/tamil-ie/media/media_files/uploads/2019/09/Bigg-boss-tamil-3.jpg)
Bigg Boss Tamil 3 day 77, 08.09.19, Cheran eviction, Cheran secret room
Bigg Boss Tamil 3 Episode 77: பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் 3 வாரங்களில் முடிவடைய இருக்கிறது. தற்போது 77 நாட்களைக் கடந்திருக்கும் இந்நிகழ்ச்சியிலிருந்து நேற்று சேரன் வெளியேற்றப்பட்டார். ஆனால் அவர் நிகழ்ச்சியில் பங்கு கொள்ள இன்னொரு வாய்ப்பு அளிக்கப்பட்டு, ரகசிய அறையில் தங்க வைக்கப்பட்டார்.
பிக் பாஸ் வீட்டில் 12 வாரம் கழிச்சு தலைவரான லாஸ்லியா!
முன்னதாக இங்கு எல்லோரும் காதல் பிரச்சனையை பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம் என்று சேரன் கூறினார். இதில் வனிதா வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, ஷெரினை மீண்டும் டார்கெட் செய்து பேசினார். வனிதா, சேரன் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்த சாண்டி, தர்ஷன் ஆகியோர் காதில் ரத்தம் வருகிறது என்றனர்.
பின்னர் பேசிய கமல் ஹாசன், ”கல்வியின் வடிவம் திசை மாற வேண்டிய நேரம் இது என்று உலகத்தின் அறிஞர்கள் விரும்புகிறார்கள். மனப்பாடம், செய்வது, கணக்கு வாய்ப்பாடு, சொன்னதை திரும்பச் சொல்லி ஒப்பிப்பது, இது போன்ற விஷயங்களின் முக்கியத்துவம் என்ன என்று சிந்தனையாளர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்துவிட்டார்கள். வாழ்க்கையின் நோக்கம், வாழ்வதற்கான அறவழிகள் என்ன என்பதை அவர்களுக்கு சொல்லித்தர வேண்டும். மேலே நாட்டில், ஒரு பல்கலைக்கழகத்தில், எட்வர்டு டி போனோ சிந்திப்பதை கற்றுக்கொடுக்கிறார். இன்று நாம் அதை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் போது, இந்த பிக் பாஸ் 3 நிகழ்ச்சி போன்றவைகள் எத்தகைய ஒரு கருவி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.
பின்னர் வழக்கம் போல் பிக் பாஸ் போட்டியாளர்களிடம் உரையாடலில் ஈடுபட்டார். இந்த வார காலர் ஆஃப் த வீக்கில், ரசிகர் ஒருவர் கவினிடம், “இதுவரை கேப்டனாகவும் தேர்வு செய்யப்படவில்லை. சிறப்பாக பணியாற்றியவருக்காகவும் உங்களது பெயரை யாரும் பரிந்துரைக்கவில்லை, ஏன்?” என்றார். இதற்கு பதில் தெரியாமல் முழித்த கவின், அவரிடம் மன்னிப்பு கேட்டார்.
பட்டப்பெயரில் விருது கொடுத்ததற்கு, கோபப்படுவதற்கும், மரியாதை இல்லாமல் பேசுவதற்கும் ஒன்றுமில்லை. இது வெளியில் இருப்பவர்கள் சொல்வதற்கு ஏற்ப வழங்கப்படவில்லை. மாறாக, அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தான் வழங்கினார்கள். சபை நாகரீகத்தை தெரிந்துக் கொள்ள வேண்டும். பிடிக்கவில்லை என்றால், தூக்கி எறியத் தேவையில்லை என்று லாஸ்லியாவிற்கு அறிவுரை கூறினார் கமல்.
எலிமினேஷன்
பின்னர் எவிக்ஷன் ப்ராசஸிற்கு வந்த கமல், யாரெல்லாம் இருக்க விரும்புகிறீர்கள்? யாரெல்லாம் வெளியில் செல்ல ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டார். தனக்கு மக்கள் ஆதரவு இருக்கும் என்பதால், நான் இங்கு இருப்பேன் என்று முகென் கூறினார். தனக்கு இதுதான் முதல் நாமினேஷன் என்பதால் கொஞ்சம் பயமாக இருக்கிறது என்றார் ஷெரின். தொடர்ந்து, சேரன், லாஸ்லியா இருவரும் தங்களுக்கு வெளியில் செல்ல ஆசையிருப்பதாக கூறினர். ஆனால், கவின் மட்டும் கடந்த வாரமே செல்லலாம் என்று ஆசைப்பட்டேன். இந்த வாரம் வரை வந்துவிட்டேன். எனக்கு எது நடந்தாலும் ஓகேதான் என்றார்.
யாரெல்லாம் சேரன் இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள், யாரெல்லாம் லாஸ்லியா இருக்க வேண்டுமென நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, ”ஷெரின் மட்டும் சேரன் இருந்தால் நன்றாக இருக்கும் என்றார். வனிதா, கவின், தர்ஷன், சாண்டி, முகென் ஆகியோர் லாஸ்லியா இருக்க வேண்டும் என்றனர். இறுதியில் சேரன் தனக்கு வெளியேற ஆசை இருப்பதாக கூறினார். இதன் மூலம், சேரனே வெளியேற்றப்பட்டதாக கமல் ஹாசன் அறிவித்தார்.
அறிவிப்பு வெளியானதும், லாஸ்லியா அழுதார். சேரனிடம் நீங்கள் செல்லக்கூடாது. நான்தான் வெளியேற வேண்டும் என்றார். அதோடு சேரன் வெளியேறுவதால் ஷெரினும் அழுதார்.
சேரன் வெளியேற்றப்பட்ட பிறகு, ”இது ஏமாற்று வேலை. உள்ளே ஒன்று பேசுகிறார்கள். வெளியில் ஒன்று பேசுகிறார்கள். அப்படியிருக்கும் போது சேரன் வெளியேற்றப்பட்டது தவறு. எல்லாமே தப்பாக இருக்கிறது” என்றார் வனிதா.
சீக்ரெட் ரூமில் சேரன்!
சேரனை வழியனுப்பும் நேரத்தில் பிக்பாஸிடமிருந்து ஓர் அறிவிப்பு வெளியானது. அதில், “சேரன், நீங்கள், மீண்டும் பிக் பாஸ் வீட்டில் தொடர ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. நீங்கள் ரகசிய அறைக்கு செல்லலாம்” என்று அறிவித்தார் பிக் பாஸ். ஆனால் எத்தனை நாட்கள் சேரன் அங்கே இருப்பார் என்று அறிவிக்கப்படவில்லை. இதுவும் ஒரு புதுவித அனுபவமாக இருக்கிறது என்றவாறு ரகசிய அறைக்குள் சென்றார் சேரன்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.