Bigg Boss Tamil 3 Episode 82: நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டுக்கு விசிட் அடித்தனர். அந்த வகையில், 82-ம் நாள் நிகழ்ச்சியில் கவினின் நண்பன் பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் வீட்டிற்கு வந்தார். அவர் வரும் போது ’என் ஃப்ரண்ட போல யாரு மச்சான்’ என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டது.
Advertisment
கவினிடம் பேசிய பிரதீப், “யாருக்காகவும் நீ விட்டுக் கொடுக்க வேண்டாம். உலகத்தில் நீ தான் புத்திசாலி மாதிரி பேசக் கூடாது. நீ உனக்காக ஜெயிக்க வேண்டாம். உனது அப்பா, அம்மா, எனக்காக ஜெயிக்க வேண்டும். யாரையும் காயப்படுத்தாமல் இந்த உலகத்தில் ஜெயிக்க முடியாது.
இருக்கும் திறமையை கொண்டு முன்னேற வேண்டும். திறமை இல்லை என்றால் அதோடு வெளியேறிவிடலாம்” என்றார். இன்னும் ஒருபடி மேலே சென்ற அவர், ”இவ்வளவு மோசமாக கேம் விளையாடியதற்கு, நம்பியவர்களை கைவிட்டதற்கு, இங்குள்ள போட்டியாளர்களை காயப்படுத்தியதற்கு, நான் உன்ன செய்யலாம்ன்னு இருக்கேன். நீ நல்லா விளையாடி டைட்டில் ஜெயித்தாய் என்றால், அப்போது மேடையில் வைத்து எனக்கு இதை திருப்பிக் கொடு” என்றவாறு கவினின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
முன்னதாக, ”முதலில் உங்களது பெற்றோருக்கு அதிகப்படியாக முன்னுரிமை கொடுங்கள்” என்றும் லாஸ்லியாவிடம் கூறினார் பிரதீப். அவர் வெளியில் சென்ற பிறகு மற்ற கவினை அறைந்தது குறித்து மற்ற போட்டியாளர்கள் விவாதம் செய்தனர். லாஸ்லியாவும், ”நீ உன்னுடைய விளையாட்டை மட்டும் விளையாடு, யாருக்காகவும் விட்டுக் கொடுக்க வேண்டாம்” என்று கவினுக்கு அறிவுரை வழங்கினார்.
பின்னர் ஷெரினின் அம்மா யசோதாவும், அவரது சகோதரி ஸ்ரீஜாவும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தனர். ஷெரினின் அம்மா அனைத்துப் போட்டியாளர்களுடனும் சகஜமாக பேசி பழகினார். ஷெரினை தனியாக அழைத்துப் பேசிய ஸ்ரீஜா, ”வெளியில் நல்ல பெயர் இருக்கு. யாருக்காகவும் விட்டுக் கொடுக்க வேண்டாம். வனிதா உன்னுடைய உண்மையான தோழி இல்லை. யாரையும் நம்ப வேண்டாம்” என்றார்.
பின்னர் தான் கவினை பார்க்கத்தான் வந்ததாக ஷெரினின் சகோதரி ஸ்ரீஜா கூற, அதற்கு எதுவாக இருந்தாலும் வெளியில் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறி சிரித்தார் கவின். சாண்டியும், ஷெரினின் அம்மாவும் ’முன்தினம் பார்த்தேனே’ என்ற பாடலுக்கு நடனம் ஆடி, அனைவரையும் மகிழ்ச்சிப் படுத்தினர். சேரனின் பாசம் கிடைத்ததை அப்பாவின் பாசம் கிடைத்ததாக போல கருதுவதாகவும், அவர் கடந்த வாரம் வெளியில் சென்ற போது எனக்கு இதயமே நொறுங்கிவிட்டது என்றும், ஒவ்வொரு நிமிடமும் அவர் தான் தனக்கு ஆறுதல் கொடுத்தார் என்றும் கூறினார் ஷெரின்.
இதைத் தொடர்ந்து ஷெரின், யசோதா, ஸ்ரீஜா மூன்று பேரும் ’பாப்பா பாடும் பாட்டு, கேட்டு தலைய ஆட்டு’ என்ற பாடலைப் பாடிவிட்டு, அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து விட்டு அங்கிருந்து வெளியேறினர்.
இதைத் தொடர்ந்து தனது மகள் லாலாவிற்காக காத்துக் கொண்டிருந்தார் சாண்டி. ஒரு கட்டத்தில் அவர் வாயில் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார். அவருடன் மற்ற போட்டியாளர்களும் காத்துக்கொண்டிருந்தனர். ’ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு’ என்ற பாடலுடன் சாண்டியின் மகள் நடந்து வர, அவரைக் கட்டிப்பிடித்து கண்ணீர்விட்டு அழுதார் சாண்டி. பின்னர் மகளுடன் ஓடி பிடித்து விளையாடி ஆசைத் தீர கொஞ்சினார். இதோடு அனைத்துப் போட்டியாளர்களின் குடும்பத்தினரும் வந்து போகும் வாரம் முடிந்திருக்கிறது!