நடிகர் மயில்சாமியின் கடைசி ஆசையை நிச்சயம் நான் நிறைவேற்றுவேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்த மயில்சாமி மாரடைப்பு காரணமாக பிப்ரவரி 19 ஆம் காலை மரணமடைந்தார். சென்னை விருகம்பாக்கம் வீட்டில் இருந்த மயில்சாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இவரது மறைவு திரைத்துறையினர் உள்ளிட்ட பல தரப்பட்டவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்கள்: ’இந்த காலத்துல இப்படி ஒரு நல்லவனா? மயில்சாமி குறித்து மறைந்த விவேக் பேசிய வீடியோ
இதனையடுத்து நேற்று முதல் பல்வேறு திரைப்பிரபலங்களும் மயில்சாமி உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இந்தநிலையில், மயில்சாமி உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ”மயில்சாமி என்னுடைய நெடுங்கால நண்பர். 23, 24 வயசுலேயே எனக்கு தெரியும். மிமிக்ரி ஆர்டிஸ்டா இருந்து அதன் பிறகு சினிமாவில் நகைச்சுவை நடிகர் ஆனவர். தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர், மேலும் சிவன் பக்தர். நாங்கள் இருவரும் அடிக்கடி சந்திப்போம். ஆனால் சினிமா பற்றி அதிகம் பேசமாட்டார். நிறைய படங்களில் இருவரும் சேர்ந்து நடிக்கல. அது ஏன்னு புரியல.
ஒவ்வொரு திருவண்ணாமலை கார்த்திகை தீபத்துக்கு அங்க போயிருவாரு. அங்க இருக்க கூட்டத்தைப் பார்த்து சந்தோஷப்பட்டு போன் பண்ணுவாரு. கடந்த கார்த்திகை தீபத்துக்கு போன் பண்ணாரு. சில நாட்களுக்கு முன்னர் 2-3 தடவை போன் பண்ணினார். நான் ஷூட்டிங்கில் இருந்ததால போன் அட்டெண்ட் பண்ணல. அடுத்ததாக அவரை சந்திக்கும் போது மன்னிப்பு கேட்க நினைத்தேன். அதை அப்படியே மறந்து போய்ட்டேன்.
விவேக் மற்றும் மயில்சாமி ஆகிய இரு நகைச்சுவை நடிகர்களின் மரணம் சினிமா துறை மற்றும் சமூகத்திற்கு பேரிழப்பாகும். இருவரும் சிந்தனைவாதிகள். சிவராத்திரி அன்னைக்கு மயில்சாமி இறந்தது, தீவிர பக்தனை சிவன் அழைத்துக் கொண்டார் என சொல்லலாம். இது தற்செயல் அல்ல. ஆண்டவனின் கணக்கு. எதிர்காலத்தில் அவரது வாரிசுகள் நல்லபடியாக இருக்க வேண்டுகிறேன். கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் எனது கையால் பாலாபிஷேகம் செய்ய வேண்டும் என்ற மயில்சாமியின் கடைசி ஆசையை கேள்விப்பட்டேன். டிரம்ஸ் சிவமணியிடம் அதைப் பற்றி பேசினேன். அதனை நான் கண்டிப்பாக நிறைவேத்துவேன்” என ரஜினிகாந்த் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.