நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் நகைகளை திருடிய பெண் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்தப் பணிப்பெண் ரூ.1 கோடிக்கு நிலம் வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா இயக்குனராக இருந்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்னர் தன் வீட்டில் வைத்திருந்த தங்கம், வைரம் உள்ளிட்ட 60 சவரன் நகைகள் திருடு போனதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். திருட்டு தொடர்பாக வேலைக்காரர்கள் 3 பேர் மீது சந்தேகம் இருப்பதாகவும் ஐஸ்வர்யா தெரிவித்திருந்தார்.
இதையும் படியுங்கள்: வணங்கான் பட துணை நடிகை மீது தாக்குதல்.. காவல் நிலையத்தில் புகார்
மேலும், அந்த நகைகளை தனது தங்கையின் திருமணத்தின்போது அணிந்து இருந்ததாகவும், பின்னர் அவற்றை லாக்கரில் வைத்துவிட்டதாகவும், கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தான் தனக்கு அந்த நகைகள் காணாமல் போனது தெரிய வந்ததாகவும் புகாரில் தெரிவித்திருந்தார். நகைகள் இருந்த லாக்கர் மூன்று முறை இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், லாக்கர் சாவி இருக்கும் இடம் வேலைக்காரர்களுக்கு தெரியும் என்றும் ஐஸ்வர்யா புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
ஐஸ்வர்யா குறிப்பிட்டு இருந்த பணியாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் அவரது கணவரிடம் நடத்திய விசாரணையில், ஈஸ்வரி நகைகளை திருடியது தெரியவந்தது. திருடி நகைகளை விற்று ஈஸ்வரி அவரது கணவரின் வங்கி கணக்கில் சேமித்து வைத்துள்ளார். மேலும் ஈஸ்வரி குடும்பத்தினர் சமீபத்தில் ரூ.1 கோடிக்கு நிலம் வாங்கியிருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
கடந்த 2019ல் ஈஸ்வரி வங்கியில் கடன் பெற்று, சோழிங்க நல்லூர் அருகே 95 லட்சத்திற்கு இடம் வாங்கியுள்ளார். அந்தக் கடனை 2 வருடங்களில் திருப்பியும் செலுத்தியுள்ளார். மேலும் 6 மாதங்களுக்கு முன்பே ஐஸ்வர்யா வீட்டிலிருந்து ஈஸ்வரி வீட்டில் இருந்து வேலையில் நின்றிருப்பதும் போலீசாரின் சந்தேகத்தை அதிகப்படுத்தியது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், ஈஸ்வரி குற்றம் செய்திருப்பது உறுதியானது. மேலும், ஈஸ்வரியை கைது செய்த போலீசார், இதுதொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தற்போது சுமார் 30 சவரன் நகைகளை ஈஸ்வரியிடம் இருந்து போலீசார் மீட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil