Ilayaraja: கடந்த 45 வருடங்களாக தமிழ் சமூகத்தை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இசை ரசிகர்களையும் தனது இசை மந்திரத்தால் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார் இசைஞானி இளையராஜா. தமிழகத்தின் பாரம்பரிய இசையை, கடல் கடந்து சிறப்புற செய்ததில் இளையராஜாவின் பங்கு மிக அதிகம். அதிலும் குறிப்பாக, இசை என்பது குறிப்பிட்ட சாரார் மட்டுமே கேட்கவும், ரசிக்கவும் முடியும் என்று இருந்த காலகட்டத்தில், சாமானியனையும் ரசிக்க செய்தவர் ராஜா மட்டுமே.
வயலில் வேலை செய்பவர்கள், மூட்டை தூக்குபவர்கள், கல்லுடைப்பவர்கள் போன்ற பாமர மக்கள், தங்களது கஷ்டங்களை மறந்து இசையை ரசித்துக் கொண்டே, வேலை செய்தது ராஜாவின் இசையால் தான். இன்னும் குறிப்பாக, இரவு நேர செக்யூரிட்டிகளுக்கு, இப்போதும் ராஜாதான் செக்யூரிட்டி. 1976-ல் ’அன்னக்கிளி’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, 1000 படங்களை நிறைவு செய்து, இசை ரசிகனின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார். நாடக குழுவில் இசைக் கச்சேரிகளுக்கும், நாடகங்களுக்கும் பகுதிநேர வாத்தியக் கலைஞராக சலில் சௌத்ரியிடம் வேலை செய்து வந்த ராஜா, பின்னர் கன்னட இசையமைப்பாளரான ஜி.கே வெங்கடேஷிடம் உதவியாளராக சேர்ந்தார்.
— Master Mahendran ???? (@Actor_Mahendran) June 2, 2020
அவரது இசைக்குழுவில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்திருக்கிறார். இந்த நேரத்தில் தனக்குக் கிடைத்த ஓய்வு நேரத்தின் போது, சுயமாக பாடல்களை எழுதி, தான் இருந்த இசைக் குழுவில் அங்கம் வகித்த கலைஞர்களை, அதற்கு இசை அமைக்கும் படி கேட்டுக் கொள்வாராம். பின்னர் தயாரிப்பாளர், பஞ்சு அருணாச்சலம் தனது படமான ’அன்னக்கிளியில்’ ராஜாவை அறிமுகப்படுத்தினார். இந்தப் படத்தில் மேற்கத்திய இசையோடு, தமிழ் மரபையும் புகுத்தி அவர் இசையமைத்த ’மச்சான பாத்தீங்களா’ பாடல் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, மராத்தி என பல மொழிகளிலும் இசையமைத்துள்ளார். சிம்பொனி இசையமைப்பு, ’பஞ்சமுகி’ என்ற கர்நாடக ராகம் உருவாக்கம், இசை ரசிகர்களுக்கு புதிய பரிணாமத்தை அறிமுகம் செய்த, ’ஹவ் டு நேம் இட்’, ’கீதாஞ்சலி’ என்ற பக்தி இசைத் தொகுப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் செய்துள்ளார். தனது இசைக்காக இந்திய அரசின் உயரிய விருதான, ’பத்ம விபூஷண்’ விருதையும், 5 முறை தேசிய விருதையும், தமிழக அரசின் ’கலைமாமணி’ விருதையும் பெற்றுள்ள இவர், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழும் இசையும் போல என்றும் செழிப்புடன் வாழ இசைஞானி இளையராஜாவை வாழ்த்துவோம்!
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”