அருண் ஜனார்தனன் : தனது கட் அவுட்டுக்கு அண்டா அண்டாவாக பால் ஊற்றுமாறு கூறிய நடிகர் சிம்புவுக்கு எதிராக சென்னை காவல் ஆணையரகத்தில் பால் முகவர்கள் சங்கம் புகார் அளித்துள்ளது.
பிப்ரவரி 1ம் தேதி சிம்பு நடித்திருக்கும் ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்தின் ரிலீஸை முன்னிட்டு தனது கட் அவுட்டுகளுக்கு அண்டா கணக்கில் பால் ஊற்றுமாறு தனது ரசிகர்களை சிம்பு கேட்டுக் கொள்ளும் வீடியோ வெளியாகி வைரலானது.
ஏற்கெனவே பால் கேன்கள் திருடு போய் கொண்டிருக்கும் சூழலில், அண்டா கணக்கில் பால் ஊற்றுமாறு சிம்பு கூறி இருப்பதால் அவரது ரசிகர்கள் பால் கேன்களை திருட வாய்ப்பு இருப்பதாக பால் முகவர்கள் தொழிலாளர் நலச்சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
சிம்பு பாலபிஷேகம் : பால் முகவர்கள் சங்கம் புகார்
இதுதொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி உள்ளிட்டோர் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர். ரசிகர்களை தவறான பாதைக்கு தூண்டும் சிம்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மனுவில் கேட்டுக் கொண்டார்.
இது குறித்து பேசிய பொன்னுசாமி, “நடிகர்களின் கட் அவுட்களுக்கு பால் அபிஷேகம் செய்வது வழக்கமாகிவிட்டது. இது குறித்து நாங்கள் கடிதம் மூலமாகவும், ரஜினிகாந்த், அஜித், விஜய் மற்றும் பல பிரபல நடிகர்களுக்கு புகார் தெரிவித்தோம். இதற்கு ஒரு தீர்வு கொண்டு வரவும் வேண்டுகோள் விடுத்தோம். ஆனால் எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை.
போலீஸ் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்க மறுக்க்கிறார்கள். பால் கடைக்கு உள்ளே திருடு நடந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று சொல்கிறார்கள். ஆனால் விடியற்காலை விநியோகத்திற்காக வரும் பால் பேக்கெட்டுகளை வண்டியில் இருந்தே நடிகர்களின் ரசிகர்கள் திருடிவிடுகிறார்கள்.
இந்த செய்தி தொகுப்பை ஆங்கிலத்தில் படிக்க
கமல் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டும் தான் எங்களுக்கு தொந்தரவு கொடுப்பதில்லை. கமல் ரசிகர்கள் அவரது படத்தின் ரிலீஸ் நேரத்தில் இரத்த தானம் போன்ற நல்ல செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். சிவகார்த்திகேயன் ரசிகர்கள், மரக்கன்று போன்றவற்றை கொடுத்து கொண்டாடுகிறார்கள். ஆனால் ரஜினிகாந்த், அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இன்னும் பாதிப்புகளை அளித்து தான் வருகிறார்கள்.
ரஜினிகாந்த் படத்தின் ரிலீஸ் நேரத்திலெல்லாம் நிறைய பால் பேக்கேட்டுகள் திருடு போகிறது” என்றார்.
பாலபிஷேகம் பண்ணுங்க... பேக்கெட் வேண்டாம் அண்டாவா ஊத்துங்க : சிம்பு அதிரடி வீடியோ
பெரிய நடிகர்களின் படத்தின் ரிலீஸ் போதெல்லாம் பால் திருடு போகும் சம்பவங்களை தடுக்க வேண்டுமென்று பொன்னுசாமி உட்பட பால் முகவர்கள் சங்கத்தினர் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.