Bigg Boss Tamil 3 Episode 59: பிக் பாஸ் வீட்டில் தற்போது பள்ளி டாஸ்க் நடந்து வருவதால், மாணவர்கள் அனைவருக்கும் தமிழ் பாடம் எடுக்கத் தொடங்கினார் தலைமையாசிரியர் சேரன். ஔவையார் எழுதிய ஆத்திச்சூடி பாடம் எடுத்து விட்டு, அதைத் தொடர்ந்து அனைவருக்கும் ஒவ்வொரு வாக்கியம் அளித்து ஒப்புவிக்கச் சொன்னார். லாஸ்லியா, கவின், தர்ஷன் உள்ளிட்டோரின் வாக்கியங்கள் கவர்ந்தன.
பின்னர் வழக்கம் போல் பிக் பாஸிடமிருந்து கட்டளை ஒன்று வந்தது. அதில், மாணவர்கள் அனைவரும் இந்த டாஸ்க் குறித்து ஒரு பாடல் எழுதி பாட வேண்டும் என கட்டளையிட்டார். அதன்படி ஆண் போட்டியாளர்கள் மனப்பாட பாடலை பாட, அதற்கு பெண் போட்டியாளர்கள் குழுவாக சேர்ந்து நடனமாடினர். அதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுடன் ஆசிரியர்கள் சேரன் மற்றும் கஸ்தூரி உடனிருக்க குரூப் ஃபோட்டோ எடுக்கப்பட்டது.
பின்னர் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும், தங்களின் விருப்பத்திற்குரிய ஆசிரியர்கள் பற்றி பேசும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன்படி, ஒவ்வொருவரும் தனித்தனியாக வந்து பேசினர். புற்றுநோயுடன் போராடி அதில் வெற்றி கண்ட தனது மகள் தான் தன்னுடைய ஆசான் என கஸ்தூரி கூறியது பார்வையாளர்களின் கண்களையும் பதம் பார்த்தது. அதோடு, பிக்பாஸ் வீட்டினரும் சோகத்தில் மூழ்கினர். கண்ணீரை கட்டுப் படுத்த முடியாத கஸ்தூரியை ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஆறுதல் படுத்தினர்.
வாத்து பிரச்னையால் பிக்பாஸ் வீட்டில் வெடித்த சண்டை!
பின்னர் பேசிய சேரன், தன்னுடைய கல்லூரி ஆசிரியர் மற்றும் தனது இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாருக்கும் நன்றிகளை தெரிவித்தார். தனது முதல் படமான “துள்ளுவதோ இளமை” படத்தின் இயக்குநர் செல்வராகவனுக்கு நன்றி தெரிவித்தார் ஷெரின்.
ஆசிரியர்கள் குறித்து நினைவுக்கூறும் நிகழ்ச்சி முடிந்தவுடன், லாஸ்லியாவிடம் பேசுவதை கவின் குறைத்துக் கொள்ளும் படி கூற வேண்டும் என தர்ஷனிடம் கூறினார் சேரன். அதற்கு, அது உங்களுடைய விவகாரம், அதில் நான் தலையிட முடியாது என்று தெரிவித்தார் தர்ஷன்.
சேரனும் தர்ஷனும் பேசிக் கொண்டிருக்கும் போது, வெளியே லாஸ்லியாவும், கவினும் பேசிக் கொண்டிருந்தனர். யார் முதலில் தூங்கச் செல்வது என அவர்களுக்குள் அந்த உரையாடல் நிகழ்ந்து கொண்டிருந்தது. லாஸ்லியாவின் செய்கைகளில் தொடர்ந்து கவலைப்பட்டு வருகிறார் சேரன். உண்மையோ பொய்யோ, தன் மகள் மீது தந்தை கொண்டிருக்கும் பயமும், கவலையும் சேரனிடம் இருக்கவே செய்கிறது. ஆனால் லாஸ்லியா அதற்கு நேர்மாறாக இருப்பது, பார்வையாளர்களிடம் அதிருப்தியை வரவழைத்திருக்கிறது.