நடிகர் டி.ஆர். சிலம்பரசன் மூன்று வாரங்களுக்குள் ரூ.1 கோடிக்கு உத்தரவாதம் வழங்க வேண்டும் என செவ்வாய்கிழமை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் திரைப்படமான கொரோனா குமார் படத்தை முடிக்காமல் வேறு எந்தத் திரைப்படத்திலும் நடிப்பதைத் தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
2021 இல் கொரோனா குமார் படத்தில் நடிக்க சிம்புக்கு ரூ.9.5 கோடி சம்பளமாக பேசப்பட்டது. ஆனால், ஒப்புக் கொள்ளப்பட்டபடி சிம்பு படத்தில் நடிக்க தயாராக இல்லை. இதனையடுத்து வேல்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இதையும் படியுங்கள்: கஷ்டப்பட்டு பாடுனா… இப்படியா பண்ணுவீங்க… ரஜினி பட இயக்குனரை கடிந்துகொண்ட எஸ்.பி.பி
இந்தநிலையில், தற்போது இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான வேல்ஸ் நிறுவனம் தரப்பு வழக்கறிஞர் எம்.சந்தானராமன், தயாரிப்பு நிறுவனம் ரூ.4.5 கோடியை சிம்புவுக்கு வழங்கியதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இருப்பினும், ஜூலை 16, 2021 அன்று தயாரிப்பு நிறுவனத்திற்கும் நடிகருக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தை ஆராய்ந்த நீதிபதி, கொரோனா குமாரில் நடிக்க சிம்புவுக்கு முன்பணமாக ரூ.1 கோடி மட்டுமே கொடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ.4.5 கோடி கொடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படவில்லை, என்று கூறினார்.
மேலும், மனுதாரர் சில வங்கி பரிவர்த்தனைகளை காண்பித்து, சிம்புவுக்கு கூடுதல் பணம் கொடுக்கப்பட்டதாகவும், மேலும் சில தொகை ரொக்கமாக கொடுக்கப்பட்டதாகவும் கூறினாலும், அந்த பணம் கொரோனா குமார் படத்திற்கு மட்டும்தானா என்று சந்தேகம் இருப்பதாகவும் நீதிபதி கூறினார்.
1996 ஆம் ஆண்டின் நடுவர் மற்றும் சமரசச் சட்டத்தின் பிரிவு 9 இன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட தற்போதைய மனுவின் நோட்டீஸைப் பெற்று, சிம்பு தனது வழக்கறிஞர் மூலம் ஆஜராகிய பின்னரே, பரிவர்த்தனைகள் பற்றிய தெளிவான தகவல் வெளிவரும் என்று நீதிபதி கூறினார்.
இதனைத்தொடர்ந்து, சிம்பு ரூ.1 கோடிக்கான உத்தரவாதத்தை வழங்குமாறு உத்தரவிட்டு, இந்த உத்தரவுக்கு இணங்கத் தவறினால் செப்டம்பர் 19 ஆம் தேதி அடுத்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.