2022 ஆம் ஆண்டின் கடைசி வெள்ளிக்கிழமையில் தமிழ் சினிமாவில் இருந்து 4 முக்கிய படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நான்கு படங்களும் பெண்களை மையப்படுத்திய படங்கள் என்பது கூடுதல் சிறப்பு. இந்த படங்கள் பற்றிய ஒரு சிறப்பு பார்வை.
இதையும் படியுங்கள்: ‘கபூராக இருப்பதைவிட ஐயப்பனாக இருப்பதை வசதியாக உணர்கிறேன்’: தென் இந்திய பாசத்தை வெளிப்படுத்திய ஸ்ரீதேவி மகள்
ராங்கி
சமீபகாலமாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் கவனம் செலுத்தி வரும், தமிழ் சினிமா எவர்கீரின் நாயகி த்ரிஷா நடித்துள்ள திரைப்படம் ராங்கி. த்ரிஷாவுக்கு இதுவரை ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்கள் பெரிய வெற்றியைத் தராத நிலையில், இந்த த்ரில்லர் படம் வெற்றியைத் தருமா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும். எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய எம். சரவணன் ராங்கி படத்தை இயக்கியுள்ளதால், இந்தப் படம் வெற்றி பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
செம்பி
நகைச்சுவை நடிகையான கோவை சரளா நீண்ட நாட்களுக்குப் பிறகு சீரியஸான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் செம்பி. மலைவாழ் மக்கள் வாழ்க்கையை ஒட்டிய டிராவல் டைப் திரைப்படம் இந்த செம்பி. மைனா, கும்கி போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த பிரபு சாலமோன் இயக்கியுள்ள படம் என்பதால், மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குக் வித் கோமாளி புகழ் அஸ்வினும் இந்தப் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவர் ஜமுனா
எதார்த்த கதாப்பாத்திரங்களின் நாயகியான ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் டிரைவர் ஜமுனா. ஐஸ்வர்யா ராஜேஷ் டாக்ஸி டிரைவராக நடித்துள்ள இந்தப் படத்தை கின்ஸ்லின் இயக்கியுள்ளார். இவர் வத்திக்குச்சி திரைப்படத்தை இயக்கியவர். சாலைப் பயணத்தை அடிப்படையாகக் கொண்ட க்ரைம் த்ரில்லர் படத்தில் வைபவ் மற்றும் ஆடுகளம் நரேன் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஓ மை கோஸ்ட்
பாலிவுட் நடிகை சன்னி லியோன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நேரடி தமிழ் திரைப்படம் ஓ மை கோஸ்ட். பேய் படமான இதில் யோகிபாபு, தர்ஷா குப்தா, சதீஷ், ஜிபி முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குனர் யுவன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
கதாநாயகிகளை முக்கிய கதாப்பாத்திரங்களாக கொண்ட இந்த 4 திரைப்படங்களும் ரசிகர்களிடம் எந்த அளவிற்கு வரவேற்பை பெறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதுதவிர அருவா சண்ட, சகுந்தலாவின் காதலன், கடைசி காதல் கதை, காலேஜ் ரோடு ஆகிய நான்கு சிறு பட்ஜெட் படங்களும் திரைக்கு வர உள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.