Advertisment
Presenting Partner
Desktop GIF

HBD A.R.Rahman : ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்... இசை பயணம் தொடங்கியது எந்த மொழியில்?

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் படம் தமிழில் என்றாலும், அவரின் இசை பயணம் தொடங்கியது மலையாளத்தில் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்

author-image
D. Elayaraja
New Update
AR Rahman Jan 6

இசைமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம் இன்று

இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஒரே படத்திற்காக 2 ஆஸ்கார் விருதுகளை வாங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்த இவர், மணிரத்னம் இயக்கத்தில் 1992-ம் ஆண்டு வெளியான ரோஜா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பெரும் வரவேற்பினை பெற்றிருந்தார். அதே சமயம் பெரும்பாலான இசை பிரியர்கள் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் படம் ரோஜா என்றே நினைக்கிறார்கள். ஆனால் ரோஜா படத்திற்கு முன்பே ரஹ்மான் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிவிட்டார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

Advertisment

பிறப்பும் இசை ஆர்வமும்

தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் பிறந்து மலையாள சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்தவர் ஆர்.கே.சேகர். இவரது மகன் தான் ஏ.எஸ். திலீப்குமார் (ஏ.ஆர்.ரஹ்மான்). 4 வயதில் பியோனோ வாசிக்க தொடங்கியுள்ளார். அப்போதே தனது தந்தையின் ஸ்டூடியோவில் அவருக்கு உதவியா கீபோர்டு வாசித்துள்ளார். இவருக்கு 9 வயதாக இருக்கும்போது (1976) ஆர்.கே.சேகர் மரணமடைந்துள்ளார். அதன்பிறகு தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு அவரது குடும்பம் வாழ்ந்து வந்துள்ளனர்.

AR Rahman Jan 6

அப்போது பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த திலீப் குமார், குடும்பத்திற்காக உழைக்க தொடங்கியதால் தனது பள்ளி தேர்வில் தோல்வியடைந்துள்ளார். இதனால் பள்ளி நிர்வாகம் அவரது தாயாரை வரவழைத்து தரக்குறைவாக பேசி வெளியில் அனுப்பியுள்ளனர். (2012-ம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் தனது பேட்டியில் கூறியது) அதன்பிறகு வேறொரு பள்ளியில் சேர்ந்த, திலீப் குமார், மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியின் மேல்நிலை பள்ளியில் படித்துள்ளார்.

இந்த பள்ளியில் படிக்கும்போது, தனக்காக இசை ஆர்வத்தை வெளியில் காட்டிய திலீப் குமார், தனது நண்பர்களுடன் இணைந்து இசை குழுவை உருவாக்கியுள்ளார். ஆனால் இசையில் அதீத ஆர்வம் வந்ததன் காரணமாக, தனது தாயாரிடம் சொல்லிவிட்டு பள்ளிப்படிப்பை நிறுத்திய திலீப் குமார், இசைக்கருவிகள் வாசிப்பது ஹார்மோகியம் மற்றும் கிட்டார் உள்ளிட்ட இசைக்கருவிகளை இசைப்பது குறித்து திறமையான குறித்து பயிற்சி பெற்றுள்ளார்.

ஆரம்பகால இசை பயிற்சி

திலீப் குமார் ஆரம்பகாலத்தில் மாஸ்டர் தன்ராஜூவிடம் இசை பயிற்சியை தொடங்கியுள்ளார். அதன்பிறகு தனது தந்தையின் நெருங்கிய நண்பரும், மலையாள இசையமைப்பாளருமான, எம்.கே. அர்ஜூன் இசை குழுவில் வாசிக்க தொடங்கியுள்ளார். இதன்பிறகு, எம்.எஸ்.வி, விஜயபாஸ்கர், இளையராஜா, உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பயிற்சி பெற்றுள்ளார். தனது இசை ஆர்வம் காரணமாக பல முயற்சிகளை செய்த திலீப் குமார், லண்டன் டிரினிட்டி காலேஜ் ஆஃப் மியூசிக்கில் ஸ்காலர்ஷிப் பெற்றுள்ளார்.

AR Rahman Jan 6

தனது ஆரம்ப காலத்தில் பல இசையமைப்பாளர்களின் படங்களில் ஒரு பாடல் மற்றும் சில காட்சிகள் கம்போசிங்கில் உதவி செய்துள்ள திலீப் குமார், 1989-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங், (தமிழில் அரங்கேற்ற வேளை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது) என்ற படத்தில் கலிகாலம் என்று தொடங்கும் ஒரு பாடலுக்கு சிவமணியுடன் இணைந்து வாசித்திருப்பார்.

திலீப் குமார் டூ ஏ.ஆர்.ரஹ்மான்

சென்னையில் படித்து வந்த திலீப் குமார் மேற்கத்திய பாரம்பரிய இசையில் டிப்ளமோ பட்டம் பெற்ற நிலையில், 1984-ம் ஆண்டு தனது குடும்பத்தில் இருந்த அனைவருடனும் இந்து மத்தியில் இருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறினார். அவரது தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது, நாகூர் தர்காவுக்கு சென்று பிரார்த்தனை செய்ததால், அவர் உடல்நலம் தேறி சில வருடங்கள் வாழ்ந்தார்.

இதையும் படியுங்கள் : குடும்பமே மதம் மாறிய காரணம்... முதல் 10 வருடங்கள் என்ன ஆனது? மனம் திறந்த ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி

அதன் காரணமாக தந்தை இறந்தவுடன் தங்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாறியதாகவும் ஏ,ஆர்.ரஹ்மானின் சகோதரி குறிப்பிட்டுள்ளார். இஸ்லாமிய மதத்திற்கு மாறிய திலீப் குமார் தனது பெயரை ஏ,ஆர்.ரஹ்மான் (அல்லா ரக்கா ரஹ்மான்) என்று மாற்றிக்கொண்டார்.

AR Rahman Jan 6

ஆரம்ப கட்ட இசை வாய்ப்பு தமிழில் முதல் அறிமுகம்

இசை பயிற்சி பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான், ஆரம்பத்தில் ஆவணப்படங்கள் மற்றும் விளம்பர படங்களுக்கு இசையமைத்து வந்துள்ளார். இதில் ஆல்வின் மற்றும் டைட்டன் கடிகாரங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அமைத்த ஜிங்கிள்ஸ் பலரின் வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பிறகு 1991-ம் ஆண்டு, வைரமுத்து எழுத்தில் அமீர்ஜான் இயக்கத்தில் வெளியான வணக்கம் வாத்தியாரே என்ற படத்தில் தான் ஏ.ஆர்.ரஹ்மான் முதன் முதலான இசையமைத்திருந்தார்.

இதையும் படியுங்கள் : ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்த முதல் தமிழ் படம் ரோஜா இல்லை; அட, இது நிஜமா?

இந்த படத்தின் பாடல்களுக்கு சம்பத் செல்வம் என்பவர் இசையமைத்திருநதாலும், பின்னணி இசை முழு படத்திற்கும் 8 மணி நேரத்தில் ஒரு கீபோர்டு மட்டுமே பயன்படுத்தி அமைத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். கார்த்திக், சரண்யா, ஜெய்சங்கர், ராதா ரவி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருநத இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

AR Rahman Jan 6

அதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படம் தான் ஏ.ஆர்.ரஹ்மான் முழு இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படம் என்று ஆனது. இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், பின்னணி இசையும் பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தது. ரோஜா படத்திற்காக சிறந்த இசைமைப்பாளருக்காக தேசிய விருது, மாநில விருது என 3 விருதுகளை வென்றிருந்தார்.

இந்த படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கும் அனைத்து படங்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைத்து வருகிறார். அதேபோல் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ஆரம்பத்தில் வெளியான ஜென்டில்மேன், காதலன், முதல்வன் ஐ, உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். முன்னணி நடிகர்கள் முன்னணி இயக்குனர்கள் என பல படங்களுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியாவின் பல மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்

கடந்த 2009-ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ஸ்லாம்டாக் மில்லியனர் என்ற படத்திற்காக சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒரிஜினல் இசை என்ற பட்டியலில் 2 ஆஸ்கார் விருதுகளை வென்றிருந்தார். ஒரு படத்திற்காக 2 ஆஸ்கார் விருதுகளை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றிருந்தார். அடுத்து 2011-ம் ஆண்டு வெளியான 127 ஹவர்ஸ் என்ற படத்திற்காக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தார். 6 தேசிய விருதுகள், 15 பிலிம்பேர் விருதுகள், கோல்டன் குலோப் விருதுகள், வென்றுள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2010-ம் ஆண்டு இந்திய அரசின் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.

AR Rahman Jan 6

2014-ம் ஆண்ட பெர்க்லீ இசை கல்லூரியில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இசையமைப்பாளராக, தமிழ் தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், அரபு என பல மொழிகளில் இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், எழுத்தாளர், இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை உள்ளடக்கிய ஒருவர். 2020-ம் ஆண்டு வெளியான அட்கான் சட்கான் என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளரானார்.

2021-ம் ஆண்டு வெளியான 99 சாங்ஸ் என்ற படத்திற்கு கதை திரைக்கதை எழுதி தயாரித்த ரஹ்மான், கடந்த ஆண்டு வெளியான லே மஸ்க் என்ற படத்தை தயாரித்து இயக்கியருந்தார். இந்த படங்கள் அனைத்துமே இசையை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக உருவெடுத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்று (ஜனவரி 6) பிறந்த நாள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

A R Rahman Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment