ரஜினி என் அம்மாவோடு பேசும்போது, ஒரு நாள் நானும் கமல்ஹாசன் மாதிரி பெரிய ஹீரோவா வர முடியுமா எனக் கேட்பார் என்று மறைந்த நடிகை ஸ்ரீதேவி கூறும் பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
70, 80 களில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகையாக இருந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர் ஸ்ரீதேவி. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் படங்களின் ஆஸ்தான ஹீரோயினாக இருந்தவர் ஸ்ரீதேவி. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
இதையும் படியுங்கள்: அழுகாட்சியா வேண்டாம்… அது கமல் நடிப்பு… ரஜினிகாந்த் பற்றி கே.எஸ் ரவிக்குமார் ப்ளாஷ்பேக்
இந்தநிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து நடிகை ஸ்ரீதேவி பேசும் பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிப்பரப்பான நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டப்போது நடிகை ஸ்ரீதேவி, ரஜினி குறித்த மலரும் நினைவுகளை தொகுப்பாளர் பிரகாஷ்ராஜ் உடன் பகிர்ந்துக் கொண்டார்.
அந்த வீடியோவில், ’மூன்று முடிச்சு’ படத்தின்போது, கமல்ஹாசன் ஏற்கனவே பெரிய நடிகராக பிரபலமாகி இருந்தார். நான் புதுமுகம், ரஜினியும் புதுமுகம் தான். கமலஹாசனுக்கு சம்பளம் ரூ.30000, எனக்கு ரூ.5000, ரஜினிக்கு ரூ.2000. ரஜினி என் அம்மாவோடு ஒரு மகன் போன்று நெருக்கமாக பழகக் கூடியவர். ரஜினி என் அம்மாவோடு பேசும்போது, ஒரு நாள் நானும் கமல்ஹாசன் மாதிரி பெரிய ஹீரோவா, பெரிய ஸ்டாராக வர முடியுமா எனக் கேட்பார். என் அம்மாவும் நிச்சயம் வர முடியும்னு சொன்னார்.
ரஜினி இனிமையாக பழகக் கூடியவர், நல்ல மனிதர், பிறருக்கு உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணம் படைத்தவர். இன்னொருத்தர் கஷ்டத்தில் இருந்தால் அவருக்கு பார்க்க பிடிக்காது. எல்லோரும் சந்தோசமாக இருக்கனும்னு நினைப்பவர். மேலும் மிகவும் திறமைசாலி.
சூட்டிங்கின்போது ரஜினி திடீர்னு காணாமல் போயிடுவார். ஷாட் ரெடியான நிலையில், எல்லாரும் அவரைத் தேடுவோம். அப்ப பாலசந்தர் சார் சொல்லுவாரு, எங்காவது கண்ணாடி இருந்தா பாரு அங்க இருப்பான் அப்படினு சொல்லுவாரு, என்று கூறி சிரிக்கிறார் ஸ்ரீதேவி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil