வெளிநாட்டில் இருக்கும் தனது பேரன் பாசத்துடன் செய்த செயல் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் நெகிழ்ச்சியுடன் பேசி இருக்கிறார் நடிகர் ராமராஜன்.
தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடம் பிடித்தவர் நடிகர் ராமராஜன். 80களில் ரஜினியும் கமலும் தமிழ் திரையுலகில் போட்டி போட்டு நடித்து வந்த நிலையில், மண் வாசனை நிறைந்த கிராமத்து படங்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ராமராஜன். அப்போதைய பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக இருந்த ராமராஜன், பெரிய நட்சத்திரங்களாக இருந்த ரஜினி, கமலுக்கு போட்டியாக தன் படங்களை வெளியிட்டு வெற்றி பெற்றவர்.
இதையும் படியுங்கள்: விஜயகாந்த் vs ராமராஜன்: 13 முறை நேரடி போட்டி; ‘வில்லேஜ் கிங்’ யார்?
ராமராஜன் அப்போது நடித்த பெரும்பாலான படங்கள் வெள்ளி விழா கண்டன. குறிப்பாக கரகாட்டக்காரன் திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. இந்த படத்தின் வெற்றிக்கு ராமராஜனின் எதார்த்த நடிப்பு, இளையராஜாவின் பாடல்கள், காமெடி காட்சிகள், கனகா, சண்முகசுந்தரம் உள்ளிட்ட உடன் நடித்த நடிகர்களின் சிறப்பான நடிப்பு போன்றவை காரணமாக இருந்தன.
நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் ஜொலித்த ராமராஜன் கடந்த 1987 ஆம் ஆண்டு நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருப்பினும் திருமணமான 13 ஆண்டுகளில் இந்த ஜோடி விவாகரத்து பெற்று பிரிந்தது. இவர்களுக்கு அருணா, அருண் என இரட்டை குழந்தைகளும் உள்ளனர். இருவருமே திருமணமாகி செட்டில் ஆகிவிட்டனர். தற்போது சினிமாவில் சாமானியன் படம் மூலம் மீண்டும் ஹீரோவாக களமிறங்கியுள்ளார் ராமராஜன்.
இந்தநிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது பேரன் பாசத்துடன் செய்த செயல் குறித்து நெகிழ்ச்சியுடன் ராமராஜன் பகிர்ந்துக் கொண்டுள்ளார். அந்தப் பேட்டியின்படி, நடிகர் ராமராஜனின் மகன் அருண் ஸ்காட்லாந்தில் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார். அங்கு அவர் குடும்பத்துடன் உணவகம் ஒன்றுக்கு சென்றபோது, அங்கு தமிழ் பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்ததை பார்த்து வியந்துள்ளார். குறிப்பாக தனது தந்தை நடித்த கரகாட்டக்காரன் பட போஸ்டரைப் பார்த்து அருண் பெருமிதம் அடைந்துள்ளார்.
இதைப்பார்த்ததும் அந்த உணவகத்தின் உரிமையாளரிடம் போய் பேசியுள்ளார் ராமராஜனின் மகன் அருண். அப்போது தான் அவரும் தன்னுடைய தந்தையின் ஊரான சொக்கம்பட்டியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. பின்னர், அந்த ஓட்டல் உரிமையாளர், நீங்க பார்க்க அப்பா ராமராஜன் மாதிரியே இருக்கீங்க என்றும், தந்தையும் படங்கள் குறித்தும் பெருமையாக பேசியுள்ளார்.
இதற்கிடையில் ராமராஜனின் பேரன் அங்கிருந்த போஸ்டர்களை எல்லாம் வீடியோ எடுத்து அவருக்கு அனுப்பியுள்ளார். ’செண்பகமே செண்பகமே’ பாட்டு பார்த்ததில் இருந்து ராமராஜனை அவரது பேரன் cow தாத்தா என்று தான் கூப்பிட்டு வருகிறாராம். என்னுடைய போஸ்டரை வெளிநாட்டில் பார்த்து என் பேரன் மிகவும் சந்தோஷப்பட்டுள்ளார். அதனை வீடியோவாகவும் எனக்கு அனுப்பியுள்ளார். அந்த வீடியோ பார்க்கையில் எனக்கும் சந்தோஷமாக இருந்தது. நான் நடிச்சதே கொஞ்ச படங்களாக இருந்தாலும், அது வெளிநாடு வரை பரவி இருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது, என்று கூறி ராமராஜன் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil