சமீப காலமாகவே தமிழ் சினிமாவில் தெலுங்கு இயக்குனர்களின் படையெடுப்பு இருந்து வருகிறது. அந்த வகையில் ’வெங்கி அட்லுரி’ இயக்கத்தில் ’தனுஷ்’ நடிப்பில் இன்று வெளியாயிருக்கும் ’வாத்தி’ படம் மக்களை கவர்ந்ததா? என்பதை இவ்விமர்சனத்தில் காணலாம்.
இதையும் படியுங்கள்: சாதி பெயரை நீக்கியது ஏன்? விளக்கம் கொடுத்த வாத்தி நாயகி: சம்யுத்தா சிறப்பு நேர்காணல்
கதை:
தனியார் பள்ளி கூட்டமைப்பு சங்கத்தின் தலைவராக வரும் சமுத்திரக்கனி (வில்லன்), மக்களிடையே தனியார் பள்ளிகள் தான் சிறந்தது என்பது போன்ற பிம்பத்தை உருவாக்கி அதன் மூலம் கல்வி கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக தன்னை நல்லவர் போல் காட்டிக் கொள்வதற்காக சில அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளே தத்தெடுத்து இயக்கும் என அறிவிக்கிறார். அப்படி தத்தெடுக்கப்பட்ட ஒரு கிராமத்து அரசு பள்ளிக்கு தன் பள்ளியில் வேலை செய்யும் தனுஷை வாத்தியாராக நியமிக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் தனுஷே சமுத்திரக்கனிக்கு எதிராக திரும்ப, அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
தனுஷ்:
எப்போதுமே மாறுபட்ட கதாபாத்திரங்களில் கலக்கும் தனுஷிற்கு மற்றுமொரு புதிய கதாபாத்திரமாக இந்த ஆசிரியர் கதாபாத்திரம் அமைந்துள்ளது. தன் நடை, உடை, பாவனை என அனைத்தையும் ஒரு இளம் ஆசிரியர் போலவே மாற்றி திரையில் ஜொலிக்கிறார் தனுஷ். ஒரு சில காமெடி காட்சிகள் ஒர்க்கவுட் ஆகவில்லை என்றாலும் காதல், ஆக்க்ஷன், சென்டிமென்ட் என, அனைத்திலும் தன் இயல்பான நடிப்பின் மூலம் ஈர்க்கிறார். இவருடைய கதாபாத்திரம் நிச்சயம் இன்றிருக்கும் சில தவறான ஆசிரியர்களை நல்வழிப்படுத்தும் என நம்பலாம்.
சமுத்திரகனி:
பணக்கார வில்லனாக கோட் சூட், கூலிங் கிளாஸ், ஷூ, ஆடம்பரமான கார் என வழக்கமான தெலுங்கு வில்லன் சாயலில் அமைந்திருக்கிறது அவரது கதாபாத்திரம். வித்தியாசமாக செய்வதற்கு எதுவும் இல்லை என்றாலும் அந்த கதாபாத்திரத்திற்கான வில்லத்தனத்தை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். அவரின் கதாபாத்திரம் மூலம் இன்றைய காலகட்டத்தில் தனியார் பள்ளிகள் எவ்வாறு மக்களிடம் ஏமாற்றுகின்றன என்பதை தோலுரிக்கும் விதமாக அவரது நடிப்பு அமைந்திருக்கிறது.
நாயகி மற்றும் துணை நடிகர்கள்:
நாயகியாக வரும் சம்யுக்தா மேனனுக்கு பெரிதாக நடிக்க வாய்ப்பு அமையவில்லை என்றாலும் தனக்கு கிடைத்த ஒரு சில சீன்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காமெடியனாக ஷாராவின் காட்சிகள் பெரிய அளவு சிரிப்பை கொடுக்கவில்லை என்றாலும் கதையை போர் அடிக்காமல் நகர்த்த பயன்பட்டிருக்கிறது. மேலும் சாய்குமார், ஆடுகளம் நரேன், இளவரசு ஆகியோர் தங்களுக்குரிய கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர்.
ஜி.வி பிரகாஷின் இசை:
படத்திற்கு மற்றுமொரு பெரிய பலமாக அமைந்திருப்பது ஜி.வி பிரகாஷின் பின்னணி இசை. ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. காட்சிகளுக்கு ஏற்றார் போல மென்மையாகவும், ஆக்ரோஷமாகவும் தன் பின்னணி இசையின் மூலம் கதையோடு நம்மை ஒன்றவைக்கிறார். காட்சிகளோடு பாடல்களை பார்ப்பதற்கு இன்னும் அழகாக தெரிகிறது.
இயக்குனர் வெங்கி:
இன்று நம் கண் முன்னே நடக்கும் கல்வி கொள்ளையை மையப்படுத்திய கதையில், திரை கதையை இன்றைய தலைமுறையினர் ரசிக்கும்படி அழகாக அமைத்திருக்கிறார். ஒரு நல்ல ஆசிரியரால் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும் என்ற கருத்தை அழுத்தி சொல்லி இருக்கும் விதம் வரவேற்கத்தக்கது. இதுபோன்ற சமூக கருத்தை தனுஷ் போன்ற பெரிய நடிகர்கள் மூலம் வெளிப்படுத்தினால் அது மக்களை எளிதாக சென்றடையும் என இவர் யோசித்திருக்கும் விதம் சிறப்பு. படத்தின் ஒளிப்பதிவாளர்களான தினேஷ் மற்றும் யுவராஜ் படத்தின் தன்மை கேற்ப காட்சிகளை வடிவமைத்திருக்கின்றனர். குறிப்பாக பாடல் காட்சிகள் ரசிக்கும் படியாக அமைந்திருக்கிறது.
பாஸிடிவ்ஸ்:
*இன்றைய தலைமுறையினருக்கான சமூக கருத்தை படத்தின் மையமாக வைத்திருப்பது சிறப்பு.
*திரைக்கதை போர் அடிக்காமல் செல்கிறது.
*தனுஷ் தன் எதார்த்தமான நடிப்பின் மூலம் படத்தை தூக்கி நிறுத்துகிறார்.
*ரசிக்கும் படியான பாடல்கள் மற்றும் பின்னணி இசை.
*ஒரு நல்லாசியராக தனுஷின் கதாபாத்திரம் அமைந்திருப்பதும் அதன் மூலம் ஏற்படும் சிறந்த மாற்றங்களையும் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இது இன்றைய ஆசிரியர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
நெகட்டிவ்ஸ்:
*படத்தில் அதிகமாக தெலுங்கு சாயல் வீசுவதை மறுக்க முடியாது.
*பாடல் காட்சியில் நாயகியின் டப்பிங் சரியாக பொருந்தவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
*படத்தை இன்னும் பிரம்மாண்டமாக செலவு செய்து எடுத்திருக்கலாம்.
*சில காட்சிகளை முன்கூட்டியே எளிதாக யூகிக்க முடிகிறது.
மொத்தத்தில் சில ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், சமூக கருத்துடன் அனைவரும் ரசிக்கும் வகையில் உள்ள ஒரு நல்ல என்டர்டெயின்மென்ட் படம் தான் ’வாத்தி’.
Marks - (4/5) ⭐⭐⭐⭐.
விமர்சனம்: நவீன் குமார்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.