வீட்டை விட்டு வெளியேறிய கவின்: வெளியேறத் துடிக்கும் லாஸ்லியா!
Bigg Boss Tamil 3, Episode 95 Written Update: தனக்கு இங்கு இருக்க விருப்பமில்லை எனவும், தன்னை எப்படியாவது வெளியில் அனுப்பிவிடுங்கள் என்றும் பிக் பாஸிடம் கண்ணீர் விட்டு கதறினார் லாஸ்லியா.
Bigg Boss Tamil 3 Episode 95: கடந்த ஜூன் 23-ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கவின், சாண்டி, முகென், தர்ஷன், ஷெரின், லாஸ்லியா ஆகிய 6 பேர் போட்டியாளர்களாக இருந்த நிலையில் தற்போது 5 லட்சத்தைப் பெற்றுக் கொண்டு, பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியிருக்கிறார் கவின்.
Advertisment
90 நாட்களுக்கும் மேலாக லாஸ்லியா, சாண்டி ஆகியோருடன் நெருக்கமாக பயணித்து வந்த கவின், ரூ.5 லட்சம் அறிவிக்கப்பட்டதும், கொஞ்சமும் யோசிக்காமல் வெளியேற தயாராகி விட்டார். பணத்தைப் பெற்றுக்கொண்டு, பிக் பாஸ் வீட்டை விட்டு, போட்டியிலிருந்து தானாகவே வெளியேற்றப்பட்டுள்ளார் கவின். அவர் வெளியேறுவதை விரும்பாத லாஸ்லியாவும், சாண்டியும் அழுகையை கட்டுப் படுத்த முடியாமல் கதறி கதறி அழுதனர். கவின் கதவை திறந்து வெளியேறும் போது தனது கையை கதவில் வைத்து தடுக்க முற்பட்டார் லாஸ்லியா. அதற்கும் கவின் கண் அசைக்கவில்லை. லாஸ்லியாவின் அன்பையும் பெரிதாக மதிக்கவில்லை.
கவின் வெளியேறியதைத் தொடர்ந்து சாப்பிடாமல், தூங்காமல் கவினை நினைத்துக்கொண்டே லாஸ்லியா அழுதுக்கொண்டிருந்தார். மற்ற போட்டியாளர்கள் சமாதானப்படுத்த முயற்சித்தும் பலனில்லை. ஷெரின், தனது பிரச்சனையை கூறி ஆறுதல் படுத்த முயன்றார். அதனையும் லாஸ்லியா கேட்கவில்லை. இதனையடுத்து கார் டாஸ்க் கொடுக்கப்பட்டது. முகென், தர்ஷன் இருவரும் விற்பனையாளராகவும், ஷெரின், லாஸ்லியா, சாண்டி ஆகியோர் வாடிக்கையாளர்களாகவும் இந்த டாஸ்க்கை செய்தனர். ஆனால் லாஸ்லியா இதை ஈடுபாட்டுடன் செய்யவில்லை என்பது அவரது முக பாவனையில் நன்றாகவே தெரிந்தது.
ஒரு கட்டத்தில் கவலையை கட்டுப் படுத்த முடியாத லாஸ்லியா, கேமரா முன்பு சென்று, தனக்கு இங்கு இருக்க விருப்பமில்லை எனவும், தன்னை எப்படியாவது வெளியில் அனுப்பிவிடுங்கள் என்றும் பிக் பாஸிடம் கண்ணீர் விட்டு கதறினார். அவரை அழைத்துப் பேசிய பிக் பாஸ், ”மக்களால் மட்டுமே போட்டியாளர் வெளியேற்றப்படுவார். அவர்கள் உங்கள் மீது அன்பு வைத்திருக்கிறார்கள். ஆகையால், நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் மற்றும் உங்களின் குடும்பத்திற்காக விளையாடுங்கள்” என்று அறிவுரை கூறினார்.
இருப்பினும் படுக்கையில் படுத்துக்கொண்டு மீண்டும் அழுதுக் கொண்டிருந்தார் லாஸ்லியா. தான் அளவுக் கடந்த அன்பு வைத்திருந்த கவின் திடீரென இப்படியான சூழலில் வெளியேறியதை லாஸ்லியாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மகள் என்ற பந்தந்தில் லாஸ்லியா மீது அன்பு காட்டிய சேரன் வெளியேறியபோது கூட அவர் இவ்வளவு அழவில்லை. அண்மையில், கவினின் அம்மா பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். அதனால் கவின் குடும்பத்திற்கு பணத் தேவை அதிகமிருக்கிறது. அதன் காரணமாகவே, ரூ.5 லட்சத்தை பெற்றுக்கொண்டு கவின் வெளியேற்றப்பட்டுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.