நீலம் பண்பாட்டு மையத்தின் புதிய முயற்சியாக கூகை திரைப்பட இயக்க நூலகம் ஒன்றை சென்னையில் அமைத்திருக்கிறார் இயக்குநர் பா. ரஞ்சித். சமூகத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்வினை தன்னுடைய கலை வடிவில் மக்களிடம் சென்று சேர்த்தவர் பா. ரஞ்சித். தற்சமயம் பரியேறும் பெருமாள் என்ற படத்தினை தயாரித்து அனைவரின் மனதிலும் நங்கூரம் போட்டு அமர்ந்துவிட்டார் ரஞ்சித். மேலும் படிக்க : பரியேறும் பெருமாளை பாராட்டிய முக ஸ்டாலின்
கூகை திரைப்பட இயக்க நூலகம் திறப்பு விழா
இந்நிலையில் உருவாக்கப்பட்டிருக்கும் நீலம் பண்பாட்டு மையத்தின் கூகை அமைப்பானது சென்னை வலசரவாக்கம் ஜானகி நகரில் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பின் அலுவலகத்தை நடிகை குஷ்பு மற்றும் மராத்தி மொழி திரைப்பட இயக்குநர் நாகராஜ் மஞ்சுளேவும் திறந்து வைத்து பேசினார்கள். இந்த விழாவில் இயக்குநர்கள் ராம், லெனின் பாரதி, மாரி செல்வராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த நூலகத்தின் மூலம் இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்களின் வாசிப்புத் பழக்கத்தினை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்ல உதவும் என்று நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்தனர்.
கூகை திரைப்பட இயக்க நூலகம் - விழாவில் ரஞ்சித்தின் பேச்சு
நிகழ்ச்சியில் பேசிய பா.ரஞ்சித் “புத்தகம் மூலம் தான் உலகை அறிய முடியும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். நான் புத்தகம் மூலம் தான் பலவற்றைத் தெரிந்து கொண்டேன். உதவி இயக்குனராக இருந்த போது ஒவ்வொரு புத்தகங்களையும் தேடித்தேடி வாசித்தேன்.
அப்போது தான் ஒன்று தோன்றியது. உதவி இயக்குனர்களுக்கு என்று ஒரு நூலகம் அமைக்க வேண்டும் என்று. வாசிப்பின் வழியாகவும் வாசித்ததை உரையாடுவதின் வாயிலாகவும் ஒரு படைப்பாளி நிறைய கற்றுக்கொள்ள முடியும். ஒரு படத்தைப் பார்த்தால் அதில் காட்சி வழியாக நமக்கு எல்லாம் காட்டப்பட்டு விடும். ஆனால் புத்தகம் படித்தால் தான் அந்த எழுத்துக்கு நாம் கற்பனை செய்ய முடியும். இந்த நல்விழாவிற்கு வருகை தந்த சாய்ரட் இயக்குனர், இயக்குனர் ராம் சார், தோழர் குஷ்பு அனைவருக்கும் நன்றி” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
எதற்காக இந்த கூகை திரைப்பட இயக்க நூலகம் ?
நீலம் பண்பாட்டு மையம் சார்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த நூலகத்தின் மூலமாக சமூக அரசியல் மற்றும் சினிமா மொழி சார்ந்த தகவல்களை புத்தகங்களின் வாயிலாக உதவி இயக்குநர்கள் பெற இயலும். மேலும் வளரும் சமூகத்தினர் கற்று தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்களைப் பரவலாக்கும் முயற்சியில் இந்த நூலகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு புத்தகங்களை அன்பளிப்பாக தரக் கோரி நீலம் பண்பாட்டு மையத்திடம் இருந்து அழைப்பிதழ்கள் அனுப்பட்டிருக்கிறது.