Election 2019 Tamil Nadu live updates : மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சு வார்த்தை சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. திமுக- வின் கூட்டணி அறிவிப்பு இறுதியான நிலையில் தேமுதிக- வின் கூட்டணி யாருடன்? என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பும்.
கடைசி நேரத்தில் திமுக - தேமுதிக இடையே உருவான உரசல் அரசியல் வட்டாரத்தை சூடாக்கியிருக்கிறது. ஒரே நேரத்தில் இரு கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சு என்பது இந்தத் தேர்தலில் சகஜமாகியிருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவாலயம் வருகை தந்தார். சில முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
Election 2019 Tamil Nadu live updates: தமிழக கூட்டணி விவரங்கள் குறித்த உடனுக்குடன் அப்டேட்டுகள்:
5:15 PM: அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் வருகிற 11,12 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்திருக்கிறார்கள்.
திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் தலைமையில் 'மக்களவைத் தேர்தல் – சட்டமன்ற இடைத்தேர்தல்' குறித்து மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 11-ம் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்துள்ள கழகத்தினரை எதிர்வரும் 09-03-2019, 10-03-2019 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் சென்னை – அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் நேர்காணல் செய்கிறார்.
4:45 PM: பிரேமலதா விஜயகாந்த் இன்று அளித்த பேட்டிக்கு, தேமுதிக.வில் இருந்து கடந்த சட்டமன்றத் தேர்தல் தருணத்தில் திமுக.வுக்கு வந்தவரான ஈரோடு சந்திரகுமார் பதில் அளித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘பிரேமலதா விஜயகாந்த் பொதுக்கூட்டத்தில் பேசுவதுபோல பேசி, பத்திரிகையாளர்களை கேவலப்படுத்துகிறார். கருணாநிதியை சந்திக்க ஸ்டாலின் அனுமதி மறுத்ததாக திரும்ப திரும்ப பொய் கூறி வருகிறார் பிரேமலதா.
பூட்டிய அறையில் சிக்கிய எலி போல பிரேமலதா விஜயகாந்த் விரக்தியில் இருக்கிறார். திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் 45 நிமிடங்கள் அமர்ந்து பேசிவிட்டு, அதை தற்போது மறுக்கிறார்கள்’ என குறிப்பிட்டார்.
4:30 PM: பிரேமலதா இன்று திமுக.வைத் தாக்கி காரசாரமாக கொடுத்த பேட்டி, விவாதங்களை கிளப்பியது. டிவிட்டரில், பிரேமலதா ‘டிரெண்ட்’ ஆனார்.
4:00 PM: திமுக அணியில் அடுத்தகட்டமாக கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்தத் தொகுதிகளை ஒதுக்கி வழங்குவது? என்பது குறித்து முடிவெடுக்க இருக்கிறார்கள். இது தொடர்பாக சனிக்கிழமை (மார்ச் 9) காலையில் காங்கிரஸ் குழுவினர், அறிவாலயத்தில் துரைமுருகன் தலைமையிலான திமுக குழுவை சந்திக்க இருக்கிறார்கள்.
தொடர்ந்து கூட்டணியில் உள்ள மற்றக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடக்கும் என தெரிகிறது.
2:45 PM: பிரேமலதா தனது பேட்டியில் செய்தியாளர்களை ஒருமையில் பேசியதாக புகார் எழுந்திருக்கிறது. இதற்கு பல்வேறு செய்தியாளர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.
செய்தியாளர்களை ஒருமையில் பேசியது குறித்து கருத்து தெரிவித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ‘விபரீதத்தை விலை கொடுத்து வாங்க வேண்டாம்’ என பிரேமலதாவுக்கு கண்டனம் தெரிவித்தார்.
1:50 PM: பிரேமலதா விஜயகாந்த் இன்று அளித்தப் பேட்டியில் திமுக.வை கடுமையாக தாக்கிப் பேசினார். ‘திமுக என்றாலே ‘தில்லு முல்லு கட்சி. கிழியாத சட்டையை கிழித்து, வாங்க வாங்க என்று போட்டோ எடுக்கும் கட்சி தேமுதிக இல்லை. துரைமுருகனை ஒரு பெரிய மனிதராக நினைத்து தனிப்பட்ட முறையில் சந்திக்க சென்ற கட்சி நிர்வாகிகளை வைத்து அரசியல் செய்துவிட்டார்.
கலைஞர் உடல்நலம் இல்லாத போது சந்திக்க விஜயகாந்த் அனுமதி கேட்டார் ; ஆனால் ஸ்டாலின் அனுமதி கொடுக்கவில்லை. மக்களவை தேர்தலுக்கான தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை, குழப்பமுமில்லை. மணப்பெண் இருந்தால் 10பேர் கேட்கத்தான் செய்வர்; தேர்தலும் அதுபோலதான்.’ என்றார் பிரேமலதா.
கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் சண்டையிட்ட பிரேமலதா விஜயகாந்த்! #PremalathaVijayakanth #DMDK #Tamilhttps://t.co/cxkCQMuQvN
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) 8 March 2019
1:20 PM: கூட்டணி நிலைப்பாடு குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் கட்சி தலைமையகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ‘மக்களவை தேர்தலில் தேமுதிக நிலைப்பாடு குறித்து ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை. அரசியல் ரீதியாக தேமுதிக.வை திமுக பழிவாங்குகிறது’ என்றார்.
12:15 PM: திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரமும் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். தேமுதிக விவகாரம் குறித்து துரைமுருகன் விளக்கம் தந்துவிட்டதால் அது குறித்து பேச விரும்பவில்லை என்றும் ஸ்டாலின் கூறினார்.
12:05 PM: திமுக வேட்பாளர்கள் 2 அல்லது 3 நாட்களில் அறிவிக்கப்படுவார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார்.
மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் குறித்து 2 அல்லது 3 நாட்களில் அறிவிக்கப்படும் - ஸ்டாலின்
* கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து இரண்டொரு நாளில் அறிவிக்கப்படும் - திமுக தலைவர் ஸ்டாலின் pic.twitter.com/CFyjlkQ8l0
— Thanthi TV (@ThanthiTV) 8 March 2019
11. 40 AM : டிடிவி தினகரன் கட்சியுடன், தமிழக வாழ்வுரிமை கட்சி கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
11.20 AM : திமுக ஆதரவு.
பெருந்தலைவர் மக்கள் கட்சி , வல்லரசு பார்வர்ட் பிளாக், ஆதிதமிழர் பேரவை, விவசாய தொழிலாளர் கட்சி, இந்திய தேசிய லீக் உள்ளிட்ட 14 கட்சிகளின் நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
11.15 AM : ஜெயக்குமார் பேட்டி.
தேமுதிக கூட்டணி பற்றி சுமூகமாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றும் எந்த இழுபறியும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
11.10 AM : தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளின் பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகும் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
11.00 AM : அதிமுக தேர்தல் அறிக்கை.
மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை ஓபிஎஸ்-ஈபிஎஸ்சிடம் சமர்ப்பிக்கப்பட்டது. பொன்னையன் தலைமையில் 7 பேர்க் கொண்ட குழு தேர்தல் அறிக்கையை சமர்பித்தது.
10 .20 AM : துரைமுருகன் vs தேமுதிக.
துரைமுருகன் வீட்டை முற்றுகையிட தேமுதிக முயற்சி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீட்டை தேமுதிகவினர் முயன்றதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. துரைமுருகன் வீட்டில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் என்ற செய்தியும் பரவிக் கொண்டிருக்கிறது.
10.10 AM : வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து இன்று பகல 12 மணியளவில் செய்தியாளர்களை சந்திக்கிறார் அக்கட்சியின் தலைவர் வேல் முருகன்.
10.00 AM : அதிமுக சார்பில் 7 பேர் கொண்ட குழு தயாரித்த, நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையை இன்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமியிடம் சமர்பிக்க இருக்கின்றனர்.
தேமுதிக மக்களவை தேர்தலில் கூட்டணி வைக்க திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளிடமும் மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதனையடுத்து திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து தேமுதிக தங்களிடம் கூட்டணி குறித்து பேசியது தொடர்பாக விளக்கம் அளித்தார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
தேமுதிகவின் இந்த அனுகுமுறை ஆரோக்கியமானது அல்ல என்ற விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் தற்போது செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் துரைமுருகன் திமுகவையும், திமுக தலைமையையும் அசிங்கமாக தன்னிடம் பேசியதாக குறிப்பிட்டுள்ளார் சுதீஷ்.
திமுக பொருளாளர் துரைமுருகனை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். தனிப்பட்ட காரணங்களுக்காகவே துரைமுருகனை சந்திக்க சென்றோம். துரைமுருகன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை துரைமுருகன் பொய் கூறுகிறாரா என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றார் சுதீஷ்.
சுதீஷ் அதிமுகவுடன் பேச சென்றது எனக்கு தெரியாது, நாங்கள் துரைமுருகனை சந்திக்க சென்றது சுதீசுக்கு தெரியாது என தேமுதிக நிர்வாகி இளங்கோவன் தெரிவித்தார். மேலும் அரசியல் காரணங்களுக்காக துரைமுருகனை சென்று சந்திக்கவில்லை என அனகை முருகேசன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சுதீஷ், நாங்கள் கூட்டணி தொடர்பான நிலைபாட்டில் தெளிவாக உள்ளோம். எங்கள் கூட்டணி பாஜகவுடன் என்பதை முன்னரே முடிவு செய்துவிட்டோம். ஆனால், பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்தது. அதற்கு நாங்கள் தயாராகவும் இருந்தோம்.
மேலும் படிக்க..விஜயகாந்த் ஆலோசனை: பியூஷ் கோயல் மூலமாக அதிமுக.விடம் கூடுதல் சீட் கேட்க முடிவு
ஆனால், பாமக உடன் கூட்டணியில் அதிமுக கையெழுத்திட்ட போதே எங்கள் கூட்டணியையும் உறுதி செய்யவில்லை என்பதே வருத்தம். இருப்பினும் எங்கள் கூட்டணி அதிமுகவுடன்தான். இன்னும் 2 நாட்களில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு எந்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை வெளியிடுவோம் என தெரிவித்தார்.
சுதீஷின் இந்த அறிவிப்பின் மூலம் தேமுதிக- அதிமுக வுடன் கூட்டணி வைப்பது உறுதி என்ற தகவலும் பரவி வருகிறது. அதே போல் திமுக கூட்டணியில் திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 20 இடங்களில் அதன் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். இந்த எண்ணிக்கையை குறைக்க வாய்ப்பு இல்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு நேற்று கடிதம் எழுதினார் .
இதன் மூலம் திமுக கூட்டணியில் தேமுதிக இணைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதை உறுதி செய்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.