தேனியில் யாரும் எதிர்பாராத வகையில் திடீர் வேட்பாளர் ஆகியிருக்கிறார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். இதனால் அங்கு கடுமையான மும்முனைப் போட்டி ஏற்பட்டிருக்கிறது.
2019 மக்களவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் உற்று நோக்கும் தொகுதிகளில் ஒன்றாக தேனி மாறியிருக்கிறது. இங்கு அதிமுக வேட்பாளராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் களம் இறக்கப்பட்டிருக்கிறார்.
Read More: கார்த்தி சிதம்பரத்திற்கு டிக்கெட்? சிவகங்கை வேட்பாளர் அறிவிப்பு தாமதம் பின்னணி
ஓ.பி.ரவீந்திரநாத் குமாருக்கு எதிராக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அந்தக் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்செல்வன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட தங்க தமிழ்செல்வன், ஓ.பி.எஸ். மகனுக்கு ‘டஃப் ஃபைட்’ கொடுக்கும் வகையிலேயே மக்களவைத் தேர்தலில் கால் பதித்ததாக கூறுகிறார்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2019/03/tn-congress-list............-300x150.jpg)
தங்க தமிழ் செல்வனின் அறிவிப்பு, நேற்று தேனி தொகுதி நிலவரத்தில் உருவான புதிய திருப்பம் என்றால், நேற்று இரவே அடுத்த திருப்பம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ரூபத்தில் வந்தது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்பு அவர் போட்டியிட்டு ஜெயித்த ஈரோடு தொகுதியை எதிர்பார்த்தார். ஆனால் திமுக கூட்டணியில் அந்தத் தொகுதி மதிமுக.வுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது.
எனவே ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இந்த முறை வேட்பாளர் ஆகும் வாய்ப்பு இல்லை என்றே பலரும் கருதினர். தேனியில் கடந்த 2004-ல் டிடிவி தினகரனை வீழ்த்திய ஜே.எம்.ஆரூன் மீண்டும் போட்டியிடுவார் என கருதப்பட்டது. ஆனால் நேற்று இரவு வெளியான காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலில் யாரும் எதிர்பாராதவிதமாக தேனிக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பெயர் அறிவிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த இளங்கோவன், தனக்கான ‘சீட்’டை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
Read More: தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்: திருநாவுக்கரசர், வசந்தகுமார், ஈ.வி.கே.எஸ். பெயர்கள் அறிவிப்பு
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் களம் இறங்கியதால், தேனி தொகுதி மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியிருக்கிறது. கூட்டணி பலத்துடன் களம் இறங்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஓ.பி.ரவீந்திரநாத் குமார், உள்ளூர் சமூக பலம் மற்றும் இரு தரப்புக்கு மாற்றான வாக்கு வங்கிகளை குறி வைத்திருக்கும் தங்க தமிழ்செல்வன் ஆகிய மூவருக்கும் இடையே இங்கு பலத்த போட்டி உறுதி.
இது குறித்து தொகுதி நிலவரங்களை அறிந்த பிரமுகர்கள் கூறுகையில், ‘அதிமுக அதிருப்தியாளர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க விரும்பாத திமுக வாக்கு வங்கிகள் கை கொடுத்தால் மட்டுமே இங்கு தங்க தமிழ்செல்வன் வெற்றியை நோக்கி முன்னேற முடியும். ஆனால் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் களம் இறங்குவதால், திமுக வாக்குகளை முழுமையாக கபளீகரம் செய்துவிடுவார். எனவே இது தங்க தமிழ்செல்வனுக்கு பின்னடைவு’ என்கிறார்கள்.
தேர்தல் களத்தில் இது ஆரம்ப கட்டம்தான். இன்னும் என்னென்ன திருப்பங்கள் நிகழப்போகிறதோ?