Advertisment
Presenting Partner
Desktop GIF

’நிறம், தோற்றம் மீதான விமர்சனங்களை நிறைய எதிர் கொண்டேன்’ - ஐஸ்வர்யா ராஜேஷ்

எனது நடிப்பை எப்போது திரையில் பார்த்தாலும், இன்னும் கூட நன்றாக நடித்திருக்கலாமோ என்றே தோன்றும். திருப்தியே கிடைக்காது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Aishwarya Rajesh Tedx Talk Video

Aishwarya Rajesh Tedx Talk Video

Aishwarya Rajesh: தான் கடந்து வந்த பாதையைப் பற்றி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisment

டெட் (TED) என்ற அமெரிக்க ஊடக நிறுவனம், உலகம் முழுவதும் டெட் எக்ஸ் டாக் (Ted x talk) என்ற பெயரில் பொது நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இதில் பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களும், தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள். இந்த உரைகள் பலருக்கும் தன்னம்பிக்கையைத் தரும் விதமாக அமையும்.

ஒரே நாளில் விற்றுத் தீர்ந்த 2.4 லட்சம் லட்டுகள்; திருப்பதி பிரசாதம்னா சும்மாவா?

அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் திருச்சியில் நடந்த டெட் எக்ஸ் நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துக் கொண்டு, தான் கடந்து வந்த பாதை குறித்த அனுபவங்களைப் பகிர்ந்தார். இந்த உரை தற்போது இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

அதில் பேசிய ஐஸ்வர்யா, "நான் பிறந்து வளர்ந்தது சென்னையில். நடுத்தர வர்க்கத்துக்கும் கீழே இருந்த ஒரு குடும்பம். ஹவுஸிங் போர்டில் தான் நான் வளர்ந்தேன். எங்கள் வீட்டில் அம்மா, அப்பா, 3 அண்ணன்கள், நான் என மொத்தம் 6 பேர்.

என் வாழ்க்கையில் நான் இன்று இருக்கும் நிலைக்கு என் அம்மா தான் முக்கியக் காரணம். என்னுடைய 8-வது வயதில் என் அப்பாவை இழந்தேன். அதன் பிறகு என் அம்மா தான் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டார். அப்பாவின் இழப்பை உணராத வகையில் எங்களை வளர்த்தார். அம்மா ஒரு போராளி. அதிகம் படித்தவர் அல்ல. என் தாய்மொழி தெலுங்கு. அம்மாவுக்கு அது மட்டும் தான் தெரியும்.

Tamil Cinema Celebrities Latest Images, Aishwarya Rajesh ஐஸ்வர்யா ராஜேஷ்.

மும்பைக்குத் தனியாகச் சென்று, அங்கு மலிவு விலையில் புடவைகள் வாங்கி வந்து, வீடு வீடாக, பேருந்துகளில் எடுத்துச் சென்று அவற்றை விற்பார். இன்னொரு பக்கம் எல்.ஐ.சி ஏஜெண்டாகவும் இருந்தார். இப்படி எங்களுக்கு நல்ல கல்வி தர, உணவு தர நிறைய வேலைகள் செய்தார்.

எனக்கு 12 வயதான போது என் மூத்த அண்ணன் ராகவேந்திரா இறந்து போனார். காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறினார்கள். ஆனால் எங்களுக்கு அது தற்கொலையா, கொலையா, விபத்தா எதுவும் தெரியாது. சில வருடங்கள் போயின. எனது இரண்டாவது அண்ணன், எஸ்.ஆர்.எம் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து முடித்தார். அவருக்கு 30,000 - 40,000 ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலை கிடைத்தது. என் அம்மா சந்தோஷப்பட்டார். ஆனால் இன்னொரு சோகம் நடந்தது. அந்த அண்ணன் ஒரு சாலை விபத்தில் மரணமடைந்தார். அது மிக மிகக் கடினமாக இருந்தது. என் அம்மா முற்றிலுமாக நம்பிக்கையிழந்து விட்டார்.

இதுபோன்ற ஒரு சூழ்நிலையைப் பார்க்கும்போது எந்தப் பெண்ணுக்குமே, எப்படியாவது குடும்பத்தை ஆதரிக்க வேண்டும் என்று தான் இருக்கும். எனக்கும் அப்படித்தான் இருந்தது. 11-ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் முதல் முதலில் வேலை செய்ய ஆரம்பித்தேன்.

ஒரு புதிய பொருளை விளம்பரம் செய்ய சூப்பர் மார்க்கெட்டில் நின்று கொண்டு அங்கு வருபவர்களிடமெல்லாம் அதைப் பற்றிச் சொல்ல வேண்டும். பெசன்ட் நகரில் ஒரு சூப்பர் மார்க்கெட் வாசலில் நின்று கொண்டு, அந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு வரும் வாடிக்கையாளர்களைப் பிடித்து, குறிப்பிட்ட பொருளுக்கு விளம்பரம் செய்ய வேண்டும். எனக்குச் சம்பளமாக ரூ.225 கிடைத்தது.

அப்படியே என்ன வேலையெல்லாம் செய்ய முடியுமோ செய்தேன். பிறந்த நாள் விழாக்கள், பொது நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது என்று வேலை செய்து 500, 1000 ரூபாய் என சம்பாதித்தேன். ஒரு மாதத்துக்கு 5000 ரூபாய் வரை சம்பாதித்தேன். ஆனால் ஒரு குடும்பத்துக்கு அது போதாது இல்லையா? எனவே டிவி தொடர்களில் நடிக்க முடிவெடுத்தேன்.

என் முதல் தொடருக்கு எனக்கு 1500 ரூபாய் கிடைத்தது. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை படப்பிடிப்பு. ஆனால் ஒரு மாதத்துக்கு 5-6 நாட்கள் தான் படப்பிடிப்பு. அப்படியென்றால் மொத்தம் 5-6 ஆயிரம் தான் கிடைக்கும். அது எப்படி போதும்?

Tamil Cinema Celebrities Latest Images, Aishwarya Rajesh ஐஸ்வர்யா ராஜேஷ்

அது எப்படி தொடரின் நாயகிகளுக்கு மட்டும் 20 ஆயிரம் 25 ஆயிரம் ரூபாய் எனக் கிடைக்கிறது என அம்மாவிடம் கேட்டேன். அதற்கு சினிமாவில் நடித்திருக்க வேண்டும். நல்ல படங்களில் நடித்து, அடையாளம் கிடைத்து, அங்கு பிரபலமானால் தான் அதிக சம்பளம் கிடைக்கும் என்று என் அம்மா சொன்னார்.

சரி சினிமாவில் நடிக்கலாம் என்று முயற்சி செய்தேன். நடுவில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அதில் முதல் பரிசு பெற்றேன். அது எனக்கு சினிமாத் துறையில் ஒரு அறிமுகம் கிடைக்க உதவியது. மானாட மயிலாட டைட்டில் வின்னர் என்று கூறி, பலரை அணுகி வாய்ப்புகள் கேட்டேன். நான் நடித்த முதல் படம் 'அவர்களும் இவர்களும்'. அந்தப் படம் சரியாக ஓடவில்லை. நான் தொடர்ந்து வாய்ப்புகளுக்கு முயற்சி செய்து கொண்டிருந்தேன்.

பாலியல் தொல்லை மட்டுமல்ல, என் நிறம், என் தோற்றம் குறித்த விமர்சனங்களையும் எதிர்கொண்டேன். எனக்கு வடக்கிலிருந்து வந்து பிரபலமான பெரிய நடிகைகளைப் போல உடை உடுத்தத் தெரியாது, அதற்கும் கேலி பேசினார்கள், ஒரு வேளை நான் தமிழ் பேசியதால் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையோ என்னவோ.

Aishwarya Rajesh வைப்ரண்ட் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்...

ஒரு சில இயக்குநர்கள் 'நீங்கள் கதாநாயகியாக நடிப்பதற்கு சரியாக இருக்க மாட்டீர்கள்' என்றே சொன்னார்கள். உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள், சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நீங்கள் நடிக்கலாம் என்றார்கள். இன்னொரு பெரிய இயக்குநரிடம் வாய்ப்பு கேட்டேன், அவர் படத்தில் நகைச்சுவை நடிகருக்கு ஜோடியாக என்னை நடிக்க வைக்கிறேன் என்றார். நான் மறுத்துவிட்டேன்.

இப்படியே 2-3 வருடங்கள் கடந்தது. எனக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. பிறகு 'அட்டகத்தி' படத்தில் அமுதா என்கிற சிறிய கதாபாத்திரத்தில் நடித்தேன். அது சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் எனக்குப் பெயர் வாங்கித் தந்தது. என்னை அடையாளம் கண்டு கொள்ள ஆரம்பித்தார்கள். தொடர்ந்து 'பண்ணையாரும் பத்மினியும்', 'ரம்மி', 'திருடன் போலீஸ்' என நாயகியாக நடித்து வந்தேன்.

இதன் பின் 'காக்கா முட்டை' என்ற படம் தான் என் வாழ்க்கையை மாற்றியது. அது, குடிசைப் பகுதியில் வாழும், இரண்டு குழந்தைகளின் அம்மா கதாபாத்திரம். வேறு யாரும் அதில் நடிக்க முன்வரவில்லை. ஆனால் அதிலென்ன தவறு இருக்கிறது என்று எனக்குத் தோன்றியது. அந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனது உள்ளுணர்வு சொன்னதாலோ என்னவோ, நான் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

aishwarya rajesh, thalapathy vijay ஐஸ்வர்யா ராஜேஷ்

நான் இன்றும் பெரிய நடிகை கிடையாது, அன்றும் பெரிய நடிகை கிடையாது. அந்தப் படத்தின் இயக்குநர் மணிகண்டன் எனக்கு நடிக்கக் கற்றுத் தந்தார். நான் ஒவ்வொருவரையும் பார்த்து, ஒவ்வொரு படத்திலும், ஒவ்வொரு இயக்குநரிடமும் கற்றுக்கொண்டே இருக்கிறேன். எனது நடிப்பை எப்போது திரையில் பார்த்தாலும், இன்னும் கூட நன்றாக நடித்திருக்கலாமோ என்றே தோன்றும். திருப்தியே கிடைக்காது.

காக்கா முட்டை படம் பெரிய வெற்றி பெற்றது. பெரிய பெரிய ஜாம்பவான்களிடமிருந்து எல்லாம் பாராட்டு கிடைத்தது. படம் பல திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டு பெற்றது. ஆனால் அடுத்த ஒரு வருடத்துக்கு எனக்கு பெரிய நடிகர்களுடன் நடிக்க வேறெந்த வாய்ப்பும் வரவில்லை.

ஒரு சிலர் என் திறமையை மதித்து வாய்ப்பு தந்தார்கள். தனுஷுடன் 'வட சென்னை', விஜய் சேதுபதியுடன் 'தர்மதுரை' ஆகிய படங்களில் நடித்தேன். பிறகும் எனக்கு எந்தப் பெரிய நாயகர்களுடனும் நடிக்க வாய்ப்பு வரவில்லை. சரி, என் படத்தில் நானே நாயகனாக இருக்கிறேன் என முடிவு செய்தேன். அப்படித்தான் 'கனா' என்ற படத்தில் நடித்தேன். அந்தப் படம் எல்லாவற்றையும் மாற்றியது.

ஒரு கிரிக்கெட் வீராங்கனையைப் பற்றிய படம் அது. அதற்காக நான் 6 மாதங்கள் பயிற்சி எடுத்தேன். இயக்குநர் அருண்ராஜா காமராஜிடம், என் மீது நம்பிக்கை வையுங்கள், நான் கண்டிப்பாக அந்தக் கதாபாத்திரத்தில் நன்றாக நடிப்பேன் என்று கோரினேன்.

அந்தப் படத்தில் நடித்ததில் எனக்கு நிறைய விருதுகள், பாராட்டுகள் கிடைத்தன. பெண்களை மையமாக வைத்து உருவாகும் பட வாய்ப்புகள் என்னைத் தேடி வந்தன. இப்போது என் கையில் 6-7 படங்கள் இருக்கின்றன. எல்லாப் படங்களிலும் நான் தான் பிரதானம். இது நடந்ததற்குக் காரணம், என் மீது நான் வைத்த நம்பிக்கை.

சென்னையில் கொரோனா: சுகாதாரப் பணியாளர்களிடையே அதிக பாஸிட்டிவ் எண்ணிக்கை

என் நிறம் மீது, என் தோற்றம் மீது நிறைய விமர்சனங்கள் வைத்திருக்கிறார்கள். பாலியல் தொல்லையும் எதிர் கொண்டிருக்கிறேன். ஆனால் அதை எப்படி கையாள்வது என்பது எனக்குத் தெரியும். எனக்கு யாராவது தொல்லை கொடுக்க முயன்றால் அவர்களுக்கு எப்படி பதிலடி தருவது என்பது எனக்குத் தெரியும். எனக்கு அந்த அளவுக்குத் துணிச்சல், தைரியம் இருந்தது. எல்லாப் பெண்களும் அப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Aishwarya Rajesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment