பிரதமர் மோடி குறித்து இளையராஜாவின் கருத்துக்கு விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவரின் மகன் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ள பதிவு ஒன்று பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இசைஞானி இளையராஜா புத்தகம் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில், “பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்தக் கருத்து சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. மேலும் இளையராஜாவை சிலர் விமர்சனம் செய்தும்வருகின்றனர். அதேசமயம் தமிழக பாஜகவினர் இளையராஜாவின் கருத்துக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, சிறுபான்மையினரை துளியும் மதிக்காத மோடியின் ஆட்சியை அம்பேத்கருடன் ஒப்பிட்டது தவறு. எனவே இளையராஜா தனது கருத்தை வாபஸ் பெற வேண்டுமெனவும் சிலர் வலியுறுத்தினர்.
இசைஞானியின் கருத்துக்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் இளையராஜா தனது கருத்து உரிமையை வெளிப்படுத்தியுள்ளார் என்று பாஜக ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது.
கர்ப்பிணியாக நடிகை மீனா: ‘முன்பைவிட இப்போ இது கஷ்டம்
இந்த நிலையில், பிரதமர் மோடி குறித்து எழுதிய கருத்தை திரும்ப பெற மாட்டேன். இதை நான் அரசியலாக்க விரும்பவில்லை. நான் எந்த கட்சியும் சேர்ந்தவன் இல்லை என்று இளையராஜா குறிப்பிட்டதாக கங்கை அமரன் பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.
இத்தகைய சூழ்நிலையில் தான் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் கருப்பு திராவிடன்.. நான் தமிழன் என்று பதிவிட்டுள்ளார். தனது புகைப்படத்தையும் அவர் பதிவேற்றம் செய்துள்ளார்.
அதில், கருப்பு டி-ஷர்ட், லுங்கி அணிந்திருக்கிறார். அவர் தனது தந்தையின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இவ்வாறு பதிவிட்டுள்ளார் என்று சில நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறியது குறிப்பிடத்தக்கது. இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தமிழ் தான் இணைப்பு மொழி என்று கூறியது சமீபத்தில் சர்ச்சையானது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil