக்கும் பெருமை அளிப்பதாக அமையும்” என குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி, தமிழகத்தில் இருந்தும் மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என ட்விட்டரில் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

எதிர்வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ராகுல் காந்தி முதன்முறையாக பிரச்சாரம் செய்ய தேர்ந்தெடுத்த இடம் நாகர்கோவில் (கன்னியாகுமரி மாவட்டம்) என்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Election news in Tamil.

×Close
×Close