Actress Meena donates her organs: என் கணவருக்கு அது மட்டும் நன்கொடையாளர் கிடைத்திருந்தால், அவர் உயிரோடு இருந்திருப்பார், அவரின் நிலை யாருக்கும் வரக்கூடாது, அதனால் நான் உடல் உறுப்பு தானம் செய்கிறேன் என நடிகை மீனா தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை மீனா. தற்போதும் திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர், நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், மாற்று அறுவை சிகிச்சைக்காக நுரையீரல் கிடைக்காததால், கடந்த ஜூன் 29 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மீனா கணவரின் இறப்பு திரைத்துறையினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த துயரத்திலிருந்து தற்போது தான் மீனா மீண்டு வந்து கொண்டிருக்கிறார்.
இதையும் படியுங்கள்: அஜித்- விஜய் போட்டி ஆரம்பித்தது இப்படித்தானா? போட்டு உடைத்த பிரபல இயக்குனர்
இந்த நிலையில் ஆகஸ்ட் 13 உடல் உறுப்பு தான தினத்தில் நடிகை மீனா, தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டு, என் கணவர் நிலை யாருக்கும் வரக்கூடாது என்பதற்காக உடல் உறுப்பு தானம் செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த ட்விட்டர் பதிவில், உயிரைக் காப்பாற்றுவதை விட பெரிய நன்மை எதுவும் இல்லை. உறுப்பு தானம் உயிரைக் காப்பாற்றும் உன்னத வழிகளில் ஒன்று. இது ஒரு வரம். நாள்பட்ட நோய்களுடன் போராடும் பலருக்கு இது 2வது வாய்ப்பு. நான் தனிப்பட்ட முறையில் அதனை எதிர்க்கொண்டேன்.
மறைந்த என் கணவர் சாகருக்கு, நன்கொடையாளர் கிடைத்திருந்தால், என் வாழ்க்கை மாற்றியமைக்கப்பட்டிருக்கும், அவர் ஆசீர்வதிக்கப்பட்டவராக இருந்திருப்பார். ஒரு நன்கொடையாளர் 8 உயிர்களைக் காப்பாற்ற முடியும். உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை அனைவரும் புரிந்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
நன்கொடையாளர், பெறுபவர் மற்றும் மருத்துவர்களுக்கு இடையில் மட்டும் இது சம்பந்தப்பட்டதல்ல. இது குடும்பம், நண்பர்கள், உறவினர்கள், உடன் வேலைப்பார்ப்பவர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இன்று எனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டேன். இது உங்கள் பரம்பரையை வாழ வைப்பதற்கான மிகச் சிறந்த வழி, அன்புடன் மீனா சாகர், என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil