Darbar Box Office Chennai Collection Day 1: புத்தாண்டின் முதல் படமே சூப்பர் ஸ்டாரின் படம்! ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு இதைவிட 2020-ல் வேறு என்ன ஸ்பெஷல் இருக்கப் போகிறது? பெரிய தயாரிப்பு நிறுவனமான லைகா, மாஸ் இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என படத்திற்கு பக்க வாத்தியங்களுக்கும் பஞ்சமில்லை.
ஜனவரி 9-ம் தேதி ரிலீஸான தர்பார் படத்தின் சென்னை பாக்ஸ் ஆபீஸ் முதல் நாள் நிலவரத்தை இங்கே விவரிக்கிறார், சினிமா விமர்சகர் திராவிட ஜீவா.
Darbar Chennai Box Office: தர்பார் சென்னை வசூல்
‘ஒவ்வொரு ரஜினி படம் வரும் போதும் விமர்சனங்கள் கலவையாகத்தான் வரும். ஆனால் படத்தின் வசூல் சற்று ஏறக்குறைய இருக்குமே தவிர பெரும் பாதிப்பு என்பது இருக்காது. யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்னும் பழமொழிக்கேற்ப ரஜினி பட வசூல் சாதனையை ரஜினியை தவிர வேறு யாரும் நெருங்கமுடியாதென்பதே நிதர்சனமான உண்மை.
சில நேரங்களில் மற்ற நடிகர்கள் படங்களின் புரமோஷனுக்காக ரஜினியுடன் ஒப்பிட்டு பேசுவது கடந்த 40 ஆண்டுகளாக தொடரும் ஒரு வியாபார யுக்தி. ஒப்பிடும் நடிகர்கள் மாறிவந்துக்கொண்டிருக்கின்றனரேயொழிய ஒப்பீட்டு பொருளாக ரஜினி தொடர்வது உலகில் எந்த நடிகருக்குமே கிடைக்காத சிறப்பு. அப்படி ஒட்டுமொத்த சாதனைகளின் உறைவிடமாக இருக்கும் ரஜினியின் தர்பார் படம் வேலை நாளில் ரிலீசானது இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டியது.
சென்னையில் மட்டும் முதல் நாளில் 1124 காட்சிகள் வெளியாகின. அதில் ஒரிரு காம்ப்ளக்ஸ் தவிர 90 சதவீதம் ஹவுஸ்புல்லானது. இது திரை விமர்சகர்களை மட்டும் அல்ல, அரசியல் தலைவர்கள் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது இதுவரை ரஜினியின் படத்தை தவிர வேறு எந்த படமும் 680 காட்சிகளுக்கு மேல் சென்னையில் வெளியானதில்லை. அதுவும் தீபாவளி அல்லது பொங்கல் பண்டிகை நாட்களில் மட்டுமே அந்த அளவுக்கு மற்ற நடிகர்களின் படங்கள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது. அடுத்த வாரம் பொங்கல் விடுமுறை என்றாலும், வார வேலைநாள், அதுவும் வியாழக்கிழமை ரிலீஸ் ஆகி 1100 காட்சிகளுக்கு மேல் அரங்கம் நிறைந்த காட்சிகளாக தர்பார் ஒடியது அசுர சாதனைமட்டுமல்ல, அசைக்க முடியாத சாதனை.
முதல்நாள் வசூலாக சென்னை மாநகரத்தில் 4 கோடியே 33 இலட்சத்து 62 ஆயிரம் ரூபாய் வசூலித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது தர்பார். இது மற்ற நடிகர்களின் ஒரு படத்தின் ஒட்டுமொத்த சென்னை வசூலில் 80 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை மற்ற நடிகர்களின் ஒரு படம் சென்னையில் அதிகபட்ச ஒட்டுமொத்த வசூல் 6.9 கோடிதான்.
சென்னையில் ஒட்டுமொத்த உச்சகட்ட வசூல் என்றால், அனைத்துமே ரஜினி படங்கள்தான். பேட்ட சென்னையில் மொத்தம் 17.6 கோடி குவித்தது. சென்னையில் பேட்ட முதல் நாள் வசூல் 2.9 கோடி ஆகும். 2.O படம் சென்னையில் ஒட்டு மொத்த வசூல் 28 கோடி. முதல் நாள் வசூல் 3.67 கோடி. காலா ஒட்டுமொத்த வசூல் 16 கோடி. முதல் நாள் வசூல் 3.2 கோடி.
இதுவரை சென்னை வசூலில் ரஜினியின் கபாலி படமே அதிகம் வசூல் சாதனை படைத்துள்ளது. அப்படம் சென்னை மாநகர வசூலாக 34.81 கோடி ரூபாய் வசூலித்தது. தற்போது தர்பார் அசுரவேகத்தில் முதல் நாள் வசூலாக 4 கோடி 33 லட்சம் 62 ஆயிரம் ரூபாய் வசூலித்தது மட்டும் அல்லாமல், தொடர்ந்து முன்பதிவிலும் சாதனை படைத்துக்கொண்டு வருகிறது.
பொங்கல் விடுமுறை நாட்கள் தொடர்ந்து வருவதாலும் படத்திற்கான விமர்சனங்கள் பாசிட்டிவாக வருவதாலும் தர்பார் படம் பாக்ஸ் ஆபீஸை சூறையாடும் என்று லைகா நிறுவனம் மகிழ்ச்சியாக இருக்கிறது. ரசிகர்களுக்கும் அதே மகிழ்ச்சிதான்’.
Darbar Review: இது ரஜினி ‘தர்பார்’ – நெகட்டிவிட்டிக்கு நோ என்ட்ரி