Dhanush's Next Bollywood movie : நடிகர் தனுஷ் மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் கமிட்டாகியுள்ளார். ராஞ்சனா படத்தின் மூலம், அவரை பாலிவுட்டில் அறிமுகப்படுத்திய ஆனந்த் எல் ராய் தான் அந்தப் படத்தை இயக்குகிறார். ’அட்ராங்கி ரே’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாரா அலி கான் நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் அக்ஷய் குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.
'அட்ராங்கி ரே’ திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தேசிய விருது பெற்ற திரைக்கதை எழுத்தாளர் ஹிமான்ஷு சர்மா என்பர் இந்தப் படத்திற்கான திரைக்கதையை எழுதுகிறார். ஜீரோ, ராஞ்சனா, தனு வெட்ஸ் மனு உள்ளிட்ட பல படங்களுக்கும் அவர் திரைக்கதை எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
2013-ல் வெளியான ராஞ்சனா படத்தின் மூலம், பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக, இயக்குநர் ஆனந்த் எல் ராயுடன் இணைகிறார் தனுஷ்.
இது குறித்து சாரா அலிகான் தனது இன்ஸ்டாகிராமில், “எனது அதிர்ஷ்டத்தை என்னால் நம்பவே முடியவில்லை. எனது அடுத்த படம் அட்ராங்கி ரே. ஆனந்த் சாருடன் இணைந்து பணியாற்றுவது எனது பாக்கியம். மிகவும் திறமையான, பணிவான தனுஷ் மற்றும் என்னுடன் இணைந்து பணியாற்றவிருக்கும் அக்ஷய் குமார் சாருக்கு நன்றி” எனத் தெரிவித்து, சில படங்களையும் பகிர்ந்திருந்தார்.
முதன்முறையாக ஆனந்த் எல் ராயுடன் இணைந்து பணியாற்றுவதில் உற்சாகமாக இருக்கும் அக்ஷய் குமார், “அவர் (ஆனந்த் எல் ராய்) படத்தின் கதையை என்னிடம் விவரித்தபோது, நான் 10 நிமிடங்களுக்குள் ‘எஸ்’ சொன்னேன். இது ஒரு சவாலான கதாபாத்திரம், அதே நேரத்தில், மிகவும் சிறப்பு வாய்ந்ததும் கூட. நான் அதை என் வாழ்நாள் முழுவதும் நினைவில் கொள்வேன்” என்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil