'ஃபேமிலி’ என்ற குறும்படத்தை சோனி டிவி திங்கள்கிழமை வெளியிட்டது. நான்கு நிமிடங்களுக்கும் மேலாக ஓடும் இந்த குறும்படம், COVID-19 தொற்றுநோய் காலத்தில் வீட்டில் இருப்பது, எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்துகிறது.
’ஃபேமிலி’ குறும்படத்தில், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், மோகன்லால், மம்மூட்டி, பிரியங்கா சோப்ரா, ரன்பீர் கபூர், சிரஞ்சீவி, ஆலியா பட், புரோசென்ஜித் சாட்டர்ஜி, சிவ ராஜ்குமார் மற்றும் தில்ஜித் தோஸாஞ் உள்ளிட்ட நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குறும்படத்தின் மூலம் கிடைக்கும் நிதி, இந்திய திரையுலகின் தினக்கூலிகளுக்கு செல்லும் வகையில் வழி செய்யப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
பிரசூன் பாண்டே இயக்கியுள்ள இந்த ’பேமிலி’ குறும்படத்திற்கு, சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா, கல்யாண் ஜுவல்லர்ஸ் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் ஆதரவு அளித்துள்ளனர். முன்னதாக, சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா பகிர்ந்து கொண்ட ஒரு அறிக்கையில், “தற்போது இருக்கும் சூழலை மனதில் கொண்டு, திரு.அமிதாப் பச்சன் மேற்கொண்ட ஒரு முயற்சியை, நாங்கள் சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியாவும், கல்யாண் ஜுவல்லர்ஸும் ஆதரிக்கிறோம். இதன் மூலம் நாடு முழுவதும் 1,00,000 வீடுகளின் மாதாந்திர ரேஷன் பொருட்களுக்கு நிதியளிக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதோடு, "இந்தியாவில் இருக்கும் முன்னணி ஹைப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் மளிகைக் கடைகளுடன் வணிக ரீதியான ஒப்பந்தம் போடப்பட்டு, அகில இந்திய திரைப்பட ஊழியர் கூட்டமைப்பின் சரிபார்க்கப்பட்ட தொழிலாளர்களுக்கு, டிஜிட்டல் பார்கோடு செய்யப்பட்ட கூப்பன்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மேலும், தேவைப்படுபவர்களுக்கும் பண உதவியும் வழங்கப்பட்டுள்ளது” என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.