Nayanthara's Kolaiyuthir Kaalam Review: சிறு வயது முதல் ஆசிரமத்தில் வளர்ந்த நயன்தாராவால் பேசவும், கேட்கவும் முடியாது. ஆனால், அபாரமாக ஓவியம் வரையக் கூடியவராக நயன் இருக்கிறார். இந்தச் சூழலில், அந்த ஆசிரமத்தின் உரிமையாளரை, அதற்கு முன் ஒருமுறை கூட பார்த்திராத நயன், அச்சு அசலாக வரைந்து வைத்திருக்கிறார். இதனால், லண்டனில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் ஆசிரம உரிமையாளர், நயன்தாராவை வளர்ப்பு மகளாக தத்தெடுத்து கொள்கிறார். ஆசிரமத்தின் உரிமையாளர் உயிரிழக்கும் நிலையில், லண்டனில் இருக்கும் சொத்துக்களை வளர்ப்பு மகள் நயன்தாராவிற்கு எழுதி வைத்துவிடுகிறார்.
லண்டனுக்கு செல்லும் நயன்தாராவிடம், ஆசிரம உரிமையாளரின் உறவினர்களான பூமிகா மற்றும் அவரது கணவர், இது எங்களுக்கு சொந்தமான சொத்து என்று முறையிட்டு சொத்தை அபகரிக்க நினைக்கிறார்கள். இந்நிலையில், மர்ம நபர் ஒருவர் நயன்தாராவை கொலை செய்ய முயற்சி செய்கிறார்.
இறுதியில் அந்த மர்ம நபர் யார்? எதற்காக நயன்தாராவை கொலை செய்ய முயற்சி செய்கிறார்? பூமிகா மற்றும் அவரது கணவரின் எண்ணம் நிறைவேறியதா? இதிலிருந்து நயன்தாரா எப்படி மீண்டார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
மேலும் படிக்க - நயன்தாரா அடித்த ஹாட்ரிக்!!
தன் பங்களிப்பில் எந்தவித குறையும் வைக்காமல் நயன் மிளிர்கிறார். காது கேட்காத ரோலில் ஏற்கனவே அவர் நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததை ரசிகர்கள் பார்த்திருந்தாலும், இப்படத்திலும் அவரது நடிப்பை ரசிக்க முடிகிறது. பூமிகா வில்லத்தனம் செய்திருப்பது நாம் எதிர்பார்க்காத ஒன்று. சமத்துப் பெண் முக அமைப்பு கொண்ட பூமிகா, இதில் ரஃப்னஸ் காட்டி ரசிகர்களை மிரட்டுகிறார்.
ஆனால், படத்தின் மாபெரும் மைன்ஸ் ஸ்க்ரீன் பிளே. என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. த்ரில்லர் படம் என்று சொல்கிறார்கள். ஆனால் அந்த த்ரில் எங்கே இருக்கிறது என சீட்டுக்கு அடியில் ரசிகர்கள் தேடியதை நம்மால் பார்க்க முடிந்தது.
திரில்லர் படங்களில் பெரிதாக லாஜிக் பார்க்கத் தேவையில்லை தான். அதற்காக இப்படியா!!?
ஒட்டுமொத்தத்தில், கோலமாவு கோகிலா ரேஞ்சுக்கு நயன் படத்தை எதிர்பார்த்து சென்றவர்களுக்கு ஏமாற்றமே மிச்சம்.