Vikram, Keerthy Suresh & Aishwarya Rajesh Starrer Saamy 2 Movie Review: சாமி 2, பெரும் எதிர்பார்ப்பில் மாஸ் ஆக்ஷன் டைரக்டர் ஹரியும், விக்ரமும் 15 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இணைந்திருக்கும் படம்! அதே களம், அதே நாயகன், அதிரடி வில்லன் பாபிசிம்ஹா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பு பலமடங்கு எகிறும் என்பதை இயக்குநர் உணர்ந்திருக்கிறார். எனிமும் காலமாற்றமும் தற்போது விக்ரமின் சினிமா கிராப் சற்று தொய்வடைந்துள்ள நிலையில் இந்தப்படம் சாமி முதல்பாகம் அளவுக்கு வரவேற்பை பெறுமா என்பது கேள்வியாக தொக்கி நிற்கிறது.
சாமி முதல்பாகம் கதைக்கு தேவைப்படும் அளவான ஆக்ஷன், நளினமான காதல், சென்டிமென்ட், நகைச்சுவை என்று பெரும் வெற்றிக்கான அத்தனை அம்சமும் நிறைந்திருந்தது. அன்றைய நிலையில் ரஜினிக்கு பிறகு மாஸ் ஆக்ஷனை கொடுக்ககூடிய ஒரே ஹீரோ விக்ரம் மட்டும்தான் என்பதை படத்தின் பல சீன்கள் பொட்டில் அடித்தமாதிரி பதிவுசெய்திருந்தது.
Read More: Saamy Square Public Review: சாமி 2, ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு விடை கிடைத்ததா?
ஆனால் சாமி 2-வில் அது மிஸ்ஸிங். விக்ரமின் மனைவியாக வரும் புவனா கதாபாத்திர ஐஸ்வர்யா ராஜேஷ் நல்ல நடிகை என்றாலும் மிளகாய்பொடி, தயிர் சாதம் டயலாக் பேசிய திரிஷா அளவுக்கு இவர் பொருந்தவில்லை. அதே போல் பாபிசிம்ஹாவும் அசால்ட் சேதுவில் ஒரிஜினல்! ஆனால் ரீமேக்கில் பெருமாள் பிச்சையை அதுவும் அவர், ‘அவன் நம்ம ஆளாத்தான்யா இருப்பான்’னு நெல்லை வழக்கில் பேசிய கோட்டாவை தாண்டமுடியவில்லை.
கீர்த்திசுரேஷ் கதாபாத்திரம் மார்க்கெட் வேல்யூவிற்கா? இல்லை, இளமையான நாயகன்னு காட்டவா என்பதையும் பட்டிமன்ற விவாதம் நடத்திதான் நாம் தீர்மானிக்கவேண்டும். சாமி முதல் பாகத்தில் மனோரமா, விவேக், விஜயகுமார் வரைக்கும் நினைவில் நின்றது. இதில் கதாநாயகனே நினைவில் இல்லாததுபோன்ற தோற்றம் இருக்கின்றது .
இதிலும் டெல்லிகணேஷ், சுமித்ரா இருக்கின்றார்கள். ஜான் விஜய் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டிருக்கின்றார்கள். முதல்பாக இசை ஹாரிஸ்ஜெயராஜின், ‘கல்யாணம்தான் கட்டிக்கினு ஓடிப்போலாமா’ சூப்பர் டூப்பர் ஹிட். ‘திருநெல்வேலி அல்வாடா’ செம மாஸ்! ஆனால் ஹாரிஸின் ஒன் தேர்ட் ஹிட்கூட தேவிஸ்ரீபிரசாத் கொடுக்கமுடியவில்லை என்பது உண்மை.
அங்குபிரசாத் ஒளிப்பதிவும், விஜயனின் எடிட்டிங்கும் படத்திற்கு மைனஸை குறைக்கின்றது. ரஜினி சமீபத்தில் ஒரு நல்ல மெஸேஜை சினிமாவுக்கு தனது அனுபவத்தில் சொன்னார். பாட்ஷா 2 பண்ணலாம்னு சிலர் சொன்னபோது, ‘பாஷா ஒரு பாஷாதான் இருக்கனும். என்னதான் நாம நல்லா பண்ணாலும் அது வராது’ என்று. அது அனுபவ வார்த்தைதான்.
இயக்குநர் ஹரி என்றால் திரைக்கதை எக்ஸ்பிரஸ் வேகமல்ல, புல்லட் ட்ரெய்ன் வேகம்! ஆனால் அது புது கதையாக இருக்கும் பட்சத்தில் தான் என்பதை அனுபவ ரீதியாக உணர வேண்டிய தருணம் இது. ரஜினிக்கு மூன்றுமுகம் போல், விக்ரமுக்கு சாமி, சூர்யாவுக்கு சிங்கம் என்று வரலாற்று வெற்றியை கொடுத்த ஹரி, சாமி 2-வை தவிர்த்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது! விக்ரமுக்காக அல்ல, ஹரிக்காக!
ஆம்… ‘எலேய், அந்த ஹரி எங்கலே போனாரு?’ என்கிற கேள்வி திருநெல்வேலி தியேட்டர்களில் ரசிகர்களிடம் இருந்தே எழுகிறது.
திராவிட ஜீவா
(அரசியல் மற்றும் சினிமா விமர்சகராக இயங்கி வருபவர் திராவிட ஜீவா)