Advertisment

திறக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகம்... விஷாலின் அதே கேள்வியை போலீஸாரிடம் முன்வைத்த நீதிமன்றம்

நல்லது செய்வதற்கு தடை வந்தாலும் அதை தாண்டி நல்லது செய்வேன்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vishal Anthem, Actor Vishal

தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை உடனே அகற்றும்படி சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிற்பித்துள்ளது.

Advertisment

விஷால் பேட்டி:

தயாரிப்பாளர்கள் சங்கத்திற்குள் அதன் தலைவர் விஷாலுக்கு எதிரான குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. தி.நகரில் அமைந்துள்ள அந்த சங்க அலுவலகத்தின் முன்பு  கடந்த புதன்கிழமை (19.12.18) கூடிய டி.சிவா, கே.ராஜன், ஏ.எல்.அழகப்பன், ஜே.கே.ரித்திஷ், எஸ்.வி.சேகர், உள்ளிட்ட தயாரிப்பாளர்கள், விஷாலை கண்டிக்கும் வகையில் சங்கத்திற்கு பூட்டு போட்டனர்.

அந்த பூட்டை  நேற்று  காலை திறக்க முயன்ற தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர். காலையில் கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரும் நேற்று மாலை விடுதலை செய்யப்பட்டனர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், “மிகவும் வேடிக்கையாக உள்ளது. செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவித்தேன். தவறு செய்தவர்களின் மீது புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தவறு செய்யாத எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீதித்துறையை நான் நம்புகிறேன். நீதிமன்றம் சென்று இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்போம். நிச்சயமாக இளையராஜாவுக்கு இசை விழாவை நடத்துவோம்.என்ன தடை வந்தாலும் அதை மீறி நடத்துவோம். அதில் வரும் நிதியை வைத்து சிறு, நலிந்த தயாரிப்பாளர்களுக்கு அரை கிரவுண்டு நிலம் கண்டிப்பாக கொடுப்போம். சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றுவோம்

சங்கத்தில் கணக்கு கேட்க வேண்டும் என்றால் முறையாக கேட்க வேண்டும், அதற்கென தனி விதி உள்ளது. நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு நிதி கொடுக்கப்பட்டு வருகிறது, அதற்கான கணக்கும் உள்ளது.

மேலும் வாசிக்க... சங்க அலுவலகத்திற்கு சீல் வைப்பு

ஒவ்வொரு மாதம் இ.சி. மீட்டிங்கில் கணக்கு காட்டப்படும். முறையாக கேட்டால் கொடுப்போம். முறை தெரியாமல் முறைகேடு நடப்பதாக சொல்கிறார்கள்.தயாரிப்பாளர் சங்கத்தில் இல்லாதவர்கள் எங்கள் மீது புகார் கொடுத்துள்ளனர்.

அலுவலகத்துக்கு செல்ல அனுமதி இல்லை என்கிறார்கள். நாங்கள் என்ன ரவுடியா?. நாங்கள் தயாரிப்பாளர்கள். சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறோம். எங்களுக்கு எந்த நோட்டீசும் வழங்காமல் பூட்டி இருக்கிறார்கள்.

நல்லது செய்வதற்குப் பெயர் முறைகேடு என்றால் அதை செய்வேன், தொடர்ந்து செய்வேன். நல்லது நடக்கக்கூடாது என்று நினைப்பவர்கள் அனைவரும் அவர்களுக்கு பின்னால் தான் இருக்கிறார்கள். நான் தொடர்ந்து நல்லது செய்து கொண்டே இருப்பேன்.” என தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு சீல்:

தயாரிப்பாளர் சங்கத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர்  விஷால் முறையீடு செய்தார்.  சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் விஷால் முறையீடு செய்த வழக்கு இன்று மதியம் 2. 15 மணிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல் துறை தரப்பில் ஆஜராகி இருந்த வழக்கறிஞர், பாதுகாப்பு கோரி தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து கோரிக்கை மனு வந்ததாகவும் அதன் அடிப்படையில் தான் தாங்கள் அங்கு சென்றேம். சங்கத்தின் உள்ளே இரு தரப்பினருக்கு இடையே நடைபெறும் பிரச்சனைகள் தங்களுக்கு தெரியாது. சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படும் அளவிற்கு நிலைமை சென்றதால் அலுவலகத்தை சீல் வைத்ததாக தெரிவித்தார். சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் இல்லாமல் பாதுகாப்பு அளிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கபட்டதாக தெரிவித்தார்.

அப்போது நீதிபதி,

தேர்வாகி உள்ள நிர்வாகிகள் உங்களுக்கு பிடிக்குதோ, இல்லையோ.. ஆனால் அவர்கள்தான் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்கள் பணியை செய்ய பாதுகாப்பளிப்பது தானே உங்கள் கடமை. ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தேர்தல் அதிகாரியாக இருந்து நடைபெற்ற தேர்தலில் தேர்வானவர்களை பணி செய்ய விடாமல் தடுத்தால், நீதித்துறை மீது மக்கள் என்ன நினைப்பார்கள்? என கேள்வி எழுப்பினார்.

ராதாகிருஷ்ணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போதைய நிர்வாகிகள் முறையாக செயல்படலை. நாங்கள் பிரச்சினை செய்யவில்லை. அவர்கள் முறைகேடாக செயல்படுகின்றனர். சங்கத்தின் வைப்பு தொகை 7 கோடி ரூபாய் முறைகேடில் ஈடுபட்டுள்ளனர். முறைகேடு தொடர்பாக ஆவணங்களை அழிக்க முயன்று வருகின்றனர். எனவே தான் சங்கத்தை பூட்டியதாக தெரிவித்தார்.

அப்போது நீதிபதி - தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் தவறு செய்தால் நீதிமன்றத்தை நாடுங்கள். உரிய வழக்கை தாக்கல் செய்யுங்கள். அதனை விடுத்து சங்கத்தை பூட்டுவது அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பணி செய்ய விடாமல் தடுப்பது சட்டப்படியான உரிமையா? என கேள்வி எழுப்பினார்.

காவல் துறை இந்த விஷயத்தில் எப்படி 145 சட்டப் பிரிவு நடைமுறையை கையாண்டீர்கள்? இந்த விவகாரத்தில் தலையிட காவல் துறைக்கு என்ன முகாந்திரம் உள்ளது? இதே போன்ற வேறு நிகழ்வுகளில் காவல்துறை இவ்வாறு செயல்படுமா? என கேள்வி எழுப்பினார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்- ஏற்கனவே சங்கத்தின் தரப்பில் பாதுகாப்பு கோரி புகார் கொடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே 145 பிரிவில் நடவடிக்கை எடுக்கபட்டதாக தெரிவித்தார்.

நீதிபதி- தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை எப்படி தடுப்பீர்கள்?

காவல்துறை தரப்பு - நாங்கள் தலையிடவில்லை.

நீதிபதி - இதை பதிவு செய்துகொள்ளட்டுமா? தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மீது அதிருப்தி என்றால் புகார் கொடுங்கள் அல்லது நீதிமன்றம் போங்கள். அதைவிட்டு சங்கத்தை பூட்டுவீர்களா?? இது முறையல்ல என தெரிவித்தார்.

ஆவணங்கள் இருக்கும் அறையை மட்டும் பூட்டிவிடலாம். மற்ற பகுதிகளில் நிர்வாகிகள் வந்து செல்ல எவ்வித இடையூறும் கூடாது. கூட்டுறவு சங்க துணை பதிவாளர் ஆஜராகட்டும் அவரிடம் விளக்கம் கேட்கலாம் என தெரிவித்தார்.

இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதி, காவல்துறை உடனடியாக தயாரிப்பாளர் சங்க கட்டிடத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள 145 சட்டப் பிரிவை விலக்கிக்கொள்ள வேண்டும். தயாரிப்பாளர் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீலை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மற்றும் ஆர்.டி.ஓ அகற்ற வேண்டும். சங்கங்களின் துணை பதிவாளர் நாளை தயாரிப்பாளர் சங்கத்திற்கு செல்ல வேண்டும். அங்குள்ள அனைத்து அசல் ஆவணங்களையும் துணை பதிவாளரிடம் ஒப்படைத்து விட்டு நகல்களை இரு தரப்பினரும் வைத்து கொள்ளலாம். அனைத்து உறுப்பினர்களும் சங்கத்திற்குள் நுழைய அனுமதிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் உறுப்பினர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை 4 வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

Vishal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment