Tamil Nadu local body election last nomination day : ஊரக உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தல் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நாள் இன்றுடன் நிறைவடைகிறது.
Advertisment
9 மாவட்டங்கள் நீங்கலாக தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான போட்டி, 314 ஊராட்சி ஒன்றியங்கள் உட்பட்ட 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான போட்டிகள், 9,624 கிராம ஊராட்சி மன்றத்தலைவர் பதவிகளுக்கான போட்டி, 76,746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான போட்டிகள் என மொத்தம் 91,975 பதவிகளுக்கு தேர்தல்கள் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்கள் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.
ஜெயலலிதா தொடர்பான இணையதள தொடருக்கு தடை கோரிக்கை..
Advertisment
Advertisements
2ம் தேதி தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியானது. 9ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல்கள் நடைபெற்று வருகிறது. இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. நாளை முதல் (டிசம்பர் 17ம் தேதி முதல்) வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும். வேட்புமனுவை வாபஸ் பெற டிசம்பர் 19ம் தேதி இறுதி நாளாகும். இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் என்பதால் அதிக அளவில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்
முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை 14ம் தேதி வெளியிட்டது திமுக. திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, கரூர், மத்திய சேலம், சேலம் மேற்கு, கோவை தெற்கு, நீலகிரி, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு பகுதிகளில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று (15/12/2019) வெளியிட்டது திமுக. அதில் மொத்தமாக திமுக போட்டியிட இருக்கும் 34 பகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது.
அதிமுகவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
13.12.2019 அன்று அதிமுக தங்கள் கட்சியின் சார்பில் நிற்கும் முதல் வேட்பாளார் பட்டியலை அறிமுகம் செய்தது. அந்த பட்டியலில் தேனி, சேலம், கிருஷ்ணகிரி, அரியலூர், திருவாரூர், மதுரை புறநகர் கிழக்கு, தூத்துக்குடி வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது.
அதிமுகவின் 2 ஆம்-கட்ட வேட்பாளர்கள் பட்டியல் 15ம் தேதி வெளியிடப்பட்டது. திருவண்ணாமலை, நீலகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், தஞ்சை, ராமநாதபுரம், நாகப்பட்ட்டினம், சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியிருந்தது.
திண்டுக்கல், கன்னியாகுமார் கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, கடலூர் கிழக்கு, மத்திய கடலூர், கடலூர் மேற்கு, தர்மபுரி, ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர், திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர், கோவை மாநகர், கோவை புறநகர், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை முதல்வர் மற்றும் துணை முதல்வர் வெளியிட்டனர்.
தமிழக தேர்தல் ஆணையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்
தமிழக தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய தள அறிவிப்பின் படி இது வரையில் மாவட்ட ஊராட்சி வார்ட் உறுப்பினர் பதவிக்கு 771 நபர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர் (கட்சி அடிப்படையில்). ஊராட்சி ஒன்றிய வார்ட் உறுப்பினர் பதவிகளுக்கு 8109 நபர்கள் (கட்சி அடிப்படையில்)இதுவரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். கிராம ஊராட்சி தலைவர்களுக்கான பதவிக்கு 25044 நபர்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 73150 நபர்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.