நடிகர்கள் : ஜெயம் ரவி, ராஷி கண்ணா, பொன்வண்ணன், அழகம் பெருமாள், முனீஷ்காந்த், சம்பத்ராஜ், மைம் கோபி
இயக்கம் : கார்த்திக் தங்கவேல்
தயாரிப்பு : சுஜாதா விஜயகுமார்
இசை : சாம் சி எஸ்
கலை வடிவமைப்பு : லால்குடி இளையராஜா
Adanga Maru Review : படத்தின் நாயகன் ஜெயம் ரவி, படத்தின் தலைப்பிற்கு ஏற்றவாறு காவல் துறையின் அழுத்தத்திற்கும், தவறிழைக்கும் மேல் தட்டு மக்களின் அதிகார மிரட்டலுக்கும் அடங்கமால், ரசிகர்களை படம் முழுக்க ரசிக்க வைத்திருக்கிறார். சமுதாயத்திற்கு தேவையான கருத்தை அழுத்தம் திருத்தமாக சொல்லும் படமாக ரசிகர்களுக்கு விருந்தளிக்கின்றது அடங்க மறு.
காவல்துறை உதவி ஆய்வாளராக, புதிதாக பணியில் பொறுப்பேற்றிருக்கும் சுபாஷிடம் (ஜெயம் ரவி), டாஸ்மாக் முன்பு போராட்டத்தில் இறங்கியிருக்கும் மாணவர்களை கட்டுப்படுத்த மேலிடத்தில் இருந்து உத்தரவு வருகிறது. அந்த பிரச்சனையை எவ்வளவு சாதுர்யமாக மாணவர்களிடம் சொல்லி “பிரச்சனைக்கான நிரந்தர தீர்வை” தருகிறார் ஜெயம் ரவி என்பதிலேயே அவருக்கு இந்த சமூகத்தில் இருக்கும் அக்கறையும், இன்றைய மக்கள், படிக்கும் மாணவ சமூகத்தினரிடம் வைத்திருக்கும் நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது. படத்தின் தொடக்கம் இது தான்.
நீதிக்கு கட்டுப்பட்டு, நியாயத்துடன் நடந்து கொள்ளும் காவல் துறை அதிகாரிகள், தன்னுடைய மேலதிகாரிகளால் எவ்வகையான அழுத்தம் சார்ந்த துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் தெளிவாக கூறியிருக்கிறார் இயக்குநர். அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி, அண்ணனின் இரட்டைக் குழந்தைகள், காதலி என்று குடும்பத்திற்கு பொறுப்பான ஒரு ஆணாக நடந்து கொள்கிறார் ஜெயம் ரவி.
அவரின் நிம்மதியையும் சந்தோசத்தையும் கேள்விக் குறியாக்கும் வகையில் ஒரு வழக்கு விசாரணை அவருக்கு தரப்படுகிறது. ஒரு நள்ளிரவில், கட்டி முடிக்கப்படாத பாழடைந்த கட்டிடத்தில் மாணவி ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் காவல்துறையினருக்கு கிடைக்கிறது. இதனை விசாரணை செய்ய உதவி ஆய்வாளர் சம்பவம் நடந்த இடத்திற்கு செல்கிறார். இறந்து கிடக்கும் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது அது கொலையா என்ற ரீதியில் விசாரணை ஆரம்பமாகிறது.
அந்த பெண்ணின் மரணத்திற்கு பின்னால் இருக்கும் மர்மம் என்ன, அப்பெண்ணின் இறப்பிற்கு யார் காரணம், அந்த கொலையாளிகளை ஜெயம் ரவி எப்படியாக கண்டடைகிறார், அதனால் அவருடைய வாழ்வில் ஏற்படும் இழப்புகள் என்னென்ன, அந்த இழப்புகளுக்கு காரணமானவர்களை நியாயமாக தண்டிக்கிறாரா இல்லையா என்பது தான் மீதிக் கதை.
Adanga Maru Review : படத்தின் ப்ளஸ்
படத்தின் கதாநாயகியாக வரும் ராஷி கண்ணாவிற்கு அளவான ஸ்கிரீன் ஷேரிங் தரப்பட்டுள்ளது. விறுவிறுப்பான படத்தில் முடிந்த வரையில் மசால சேர்க்கும் காட்சிகளை தவிர்த்திருக்கிறார்கள்.
முனிஷ்காந்த், ராட்சசன் படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் காவலராக கதாப்பாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார். வலிய வந்து சொல்லப்படும் நகைச்சுவைப் போல் இல்லாமல், எதார்த்தமான வசனங்களால் நடுவில் சிரிக்க வைத்து கைத்தட்டல்களை அள்ளிச் செல்கிறார்.
காவல்துறை அதிகாரிகளாக வரும் சம்பத்ராஜ், மைம் கோபி, அழகம் பெருமாள் – காவல் துறையில் இருக்கும் மூன்று விதமான காவலர்களை நினைவூட்டும் வகையில் பாடி லாங்குவேஜ்ஜில் மிரட்டியுள்ளனர்.
காவல் துறையில் நீதி, நேர்மை, நியாயம் என்று வாழும் காவலர்களையும் இந்த படத்தில் காட்டியுள்ளனர். ஒபே யுவர் ஆர்டர் என்ற சொல்லுக்கு மட்டும் அடிபணியும் காவலர்களும் இந்த படத்தில் வந்து செல்கிறார்கள். அதே போல், பணத்திற்கும் அதிகாரத்திற்கும் ஆசைப்பட்டு தானும் தன் கடமையை செய்யாமல், கடமையைச் செய்யும் காவலர்களுக்கு இடையூறாக இருக்கும் உயர் அதிகாரிகளையும் காட்டியுள்ளார் இயக்குநர்.
போதைக்கு அடிமையாகும் இளைஞர்களால் இந்த சமூகத்திற்கு ஏற்படும் விளைவுகளை இப்படத்தில் காட்டியதிற்கு இயக்குநருக்கு சபாஷ் சொல்லலாம். பெண்களின் பாதுகாப்பு இக்காலத்தில் யாரால் எல்லாம் கேள்விக்குறியாக்கப்படுகிறது என்று திரையில் வந்து செல்லும் காட்சிகள் பயத்தினையும், கூடுதல் எச்சரிக்கையினையும் இயல்பாய் தந்துவிட்டு செல்கிறது.
பாலியல் துன்புறுத்தல் மட்டும் வன்கொடுமைகளுக்கு ஆகச்சிறந்த ஒரே தீர்வு மரணம் என்பதை அழுத்தம் திருத்தமாக மீண்டும் நிறுவியுள்ளது இப்படம்.
இந்த படத்தின் ஆர்ட் டிரைக்சன் : மிக நுணுக்கமான கலையை, மிகவும் அழகியலோடு வெளிப்படுத்தியிருக்கிறார். இரட்டையர்கள் வாழும் வீடு எப்படி இருக்கும் என்பதையும் கூட மிக துல்லியமாக வடிவமைத்துக் கொடுத்துள்ளார் லால்குடி இளையராஜா. பாழடைந்த கட்டிடம், பழைய வேன், காவல்துறையினரின் ஆவண காப்பகம், கோல்ஃப் க்ளப் – காட்சிக்கு மாறாக ஒரு பொருளும் இல்லாத நேர்த்தி.
Adanga Maru Review படத்தின் மைனஸ்
அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் சிறப்பாக இப்படத்தை இயக்கியுள்ளார். ஆனால் ஏற்கனவே, தனி ஒருவன் போன்ற படத்தில் நடித்திருந்த ஜெயம் ரவியின் கலைப் பசிக்கு போதுமான தீணியாக அடங்க மறு அமையவில்லை.
ஆக்சன்/த்ரில்லர் என்று படத்தை கொண்டு போனாலும், விரல் நகம் கடித்துக் கொண்டு என்ன அடுத்து நடக்குமோ என்ற விறுவிறுப்பான காட்சிகள் படத்தில் மிஸ்ஸிங்.
ஒரு காவல் துறை உதவி ஆய்வாளருக்கு, கோடிங், கேட்ஜெட் யூசேஜ், டிராக்கிங் செட்டப், ஆட்டோ டெலிட்டிங் மெசேஜ்சஸ், வீடியோ கேம் மேக்கிங் போன்ற திறன்கள் எங்கிருந்து கிடைக்கப்பெற்றது என்பதை குறிப்பிட்டுக் காட்டும் ஒரு காட்சியும் இல்லாமல் இருக்கிறது. டெக் ஸ்டூடண்ட் என்று நாமாக ஒரு அனுமானத்திற்கு வர வேண்டியாகதாக இருக்கிறது.
மேலும் படிக்க : தமிழ் ராக்கர்ஸில் வெளியான அடங்க மறு… அதிர்ச்சியில் படக்குழுவினர்
சமரசமற்ற காவல்த்துறையினருக்கு சமர்ப்பணமாய் அடங்க மறு
பெண்களை எப்படியெல்லாம் வளர்க்க வேண்டும் என்று அதிகம் மெனக்கெடும் பெற்றோர்கள், அதே அக்கறையினை ஆண் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதிலும் காட்ட வேண்டும். இல்லையென்றால் அது அனைவருக்கும் பிரச்சனை தான். அதிகார மிரட்டலுக்கு சற்றும் பணியாமல் சிறப்பான பணிகளை மேற்கொண்டு வரும் அனைத்து காவலர்களுக்கும் சமர்ப்பணமாய் அடங்க மறு என்பதை படத்தின் டைட்டில் கார்டே நிறுவுகிறது. இன்றைய காலக்கட்டத்திற்கு தேவையான கருத்தினை சமரசமில்லாமல் வெளியிட்டுள்ளது அடங்க மறு.