Tamil Nadu Lok Sabha Election 2019 Phase 2 Polling: தமிழகத்தில் இறுதி நிலவரப்படி, மக்களவைத் தேர்தலில் 70.90 சதவீத வாக்குகளும், 18 சட்டப் பேரவை தொகுதிகளில் 71.62 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. இரவு 10 மணிக்கு மேல் இறுதி நிலவரம் தெரிய வந்தது. அதிகபட்சமாக நாமக்கல் தொகுதியிலும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியிலும் வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.
17-வது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடக்கிறது. இதில், 2-வது கட்டத் தேர்தல் இன்று (ஏப்ரல் 18) நடைபெற்றது.
மேலும் படிக்க – Voter Registration, Form 6: முதன் முறையாக ஓட்டு போட இருக்கீங்களா? அப்ப உங்களுக்கு இதெல்லாம் தெரிஞ்சி இருக்கணும்!
Tamil Nadu Lok Sabha Elections 2019
2-வது கட்டத் தேர்தலில் தமிழ்நாட்டில் 38 தொகுதிகள், கர்நாடகாவில் 14 தொகுதிகள், மஹாராஷ்டிராவில் 10 தொகுதிகள், உத்தரப்பிரதேசத்தில் 8 தொகுதிகள், அஸ்ஸாம், பீகார், ஒடிஸாவில் தலா 5 தொகுதிகள், சத்திஸ்கர், மேற்கு வங்கத்தில் தலா 3 தொகுதிகள், ஜம்மு காஷ்மீரில் 2 தொகுதிகள், மணிப்பூர், திரிபுரா, புதுச்சேரியில் தலா ஒரு தொகுதயில் இன்று தேர்தல் நடைபெற்றது.
தமிழக மக்களவைத் தேர்தலில் இன்றிரவு 9 மணி நிலவரப்படி 70.90% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, அங்கு இரவு 8 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவடைந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 8 மணிக்கு முடிவுற்றது.
மாலை 6 மணி நிலவரப்படி, மதுரை தவிர்த்து மற்ற தமிழக மக்களவைத் தொகுதிகளில் ஒட்டுமொத்தமாக 69.55 சதவிகித வாக்குகள் பதிவாகி இருப்பதாகவும், சட்டப்பேரவை இடைத் தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 71.62 சதவிகித வாக்குகள் பதிவாகி இருப்பதாகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் அமமுக – பாஜகவினர் இடையே நடந்த மோதலில் 5 பாஜகவினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமமுகவை சேர்ந்த பால்மணி தலைமையில் 15பேர் கொண்ட கும்பல் பாஜகவைச் சேர்ந்த ஐந்து பேரை தாக்கியதில், அவர்கள் அனைவரும் பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட ஆற்காடு அருகே ராசாத்திபுரம் கீழ்விஷாரத்தில் துப்பாக்கிச்சூடு வாக்குச்சாவடி பகுதியில் கூட்டத்தை கட்டுப்படுத்த மத்திய பாதுகாப்பு படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
கூட்டத்தை கட்டுப்படுத்தவே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 37 மக்களவைத் தொகுதிகளில் மாலை 6 மணியோடு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
இதர வாக்குச்சாவடிகளில், வரிசையில் நிற்பவர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்படும். அவர்கள் எவ்வளவு நேரமானாலும் இருந்து வாக்களித்துவிட்டுச் செல்லலாம் என தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் 2019, தமிழகத்தில் 37 தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளில் மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிந்தது. மதுரையில் மட்டும் சித்திரை திருவிழா காரணமாக கூடுதல் நேரம் வழங்கப்பட்டிருக்கிறது.
மாலை 5 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக சிதம்பரத்தில் 70.73% வாக்குகள் பதிவாகின. குறைந்தபட்சமாக கன்னியாகுமரி தொகுதியில் 55.07% வாக்குகள் பதிவாகியுள்ளன என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறினார்.
திண்டுக்கல் தொகுதி வேடச்சந்தூர் பகுதியில் இருக்கும் ஆர்.எச்.காலனி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதான காரணத்தால் இரண்டு மணிநேரம் வாக்குப்பதிவு பாதிப்பு. 5 மணிக்கு புதிய வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டுவரப்பட்ட நிலையில் 8 மணி வரை வாக்குப்பதிவு நீட்டிப்பு என தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
சென்னையில் உள்ள சாலிகிராமம் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தார் நடிகர் வடிவேலு. தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேச்சு.
கொளத்தூர் தொகுதி பெரியார் நகரில் வாக்குச்சாவடி முகவர்களுக்கு மதிய உணவு கொண்டு செல்லும்போது துணை ராணுவத்துடன் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பணியில் இருந்த ராணுவ வீரர் தாக்கியதில் ரியாஸ் என்பவர் காயம் .
சிதம்பரம் அரியலூரில் உள்ள பொன்பரப்பியில் தேர்தல் தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே கடும் மோதல். அங்கு பள்ளி ஒன்றில் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் பாமகவினர் சிலர் அங்கிருந்த விசிக -வின் சின்னமான பானைகளை போட்டுடைத்தனர். இதனை தட்டிக்கேட்க சென்ற விசிகவினருடன் மோதலில் பாமகவினர் ஈடுபட்டனர். இதில் விசிகவினர் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு மோதல் பெரிதாக இரண்டு சக்கர வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
மூன்று மணி நிலவரப்படி மத்தியச் சென்னையில் மட்டும் குறைந்தபட்சமாக 45.65% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகமாக கரூரில் 56.85% வாக்குகள் பதிவாகியுள்ளன.
3 மணி வரையிலான நிலவரப்படி 47.10% வாக்குகள் பதிவாகியுள்ளன.
வடசென்னையில் 48.53% வாக்குகள் பதிவாகியுள்ளன. தென் சென்னை தொகுதியில் 47.60% வாக்குகளும், மத்திய சென்னையில் 45.65% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
மதியம் மூன்று மணி நிலவரப்படி, ஜம்மு-காஷ்மீர் பகுதியில், இரண்டு தொகுதிகளுக்கான தேர்தலில், 38.5% வாக்குகள் பதிவாகியுள்ளன
பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் முறையாக செயல்படாத காரணத்தினால் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருக்கும் வெங்கட்டா நகர் பகுதியில் இயந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவினை 7 மணி வரை நீட்டித்துள்ளனர்.
சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், அசாம்கர் தொகுதியில் போட்டியிடுவதற்காக தன்னுடைய வேட்புமனுவை தற்போது தாக்கல் செய்துள்ளார்.
இன்று அசாம் மாநிலத்திலும் தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று மதியம் 1 மணி வரை 46.42% வாக்குகள் பதிவாகியுள்ளன.
உத்திரப்பிரதேசம் ஆக்ராவீல் உள்ள ஃபடேபூர் சிக்ரியில் உள்ள மங்கோலி காலா கிராமத்தினர் இன்று தேர்தலை புறக்கணித்துள்ளனர். பூத் நம்பர் 41ல் இது வரை ஒரு வாக்காளர் கூட வாக்களிக்க வரவில்லை என்று கூறியுள்ளனர். முறையான பாசன வசதிகளை அரசு செய்து தராததால் இம்முடிவு என அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.
பகல் மணி 1 நிலவரப்படி, தமிழகத்தில் 39.49% வாக்குகள் பதிவாகியுள்ளன
வடசென்னை, தென் சென்னை , மற்றும் மத்திய சென்னை என மூன்று தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி வடசென்னையில் 23.36% வாக்குகள் பதிவாகியுள்ளன. தென் சென்னையில் 23.87% வாக்குகள் பதிவாகியுள்ளன. மத்திய சென்னையில் 22.89% வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகம் மட்டுமல்லாமல் மகராஷ்ட்ராவிலும் பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானதால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்ட்ராவின் சோலாப்பூரில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மகாராஷ்ட்ரா காங்கிரஸ் 33 புகார்களை தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் முத்துப்பேட்டை தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவே இன்னும் துவங்கவில்லை. வாக்குப்பதிவு தாமதமான பகுதிகளில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிப்பு இல்லை. டோக்கன் வாங்கியவர்கள் வாக்களிக்கலாம் என்று சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று காலை 11 மணி நிலவரப்படி 30.62% வாக்குகள் பதிவாகியுள்ளன. 305 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக மாற்றப்பட்டுள்ளன. மேலும் தங்களுக்கு பூத் ஸ்லிப் கிடைக்காதவர்கள் 1950 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹூ பேட்டி
இன்று நடைபெற இருக்கும் தேர்தலில் அனைவரும் தவறாது வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என மோடி ட்வீட் செய்துள்ளார்.
நீங்கள் இன்று வாக்களிக்கும் போது நியாய்க்காக மறக்காமல் வாக்களியுங்கள். நியாய் நமது வேலையில்லா இளைஞர்களுக்கானது, கஷ்டப்படும் நமது விவசாயிகளுக்கானது, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால பாதிக்கப்பட்ட சிறு குறுந்தொழில் நடத்துபவர்களுக்கானது, ஜாதி மற்றும் மத வேறுபாடுகளால் பெரிதும் பாதிக்கபப்ட்டவர்களுக்கானது என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.
ஒமர் அப்துல்லா மற்றும் ஃபரூக் அப்துல்லா தங்களின் வாக்கினை ஸ்ரீநகரில் உள்ள வாக்குச்சாவடியில் பதிவிட்டனர். இன்று ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் மற்றும் உதம்பூரில் தேர்தல் நடைபெற்று வருகிறது.
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக களம் இறங்கியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தன்னுடைய தாயாருடன் அங்கனூர் வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்துள்ளார்.அங்கனூர் வாக்குச்சாவடியில் நீண்ட நேரம் வருசையில் நின்று தனது தாயாருடன் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி விசிக வேட்பாளர் திருமாவளவன் தனுது வாக்கை பதிவு செய்தார்.#Thiruma4Chidambaram #LokSabhaElections2019 pic.twitter.com/DzXe10jag1— Thol.Thirumavalavan (@thirumaofficial) 18 April 2019
பெங்களூரு தெற்கு தொகுதியில் இருக்கும் வாக்குச்சாவடி எண் 54ல் தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
தெரிந்துக் கொள்ளுங்கள்.. ஓட்டு போட இந்த 10 ஆவணங்கள் இருந்தாலே போதும்
சென்னை தெற்கு தொகுதியில் அமைந்திருக்கும் பெசண்ட் நகர் வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார் அமமுக கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார் தூத்துக்குடியின் திமுக வேட்பாளர் மற்றும் மாநிலங்களவை எம்.பியுமான கனிமொழி. வாக்களித்துவிட்டு வந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் ”பாஜக முழுமையாக அதிமுகவை ஆட்கொண்டு விட்டது” என்று கூறியுள்ளார்.
தேனாம்பேட்டையில் உள்ள SIET கல்லூரியில் அமைந்திருக்கும் வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார் எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலின்.
Check Your Name in Voter List Online: வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என கண்டறிவது எப்படி?
How to Vote Using EVM, VVPAT: இன்று முதன்முறையாக ஓட்டு போட இருப்பவர்களுக்கு இதோ முக்கியமான தகவல்!
நெல்லை பணகுடியில் 31வது வாக்குசாவடியில் 31 வாக்குகள் பதிவான நிலையில் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. வாக்களிக்க முடியாமல் வாக்காளர்கள் தவித்து வருகின்றனர். சில வாக்காளர்கள் வாக்களிக்காமலேயே திரும்பிச் செல்கின்றனர்.
சென்னை அடையாறில் உள்ள வாக்குச்சாவடியில் அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வரிசையில் நின்று வாக்களித்தார்.
சென்னை தேனாம்பேட்டையில் இருக்கக் கூடிய வாக்குப்பதிவு மையத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலினுடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்துச் சென்றார்.
‘பூத்சிலிப் இல்லாதவர்கள் வரிசையில் நிற்க வேண்டாம்.. சிலிப் வாங்கிய பின் வரிசையில் நிற்கவும்’ என தேர்தல் அதிகாரிகள் கூறியதால் திருவான்மியூர் அட்வென்ட் கிறிஸ்தவப் பள்ளியில் 251வது வாக்குச் சாவடியில் வாக்காளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஜரூராக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. வழக்கத்தைக் காட்டிலும் மக்கள் அதிக ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இருப்பினும், தமிழகம் முழுவதும் பரவலாக பல வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதாகியுள்ளது. சில இடங்களில் இன்னும் வாக்குப்பதிவே தொடங்கவில்லை என்ற அதிர்ச்சிகர தகவலும் வெளியாகியுள்ளது.
வாக்கு, ஓட்டு என்பது எவ்வளவு முக்கியம் என்று மக்கள் இம்முறை அதிகம் உணர்ந்து கொண்டார்களோ என்னவோ… சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் காலை 8.45 மணி டிராஃபிக் நிலவரம்!.
சென்னை தி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் பிரபு, மகன் விக்ரம் பிரபு உட்பட குடும்பத்தாருடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாக்களிக்க உள்ள தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலை வாக்குச்சாவடியில் மின்வெட்டால் வாக்குப்பதிவு தாமதம் ஏற்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக தனது மகள் ஸ்ருதியுடன் காத்திருந்து கமல் வாக்களித்தார்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “என் கடமையை நான் செய்துவிட்டேன். மற்றவர்களும் தங்கள் கடமையைச் செய்ய வேண்டும்” என்று சுருக்கிக் கொண்டு விடைபெற்றார்.
சேலத்தில் ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி எண் 217ல் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் பொதுமக்கள் நீண்ட நேரமாகியும் வாக்களிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
அதேபோல், நாகையில் 151வது எண் வாக்குப்பதிவு இயந்திரமும் பழுதானதால் வாக்குப்பதிவு தாமதமாகிறது.
தி நகர் இந்தி பிரச்சார சபையில்அமைந்துள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் வாக்களித்தார். நடிகர் சூர்யா அவரது மனைவி ஜோதிகா, நடிகர் கார்த்தி ஆகியோர் வாக்களித்தனர்.
மானாமதுரை தாலுக்காவில் சேர்க்கக் கோரி விளாக்குளம் கிராம மக்கள் தேர்தல் முற்றிலுமாக புறக்கணித்துள்ளனர். கிராம மக்களுக்கு ஆதரவாக முதல் தலைமுறை வாக்காளர்களும் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாக்களிக்க உள்ள பெரியகுளம் வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதால், வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் நீண்ட நேரம் வரிசையில் நின்று வாக்களித்தார். ரசிகர்கள் திரளாக கூடியதால், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் வாக்களித்துவிட்டு சென்றார்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாக்களிக்க உள்ள தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலை வாக்குச்சாவடியில் மின்வெட்டால் வாக்குப்பதிவு தாமதம்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கினை பதிவு செய்தார்.
திருவாரூரில் ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதாகியுள்ளது.
நடிகர் அஜித்தும் அவரது மனைவி ஷாலினியும் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது வாக்கினை பதிவு செய்தார். சிவகங்கையில் உள்ள கண்டனூர் பெத்தாள் ஆச்சிப்பள்ளியில் தனது வாக்கை அவர் பதிவு செய்தார்.
தமிழகத்தின் 38 மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியுள்ளது.
உலகின் மிகப்பெரிய ‘ஜனநாயக திருவிழா’ தொடங்கியது.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் ‘விவிபாட்’ கருவியும் இணைக்கப்பட்டு இருக்கும். தான் அளித்த வாக்கு உரிய வேட்பாளருக்கு சரியாக பதிவாகி இருக்கிறதா? என்பதை வாக்காளர் அந்த கருவியில் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.
ஓட்டுப்போட செல்லும்போது வாக்காளர்கள் கையில் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதனால், வாக்காளர்கள் தங்கள் வீட்டிலேயே செல்போனை வைத்துவிட்டு செல்வது நல்லது.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு மையங்கள் தயார் நிலையில் உள்ளனர். மாதிரி வாக்குப்பதிவு இங்கு வெற்றிகரமாக முடிந்துள்ளது.
நடிகர் தனுஷ் தனது ட்விட்டரில், “யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சிந்தித்து வாக்களியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
நேற்று இரவு முழுவதும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இல்லாததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் இல்லாமல், ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை பேருந்துகள் இயக்கப்பட்டதால், மக்கள் மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்தனர்.
பெண்களும் முண்டியடித்து பேருந்து மேற்கூரையில் இடம் பிடித்தது தான் உச்சக்கட்ட கொடுமை!
சென்னை, தூத்துக்குடி உள்பட தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்குகள் சரியாக பதிவாகிறதா என அதிகாரிகளால் பரிசோதிக்கப்படுகிறது.