Rajinikanth – Mammootty: நட்புக்கு இலக்கணமாக தமிழ் சினிமாவில், ’தளபதி’ படத்தை கூறலாம். இயக்குநர் மணிரத்னம் இயக்கிய அந்த படத்தில் ரஜினி-மம்மூட்டி நட்பை மையமாக வைத்து தான் மொத்த கதையும் இருக்கும். தேவா – சூர்யாவின் கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் எவர் கிரீனான ஒன்று.
இளையராஜா இசையமைத்திருந்த அந்தப் படத்தில் ‘காட்டு குயிலு’ என்ற பாடலை ரஜினி-மம்மூட்டி இருவரும் மாற்றி மாற்றி பாடுவது போல உருவாக்கப்பட்டிருக்கும். இந்தப் பாடல் இன்று வரை ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. இந்நிலையில் ரஜினி-மம்மூட்டிக்கு பதிலாக இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இருவரையும் வைத்து அந்தப் பாடல் எடிட் செய்யப்பட்டுள்ளது. ரஜினியாக ட்ரம்பும், மம்மூட்டியாக மோடியும் இந்தப் பாடலை பாடுவது போல உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த வீடியோவை பிரபல தெலுங்கு இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் பகிர்ந்ததோடு, இந்த வீடியோவை எடிட் செய்தவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பாடல் சிறப்பாக இருக்கிறது. தமிழில் இருக்கும் பாடலை மொழிபெயர்த்து சொல்லுங்கள் என பாலிவுட் நடிகை ரவீனா டேன்டன் கூட கேட்டிருந்தார்.
சர்ச்சைகளுக்கு பெயர் போன இயக்குனர் ராம் கோபால் வர்மா சமூக வலைதளங்களில் பிஸியானவர். ட்விட்டரில் தொடர்ந்து பல சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வரும் அவர் பல்வேறு விஷயங்கள் பற்றி கருத்து தெரிவித்து வருகிறார். சமீபத்தில் தான் பேசியதை டிக்டாக் செய்து ஒரு பெண் வீடியோ வெளியிட்டிருந்ததை பார்த்த அவர், அந்தப் பெண்ணுக்கு நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி ஆச்சர்யம் ஏற்படுத்தி இருந்தார்.