இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் இந்தப் படம் ரஜினியின் 167-வது படமாக உருவாகியுள்ளது. இதில் 25 ஆண்டுகள் கழித்து ஆதித்யா அருணாச்சலம் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் ரஜினி. அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சூப்பர் ஸ்டாரின் 2.0 திரைப்படத்தைத் தொடர்ந்து ‘தர்பார்’ படத்தையும் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளிலும் உலகம் முழுக்க 7000 ஸ்கிரீன்களில் தர்பார் திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இதுவரை எந்த தமிழ் படமும் வெளியாகாத நாடுகளிலும், ரஜினியின் இந்தப்படம் வெளியாகியிருக்கிறது. இதில் இந்தியாவில் மட்டும் 4000 ஸ்கிரீன்களில் வெளியாகியுள்ளது. முதல் காட்சி இன்று காலை 4 மணிக்கு தொடங்கியது. சினிமா பிரபலங்களும், தீவிர ரஜினி ரசிகர்களும் இந்த சிறப்புக் காட்சியை என்ஜாய் செய்தனர். ஆனால், டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
படத்தில் மும்பை மாநகர காவல் ஆணையராக தோன்றுகிறார் ரஜினி. பணம் இருந்தால் சிறைக் கைதி கூட ஷாப்பிங் போகலாம் என்ற வசனத்துக்கு தியேட்டரே குலுங்குகிறது. அப்பா - மகள் செண்டிமெண்ட் காட்சிகாளும், யோகி பாபுவுடனான ரஜினியின் காமெடி காட்சியும் சிறப்பாக இருக்கிறதென, படத்தைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் கூறினார்கள். அதோடு ரஜினிக்கே உரிய ‘மாஸ்; காட்சிகளும் நிறைய இருப்பதால், உற்சாகமடைந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.