பாபு:
முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுக்கிறார்கள். ஒன்றல்ல இரண்டல்ல மூன்று பேர் இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.
ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு:
மிஷ்கினின் உதவி இயக்குநர் ப்ரியதர்ஷினி, ஏ.எல்.விஜய் ஆகியோருடன் பாரதிராஜாவும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக்கும் போட்டியில் இருக்கிறார். இவர்களில் யார் முதலில் படத்தை தொடங்குவார்கள்? யாருடைய படம் உண்மைக்கு நெருக்கமாக இருக்கும்? யாரை இவர்கள் ஜெயலலிதாவாக நடிக்க தேர்வுச் செய்யப் போகிறார்கள்?
இந்த கேள்விகளுக்கான பதிலை திரையுலகம், அரசியல் தளம், பொதுமக்கள் என முத்தரப்பும் ஆவலுடன் எதிர்பார்க்கிறது. அதற்குமுன், ஏன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக்க இத்தனை போட்டி என்ற கேள்வியை போட்டுப் பார்த்ததில் சில ஆச்சரியமான தகவல்கள் கிடைத்தன.
தமிழ் சினிமாவில் வீரபாண்டிய கட்டப்பொம்மன், கப்பலோட்டிய தமிழன் என அந்தக்காலத்தில் பல படங்கள் வந்துள்ளன. ஆனால், சமகால அரசியல், திரையுலக பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு என்று பார்த்தால் நமக்கு மணிரத்னத்தின் இருவர் படத்தை மட்டுமே குறிப்பிட முடியும். அதுவும் வாழ்க்கை வரலாறு அல்ல.
தமிழகத்தின் ஒரு காலகட்டத்தை பிரதிபலிக்கும் படைப்பு. எம்ஜிஆர், கருணாநிதி உள்பட யாரையும் பெயர் குறிப்பிடாமல் பட்டும் படாமலும் எடுக்கப்பட்ட திரைப்படம். அந்தளவு மட்டுமே தமிழக அரசியல் இங்கு யாரையும் அனுமதிக்கும்.
பயோபிக்:
கவனித்துப் பார்த்தால் பயோபிக் என்ற ஜானரில் நாம் வீக்காக இருப்பது தெரியும். இந்தநிலையே இந்திய சினிமாவிலும் இருந்தது. மலையாளத்தில் நடிகை ஸ்ரீவித்யாவின் வாழ்க்கை வரலாறை பிரதிபலிக்கும் திரக்கதா முக்கியமான படைப்பு. அதேபோல், முதல் மலையாள சினிமாவை இயக்கிய கே.சி.டேனியலின் வாழ்க்கை வரலாறைச் சொல்லும் செலுலாயிட் முக்கியமான வாழ்க்கை வரலாற்று ஆவணம். பயோபிக் என்றாலே ஆவணப்படம், வசூல்ரீதியாக எதுவும் பெயராது என்ற எண்ணம் அதிக அளவில் வாழ்க்கை வரலாறுகள் சினிமாவாகமல் போனதற்கு காரணமாக அமைந்தது.
இந்த நேரத்தில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட தி டர்ட்டி பிக்சர் இந்திப் படம் பெரும் வசூலுடன் விருதுகளையும் குவித்து, வாழ்க்கை வரலாற்று படங்கள் மீதான கண்ணோட்டத்தை மாற்றியது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ்.டோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் இந்த எண்ணத்தை வலுப்படுத்தியது. அசாருதீன், கபில்தேவ் என்று கிரிக்கெட் வீரர்களின் கதையுடன், மேரி கோம் போன்றவர்களின் கதைகளும் சினிமாவாயின.
வரலாற்று நாயர்கள், அரசியல் பிரமுர்கள், திரையுலக நட்சத்திரங்கள் என தேடித்தேடி படமாக்குகிறார்கள். இந்தியில் சஞ்சய் தத்தின் வாழ்க்கைக்கதையை சொன்ன சஞ்சுவின் பிரமாண்ட வெற்றி, நீங்கள் படமாக்கப்போகும் நபரின் வாழ்க்கை காந்தி போன்று அனைவருக்கும் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதில்லை, சுவாரஸியமாக இருந்தாலே போதும் என்ற சேதியைச் சொன்னது.
தென்னிந்தியாவைப் பொறுத்தவரை தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற சாவித்ரியின் வாழ்க்கைக்கதையான மகாநடி ஒரு முக்கியமான படைப்பு. ஆந்திராவின் முன்னாள் முதல்வர் மறைந்த ஒய்.எஸ்.ராஜசேரரெட்டியின் வாழ்க்கை வரலாறு யாத்ரா என்ற பெயரில் தயாராகி வருகிறது.
சிரஞ்சீவி நடித்துவரும் சைரா நரசிம்ம ரெட்டியும் சுதந்திரப் போராட்ட வீரர் நரசிம்ம ரெட்டியின் கதையே. என்டி ராமராவின் கதை என்டிஆர் என்ற பெயரில் தெலுங்கில் தயாராகிறது. அவரது மகன் பாலகிருஷ்ணாவே என்டிஆர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தெலுங்கு சினிமா ஏறி அடிக்கையில் தமிழ் சினிமா இப்போதுதான் விழித்தெழவே செய்திருக்கிறது. சினிமாவாக அத்தனை சுவாரஸியங்களும் நிறைந்தது ஜெயலலிதாவின் வாழ்க்கைக்கதை. படமாக்கினால் கல்லா நிறையும் என்பது உத்தரவாதம்.
மறு ஜென்மம் எடுக்கும் ஜெயலலிதா !
ஆனால், அவரது வாழ்க்கையை எத்தனைதூரம் நெருங்கிச் சென்று படமாக்க அவரது கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் அனுமதிப்பார்கள்? ஜெயலலிதாவின், கோயிங் ஸ்டெடி போன்ற போல்டான, வெளிப்படையான அணுகுமுறையில் கொஞ்சமேனும் திரைப்படத்தில்வர வாய்ப்பு உண்டா? கேள்விகள் ஆயிரம். அனைத்தையும் தாண்டி ஜெயலலிதாவின் வாழ்க்கைக்கதை திரைப்படமாவது அவசியம். பயோபிக் ஏரியாவிலும் நாம கில்லி என்று காட்ட வேண்டாமா.?